முற்போக்கு சிந்தனைகள் பலவற்றை மக்கள் மனதில் விதைத்து சென்ற மகாகவி பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ் பதிவை இங்கு காணலாம்.
பல மொழிகளில் புலமை பெற்றிருந்த பாரதி தமிழ்மொழி மீது அதீத காதலும் அதீத பற்றும் கொண்டிருந்தார். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பிற்போக்கு எண்ணங்களை களைய பெரும் பணி ஆற்றியுள்ளார்.
பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- பாரதியாரின் பிறப்பு
- இலக்கியப் பணி
- அரசியல் பணி
- பாரதியின் இறப்பு
- முடிவுரை
முன்னுரை
அன்போடும்⸴ பணிவோடும்⸴ பகுக்கப்பட்ட பட்டறிவோடும் திகழும் பெண்ணியம் போற்றும் பாரதமும் இமயம் வரை புகழ் தொட்ட பாரதமும் இதமாகும் இத்தகைய பண்பினையும்⸴ அன்பினையும் பகுத்தறிவையும் வளரச்செய்து “பாட்டுத் திறத்தாலே இவ்வுலகத்தைப் பாலித்திட வேண்டும்ˮ என்று உறுதியுடன் பாடிய பாரதியார் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பாரதியாரின் பிறப்பு
சின்னச்சாமி ஐயருக்கும்⸴ லட்சுமி அம்மாளுக்கும் பிறந்த மகன்தான் பாரதியார் ஆவார். இவர் டிசம்பர் 11ஆம் திகதி 1882ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம் ஆகும். இவரது ஐந்து வயதிலேயே தாயார் இறந்துவிட்டார். இதனால் பாரதியார் அவரின் பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
இலக்கியப் பணி
பாரதியார் தன் தாய்மொழியான தமிழ்மொழி மீது அளவுகடந்த அன்பு கொண்டவர் ஆவார். பல மொழிப் புலமை பெற்ற பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது தெங்கும் காணோம்ˮ எனப் புனைந்தார்.
நான்கு ஆண்டுகள் காசியில் இருந்து தமிழகம் திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞர் ஆகினார்.
“வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்ˮ போன்ற அழகிய தமிழ் கவிதைகள் பலவற்றிற்கு சொந்தக்காரரான பாரதியார் சமஸ்கிருதம்⸴ வங்காளம்⸴ இந்தி⸴ பிரான்சியம்⸴ ஆங்கிலம் எனப் பல மொழிகளில் தனிப்புலமை பெற்றவர் ஆவார்.
இம் மொழிகளிலுள்ள சிறப்பு மிக்கப் படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தார். பாரதியின் எழுத்துக்கள் முதலில் 1903ஆம் ஆண்டு அச்சடித்து வெளியானது. மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
அரசியல் பணி
பாரதி தன்னுடைய சுதந்திர தாகத்தைத் தணிக்க 1905 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் இவர் தேசிய கவியாகப் போற்றப்பட்டார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் போன்றோருடன் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. 1907ஆம் ஆண்டில் “இந்தியாˮ என்னும் வார ஏட்டையும் “பாலபாரதம்ˮ என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.
பாரதியார் “இந்தியாˮ என்னும் பத்திரிகையை விடுதலைக்காகப் பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில் பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொண்டு எழச் செய்தது.
பாரதியின் இறப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில் யானைக்கு மதம் பிடித்து யானை தாக்கியதில் உடல் நலிவுற்று 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி பாரதியாரின் 39 ஆவது வயதில் காலமானார்.
முடிவுரை
பெண் விடுதலையிலும்⸴ சமூக சீர்திருத்தங்களிலும்⸴ அரசியல் கொள்கைகளிலும் பாரதியார் மிக முற்போக்கான எண்ணங்கள் கொண்டிருந்தார். அதனால்தான் அவரை அனைவரும் மகாகவி என்று போற்றுகிறார்கள்.
இவர் மறைந்தாலும் பாரதியின் கவிதைகளும்⸴ பாடல்களும் நம் மனதை விட்டு என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளன.