இந்த பதிவில் “விலங்குகளின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.
மனிதர்களின் பேராசை, பெருகி வரும் மக்கள் தொகை, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் விலங்குகள் அழிந்து வருகின்றன.
விலங்குகளின் பயன்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலக விலங்குகள் தினம்
- விலங்குகளால் கிடைக்கும் நன்மைகள்
- விலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் கெடுதல்கள்
- விலங்களை நேசிப்போம்
- முடிவுரை
முன்னுரை
பூமி அனைத்து உயிர்களுக்குமானது. இப்பூமியில் விலங்குகள் மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது.
இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழி நடத்துகிறது.
உலகில் பல வித விலங்குகள் உள்ளன. இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உலக விலங்குகள் தினம்
உலகில் முதன் முதலாக 1931-ம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில்தான் வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இன்று உலக அளவில் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி அவர்கள் விலங்குகள் மீது அன்பு கொண்டவராவார். இவர் விலங்குகளைக் காப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்தார்.
இதன் காரணமாகவே அவரது நினைவு நாள், உலக விலங்குகள் தினமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
விலங்குகளால் கிடைக்கும் நன்மைகள்
விலங்குகள் மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன, விலங்குகளே மனித உணவுத் தேவையைப் பெரும்பாலும் பூர்த்தி செய்கின்றன.
குறிப்பாக இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை விலங்குகள் மனிதனுக்கு வழங்குகின்றன. தாய் பால் இல்லாத குழந்தைகள் வளர பசுவின் பால் உதவுகின்றது.
வீட்டுக்கு காவலுக்கு நாய் போன்ற விலங்குகள் உதவுகின்றன.
அழகுக்காகவும், செல்லப்பிராணியாகவும் விலங்குகள் வளர்க்கப்படுகின்றன.
விலங்குகளின் கழிவுகள் இயற்கை உரமாகப் பயன்படுகின்றன, விலங்குகளின் தோல் உடைகளுக்காகப் பயன்படுகின்றன.
விலங்குகளுக்கு ஏற்படுத்தப்படும் கெடுதல்கள்
மனிதனால் விலங்குகளுக்குப் பெரிதும் கெடுதல்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றமை வருத்தத்திற்குரியதாகும்.
வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளை மனிதன் கட்டிவைத்து துன்புறுத்துகிறான், வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் உரிய வகையில் பராமரிக்காமலும், மதிக்காமலும் துன்புறுத்தப்படுவதுடன் காயப்படுத்தப்படுகின்றன.
காட்டு விலங்கு மனித சுயநலத்துக்காக வேட்டையாடப்படுகின்றன, தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு வகையான விலங்குகள் அழியும் நிலையில் உள்ளன. விலங்குகள் துன்புறுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
விலங்களை நேசிப்போம்
விலங்குகள் மனிதனுக்கு பலவகையிலும் பயன்களை வழங்குகின்றன. செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும், ஆதரவற்று திரியும் விலங்குகள் பராமரிப்பிலும் அனைவரும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும்.
நம் முன்னோர்கள் காடுகளில் விலங்குகள் தண்ணீர் குடிக்க தொட்டிகள் அமைத்தல் அவற்றுக்கு முதுகு அரித்தால் சொரிந்து கொள்ள, தினவு கல் நடுதல் போன்றவை செய்தனர். இது அன்பின் உச்சம் எனலாம்.
எனவே சுயநலத்தை தூக்கி எறிந்து விட்டு விலங்குகளிடத்திலும் அன்பைப் பகிர்வோம்.
முடிவுரை
மனிதர்களின் பேராசை, பெருகி வரும் மக்கள் தொகை, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் விலங்குகள் அழிந்து வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்கத் துவங்கியுள்ளனர்.
விலங்குகளால் பல நன்மைகளைப் பெற்று வரும் மனிதன் தனது சுயநலத்திற்காக விலங்குகளை வேட்டையாடியும் துன்புறுத்தியும் வருகின்றான்.
இத்தகைய செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்படுவதுடன், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அப்போது தான் விலங்குகள் பாதுகாக்கப்படும். விலங்குகளைப் பாதுகாப்பதுடன் அவற்றை நேசிக்கவும் பழகிக்கொள்ள வேண்டும்.
You May Also Like : |
---|
விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுரை |
மழை நீர் உயிர் நீர் கட்டுரை |