இந்த பதிவில் “நீரின்றி அமையாது உலகு கட்டுரை” பதிவை காணலாம்.
பல சிறப்பைக் கொண்ட நீரானது மனிதர்களிற்கும் ஏனைய உயரினங்களிற்கும் உறுதுணையாக அமைகின்றது.
நீரின்றி அமையாது உலகு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நீரின் சிறப்பு
- நீரின் பயன்பாடுகள்
- நீர் மாசுபடல்
- நீர்ப் பாதுகாப்பு
- முடிவுரை
முன்னுரை
இந்த பூலோகம் நீரை மையமாக வைத்தே தனது இயக்கத்தை மேற்கொள்கின்றது. அனைத்திற்கும் இயக்க சக்தியாக நீரே காணப்படுகின்றது. இந்த உலகில் கிட்டத்தட்ட 75% பரப்பானது நீரினாலே சூழப்பட்டுள்ளது.
காடுகளின் நிலைத்திருத்தலிற்கும் அனைத்து ஜீவராசிகளின் வாழ்தகமைக்கும் நீரே அடிப்படையானது.
இன்று அருகிவரும் வளங்களில் மிக முக்கியமாக நீர் காணப்படுகின்றது. எனவே நீரின் மூலங்களையும் நீர்ப் பாதுகாப்பு பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
நீரின் சிறப்பு
நீரின் சிறப்புக்களை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. வானின்று துளி துளியாக மழையாக பொழியும் நீரானது ஒன்று சேர்ந்து நிலமெல்லாம் பாய்ந்து உருண்டோடி குளங்கள், ஆறுகள், கடல்கள் என சேர்கின்றது. அந்த நீரின் ஒரு பகுதியை நிலமானது தன்னகத்தே உறுஞ்சி வைத்துக் கொள்கின்றது.
இத்தகைய சிறப்பைக் கொண்ட நீரானது மனிதர்களிற்கும் ஏனைய உயரினங்களிற்கும் உறுதுணையாக அமைகின்றது. இதனையே “நீரின்றி அமையாது உலகு” என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
நீரின் பயன்பாடுகள்
நீரானது பல்வேறு தேவைகளிற்காகப் பயன்படுகின்றது. மனித உடலில் இயக்கத்திற்கு நீர் அத்தியாவசியமானது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டளவு நீரை அருந்தினால் மட்டுமே மனிதரால் உயிர் வாழ முடியும்.
தாவரங்களின் உணவு தயாரிப்பு செய்முறைக்கு நீர் மிகவும் அவசியமானது. உயிரினங்கள் தாகத்தை தணிப்பதற்கும் உடலின் சூட்டை குறைப்பதற்கும் நீர் உதவி புரிகின்றது.
நீர் மின் வலுசக்தியை உருவாக்கி மின்சாரத்தை பெற்றுத் தருவதில் நீரின் பங்கு அளப்பரியது.
இதனைத் தவிர நீரானது குளிர்பான மற்றும் ஏனைய கைத்தொழில் தயாரிப்புக்களை மேற்கொள்ளவும் அவசியமானது.
நீர் மாசுபடல்
நீரானது பல்வேறு வகையில் மாசடைதலிற்கு உட்படுகின்றது. மனித நடவடிக்கைகளாலும், ஏனைய இயற்கை அசம்பாவிதங்களாலும் நீர் அசுத்தமடைகின்றது.
அதிகரித்த கைத்தொழில் மயமாக்கலினால் தொழிற்சாலைகளின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரானது ஆறுகளிலும் கடல்களிலும் கொட்டப்படுவதனால் நீர் மாசடைகின்றது.
ஆறுகளும் கடல்களும் இரசாயனமாகும் போது அங்கு வாழும் ஆயிரக்கணக்கான உயிர்கள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன. தற்போது வளர்ச்சியடைந்த பல நாடுகள் அணு ஆயுதப் பரிசோதனைகளை நீர்நிலைகளில் நடத்துவதாலும் அவை மாசடைகின்றன.
எண்ணைக்கப்பல்களில் ஏற்படும் ஒழுக்குகள் மற்றும் இராசயனப் பசளைகளை அதிமாக பயன்படுத்துவதாலும் நீர் ஆதாரங்கள் மாசடைகின்றன.
நீர் பாதுகாப்பு
அரிதான வளமாக காணப்படும் நீர் வளத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அளிப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். நீரை பாதுகாப்பதற்கான முதல் வழி அதனை சிக்கனமாகப் பயன்படுத்துதலாகும்.
நீர்க்குழாய்களை மூடாமல் நீரை விரையப்படுத்துவதோ, தேவைக்கு அதிகமாக நீரை நுகர்வதோ தவிர்க்கப்படல் வேண்டும்.
நீர் நிலைகளிற்கு அருகில் அமைக்கப்படும் தொழிற்சாலைகள் தொடர்பில் அரசு அதிக கவனம் எடுப்பதோடு, நீர் நிலைகளில் கழிவுகளை இடும் தொழிற்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீர்ப் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும் அவசியமாகும்.
முடிவுரை
நிலத்தின் அடியிலுள்ள நீரை உறிஞ்சாது வானத்திலிருந்து விழும் நீர்த்துளிகளை மழை நீர் சேமிப்புக்கூடங்களை அமைத்து சேமித்து அவற்றை நம்முடைய தேவைகளிற்கு பயன்படுத்தும் போது நீரானது நம்முடைய எதிர்கால சந்ததியினரிற்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
பொக்கிசமாக காணப்படும் நீர்வளத்தை பாதுகாத்து மகிழ்வாக வாழ்வோமாக.!!
You May Also Like : |
---|
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை |
மழை நீர் உயிர் நீர் கட்டுரை |