சித்திரை புத்தாண்டு வரலாறு

tamil puthandu history in tamil

சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் சித்திரைப் புத்தாண்டும் ஒன்றாக காணப்படுகிறது. வருடந்தோறும் தமிழ், சிங்கள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சித்திரை 1ஆம் நாள் மத்திய கோட்டிலிருந்து வடதிசையை நோக்கி செல்லும் சூரியன் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தை கடந்து செல்லும் தினமாகும். தமிழ் வருடங்கள் பிரபவ தொடக்கம் பரிதாபி வரை அறுபது (60) ஆகும்.

பிறக்கின்ற ஒவ்வொரு ஆண்டையும் அதற்குரிய பெயரால் அழைத்து, ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவது சைவ மக்களின் வழக்கம். புத்தாண்டுக்கு முன்னுள்ள நாட்களில் வீடு, கோயில் என்பவற்றைக் கழுவுவர். அவற்றிற்கு வெள்ளையடித்தல் நிறம் பூசுதல் என்பவற்றில் ஈடுபடுவர்.

சைவ சமயத்தை சேர்ந்தவர்களை போன்று பௌத்த சமயத்தவர்களும் புத்தாண்டு தினத்தை சம்பிரதாய பூர்வமாக கொண்டாடி வருகின்றனர்.

எமக்கிடையிலான அன்னியோன்யமான உறவுகளையும், ஐக்கியத்தையும், தேசிய ஒற்றுமையையும் வளர்ப்பதில் புத்தாண்டு நிகழ்வுகள் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. சைவ சமயத்தவர்கள் பிறரையும், பிற சமயத்தவர்களையும் மதிப்பதில் மகிழ்ச்சி கொள்வர்.

மருத்துநீர் :-

புத்தாண்டு தினத்தில் வரும் விஷூ புண்ணிய காலத்தில் சைவ சமயத்தவர்கள் தமது பாவங்கள், தோஷங்கள் நீங்க வேண்டி மருத்துநீரை தலையில் தேய்த்து நீராடுவர்.

மருத்துநீர் என்பது பல வகையான மலர்கள், இலைகள், தழைகள், அறுகு, மஞ்சள், மிளகு, திப்பிலி, பால் முதலியவற்றை சேர்த்து அவிக்கின்ற நீராகும் (பஞ்சாங்கத்தில் அந்தந்த வருடங்களுக்கு மருத்துநீருக்கு சேர்க்கவேண்டிய மூலிகைகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும்). மருத்து நீரானது ஆலயங்களிலும், அர்ச்சகர் வீடுகளில் தயாரிக்கப்படும்.

நிறைகுடம், மடை வைத்தல்:-

புத்தாண்டு பொங்கலுக்கு முன்னாதாக மருத்துநீர் தேய்த்து நீராடிப் புத்தாடை அணிவர். சுவாமி அறையில் தலை வாழை இலையில் அரிசி அல்லது நெல் பரவி நிறைகுடம் வைப்பர். அதன் இரு பக்கத்திலும் குத்துவிளக்கை ஏற்றுவர். நிறைகுடத்தின் முன் மஞ்சளில் அல்லது சாணத்தில் அருகம்புல் குத்தி பிள்ளையார் வைப்பர்.

அவற்றுடன் வெற்றிலை, பாக்கு, பூக்கள் என்பவற்றையும் கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி முதலான பூசைக்குரிய வாசனைப் பொருட்களையும் அத்துடன் சுத்தப்படுத்திய வாழைப்பழம், மாம்பழம், தோடம்பழம், விளாம்பழம், மாதுளம்பழம் முதலான பழங்களையும் வைப்பர்.

அலங்கார தோரணம் கட்டுதல்:-

புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக பொங்கல் வைக்கும் இடத்தை கூட்டி சுத்தம் செய்வர். வீட்டு முற்றத்தில் மாவிலை, தோரணம் கட்டி அலங்கரிப்பர்.

பொங்கல்:-

வீடுகளில் புத்தாண்டு பொங்கல், சூரிய உதயத்தை ஒட்டியே நடைபெறும். புத்தாண்டு பிறந்ததும் குடும்பத்தலைவன் பொங்கல் பொங்குவார். புதுப்பொங்கல் பானையை கழுவி, திருநீற்றால் குறியீட்டு, பானையின் கழுத்தில் கயிறு அல்லது ஈரமான வாழைநார் கட்டுவர்.

அதனை மாவிலை, பூமாலை, பூ முதலியவற்றால் அலங்கரிப்பர். அதன்பின் பானையை புத்தடுப்பில் ஏற்றுவர். பால் கொதித்து வர இரு கைகளாலும் கழுவிய அரிசியை எடுத்து, பொங்கல் பானையை மூன்று முறை வலம் இடமாக சுற்றி, கடவுளைப் பிரார்த்தித்து பானையில் இடுவர். அரிசி வேகும் போது பொருட்களையும் இனிய பொங்கலை பொங்குவர்.

பொங்கல் பொங்கி முடிந்ததும் குடும்பத் தலைவர் கிழக்கு முகமாக நின்று பொங்கல் பானையை இறக்கி வைப்பர். பின்னர், பொங்கலை தலைவாழை இலையில் படைப்பர்.

அவற்றுடன் பழவகைகளையும், மோதகம், கொழுக்கட்டை முதலியவற்றையும் வைத்து எல்லோரும் சேர்ந்து பிள்ளையார் முதலான தெய்வங்களையும், சூரியனையும் பஞ்சபுராணம் ஓதி, தூப தீபம் காட்டி வழிபடுவர். பின்னர் பொங்கலை பகிர்ந்து உண்டு மகிழ்வர்.

ஆலய வழிபாடு:-

வீட்டில் புதுவருடப் பிறப்பை கொண்டாடிய மக்கள் பூஜை பொருட்களுடன் ஆலயத்திற்கு சென்று, இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வர்.

ஆசி பெறுதல்:-

மூத்தோர் அதுவும் பெரியோர் அது ஆசீர்வாதத்தால் தாம் சந்தோசமாக வாழலாம். அதனால் புத்தாண்டு தினத்தில் வயதில் மூத்தவரை வணங்கி, அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

கைவிசேடம்:-

பஞ்சாங்கம் குறிப்பிடும் சுப தின, சுப நேரத்தில் கைவிசேடம் வழங்குவர். குடும்பத்தில் உள்ள மூத்தோர், வெற்றிலையில் நெல், மஞ்சள், பாக்கு, பூ, பணம் என்பன வைத்து, வீட்டிலுள்ளவர்களுக்கும், ஏனையோருக்கும் கொடுப்பதை கைவிசேடம் வழங்குதல் என்பர்.

சுபநேரத்தில் கைவிசேடம் பெறுவதன் மூலம் அவ்வாண்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது சைவ மக்களின் நம்பிக்கையாகும்.

சுபநேரச் செயற்பாடுகள்:-

புத்தாண்டில் வரும் சுபநேரத்தில் ஏர் மங்கலம், புதிர் எடுத்தல், விதைத்தல், வித்தியாரம்பம் முதலான கருமங்களை தொடங்கும் வழக்கம் சைவ மக்களிடையே உள்ளது.

புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கத்தில் ஆண்டு பயனை வாசிப்பதும், வாசிக்க கேட்பதும், சுபநேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது இப்பண்டிகையின் வழக்காறுகளாக காணப்படுகிறது.

விளையாட்டு:-

புதுவருட கொண்டாட்டம் தொடர்ந்து சில நாட்களுக்கு நடைபெறும். ஊஞ்சல், போர்த்தேங்காய் அடித்தல் நிகழ்வுகளும் மக்களை மகிழ்ச்சி படுத்துகின்றன.

புத்தாண்டு வரலாறு

சூரியனை அடிப்படையாக வைத்து தமிழர் தங்களின் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழர் வருடத்தின் தொடக்கம் ஆண்டு என்றும், மீன ராசியில் இருந்து வெளியேறுவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது.

பெரும்பாலும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தான் வருகிறது.

தமிழ் இலக்கியமான நெடுநல்வாடை, 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி போன்ற நூல்கள் சித்திரை மாதம் முதலாம் நாள் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது எனக் கூறுகிறது.

அத்துடன் மலைபடுகடாம் என்ற நூலில், “தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு “கணிவேங்கை நன்னாளே நாடி மலர்ந்தலால்” என்றும் கூறுகிறது.

இவற்றிலிருந்து ஆரம்ப காலங்களில் இருந்தே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது புலனாகிறது.

புத்தாண்டின் பயன்

மக்கள், அயலவர், உறவினர் ஆகியோருடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடுவதன் மூலமும், அவர்களுடன் உணவைப் பகிர்ந்துண்ணல், அவர்களது வீட்டுக்குச் செல்லல் என்பவற்றின் மூலமும் பொது வைபவங்களில் கலந்து கொள்வதன் மூலமும் அன்பு, கருணை, நன்றியுணர்வு, மன்னிப்பு, சகோதரத்துவம், கடவுள் வழிபாடு முதலான பண்பாட்டுக் கூறுகள் வளர்க்கப்படுகின்றன.

உறவுகள் சேர்வதனால் பகைமை மன்னிக்கப்பட்டு உறவுகள் வலுப்பெறுகின்றன. மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. புத்தாடை அணிதல், வாழ்த்துக் கூறுதல், பகிர்ந்துண்ணல், தான தருமம் செய்தல் முதலானவற்றால் மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படுகின்றது.

You May Also Like:
மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு