இந்த பதிவில் “சமுதாய வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.
இன்றைய இளைய சமுதாயம், சமுதாய வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.
சமுதாய வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமுதாய வளர்ச்சியின் முக்கியத்துவம்
- சமுதாய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு
- சமுதாய வளர்ச்சியும் பள்ளிகளும்
- சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதன் கூடி வாழ்ந்த பின்பு தான் சமுதாயமானது. இன்று பல்வேறுபட்ட வளர்ச்சிகளை அடைந்து வருகின்றது. ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான பங்களிப்பை வழங்குவது அவசியம் ஆகின்றது.
சமுதாய உணர்வுடன் செயற்படும்போது நாடும், வீடும் நலம் பெறும். ஒரு நாட்டின் வளர்ச்சியில் சமுதாயத்தின் வளர்ச்சியும் பங்களிப்புச் செய்கின்றது. சமுதாய வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சமுதாய வளர்ச்சியின் முக்கியத்துவம்
ஒரு நாடு வளம் பெறுவதற்கு சமுதாயம் வளர்ச்சி என்பது மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
மனிதாபிமான உறவுகள், நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான சாத்தியம் நிலவும் ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு சமுதாய வளர்ச்சி என்பது மிகவும் அவசியமாக உள்ளது.
வளர்ச்சியடைந்த சமுதாயத்தின் மூலமே நாட்டின் தொழிற் துறைகளை முன்னேற்றத்துடன் பொருளாதாரத்தையும் வளம் பெறச் செய்ய முடியும்.
சமுதாய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு
ஒரு நாட்டின் வளர்ச்சியின் முதுகெலும்பாக இளைய சமுதாயத்தின் பங்களிப்பு முக்கியம் பெறுகின்றது. இன்றைய இளைஞர்களுக்கு சமுதாய அக்கறை என்பது அதிகமாகவே உள்ளது.
படிக்கும் காலங்களில் சமூக சேவை செய்வதில் அதிகம் ஆர்வம் கொள்கின்றனர். இளைய சமுதாயம் மத்தியில் ஜாதி, மத பேதமின்றி அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகமாகவே உள்ளது.
ஒவ்வொரு இளைஞர்களும் சமூகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சமூக வளர்ச்சிக்காக பங்களிப்புச் செய்தல் அவசியமாகும்.
சமுதாய வளர்ச்சியும் பள்ளிகளும்
சமூகப் பிராணியான மனிதன் தனது சமுதாய வாழ்க்கைக்கான பயிற்சியை பள்ளிகளிலிருந்தே பெறுகின்றான். பள்ளி வாழ்க்கையே அவனது சமுதாய வாழ்க்கைக்கான ஆரம்பமாகக் கூட அமைகின்றது.
வகுப்பறையில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் மூலம் ஒவ்வொரு மாணவனும் சமுதாயத்திற்கு ஏற்ற உடல், உள, சமூகப் பண்பாட்டு ஆளுமை என சகல வளர்ச்சிகளுடன் கூடிய பூரண மனிதனாக வாழக் கூடிய ஆற்றலை பெற்றுக் கொள்கின்றான்.
சமுதாயத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள்
பெண்களுக்கு சம உரிமையும் மதிப்பும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திர சீர்திருத்தச் சமுதாயத்தைக் காணமுடியும். கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்குச் சிறந்தவழி ஆகும்.
பிறவழிகளில் பெறமுடியாத முன்னேற்றத்தைக் கல்வியால் பெறமுடியும், திறமை உள்ளவர்களை ஊக்குவிப்பதோடு அவர்களுக்கான வாய்ப்புக்களையும் வழங்க வேண்டும்.
பெண்கள் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும், குழந்தைகளை சிறு வயதிலிருந்தே மனிதநேயம் உள்ளவர்களாகவும், சமூகத் தொண்டுகள் ஆற்றக்கூடிய மனப்பான்மை உடையவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்.
முடிவுரை
மனிதன் தனிமையாக வாழ்வதை விட சமுதாயமாக ஒன்றிணைவதன் மூலம் அதிக பலத்தைப் பெற்றுக் கொள்கின்றான். சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் களையப்பட வேண்டும்.
இன்றைய இளைய சமுதாயம், சமுதாய வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். சமுதாயம் வளர்ச்சி அடையும் போது தான் நாட்டின் முழுமையான வளர்ச்சியை காணமுடியும்.
எனவே சமுதாய வளர்ச்சிக்கு நம்மாலான பங்களிப்பை செய்வோம். நலன்மிக்க சமதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
You May Also Like : |
---|
விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுரை |
மண் வளம் காப்போம் கட்டுரை |