உதவி பற்றிய கட்டுரை

uthavi katturai in tamil

இந்த பதிவில் “உதவி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

பிறருக்கு உதவி செய்யும் போது பயனை எதிர்பார்க்காமல் நாம் உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்ற உதவிதான் உதவியாக கருதப்படும்.

உதவி பற்றிய கட்டுரை

உதவி பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பயன் கருதா உதவி
  • உதவியின் அளவு
  • யாருக்கு உதவ வேண்டும்?
  • உதவி பெறுவது எப்படி?
  • முடிவுரை

முன்னுரை

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கின்றோம்.

எனவே உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும். உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் ஏதும் விளைவதில்லை அந்தப்பொருள் வீணாகத்தான் அழியும்.

எனவே வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருட்களை பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும். இக்கட்டுரையில் உதவி பற்றி நோக்கலாம்.

பயன் கருதா உதவி

பிறருக்கு உதவி செய்யும் போது பயனை எதிர்பார்க்காமல் நாம் உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்ற உதவிதான் உதவியாக கருதப்படும்.

பயனை எதிர்பார்த்து செய்வது உதவியாகாது. இதைத் திருவள்ளுவர் “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருளில்லாத ஏழையால் பெறும் உதவிக்கு பதில் உதவி செய்ய இயலாது. அப்படிப்பட்ட வறியவர்களுக்கு செய்வதுதான் உதவி என்பதே அதன் விளக்கம் ஆகும்.

உதவியின் அளவு

பிறருக்கு உதவி செய்கின்றவர்கள் எந்த அளவிற்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நன்னெறி கூறியுள்ளது.

நிலவின் அளவிற்கு ஏற்பவே நிலவின் ஒளியிருக்கும். பிறை நிலவாய் இருக்கும் போது அதன் ஒளி குறைவாகவும் அது வளர வளர ஒளி மிகுதியாகவும் இருக்கும்.

அதைப் போல பெரியவர்கள் தம்மிடம் இருக்கும் பொருளின் அளவிற்கு ஏற்ப மனம் உவந்து உதவி செய்வார்கள். மிகுதியாக பொருள் இருக்கும் போது மிகுதியாக கொடுத்தும், குறைவாக பொருள் இருக்கும் போது குறைவாக கொடுத்தும் உதவுவார்கள்.

யாருக்கு உதவ வேண்டும்?

உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்கு செய்கின்றோமா, தாழ்ந்தோருக்கு செய்கின்றோமா என்று பார்க்க கூடாது. அதாவது உதவி செய்யும் போது பேதம் பார்க்க கூடாது.

மேலும் அந்த உதவியை பெற விரும்புபவர் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவராக இருந்தால் அத்தகையோருக்கு உதவி செய்யக் கூடாது.

உதவி பெறுவது எப்படி?

உதவி செய்வதற்கு முன்வராதவரிடம் இருந்து உதவியினை பெற சில வழிமுறைகளை கையாள வேண்டும். உதாரணமாக பால் சுரக்காத பசுவின் மடியில் பால் கறக்க முடியாது.

எனவே பாலை கறக்க வேண்டும் என்றால் கன்று குட்டியை பால் குடிக்க விட்டு அதனிடையே நாம் பால் கறக்க முடியும்.

அதைப் போல உதவி செய்ய முன்வராதவரிடமிருந்து உதவியினை பெற அவருக்கு வேண்டியவர் மூலமாக முயற்சி செய்து உதவி பெற முடியும் என்பதே இதன் கருத்தாகும்.

முடிவுரை

“தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்” மற்றும் “கொடுத்து கெட்டவர் யாருமில்லை” போன்ற கருத்துக்கள் உதவி செய்வதன் நன்மைகளை எடுத்துரைக்கின்றன.

இல்லாதவருக்கு உதவி செய்தலினால் கிடைக்கும் ஆத்ம திருப்தியானது வேறு எதனாலும் அடைந்து கொள்ள முடியாத ஒன்றாகும்.

மனிதராகிய நாம் மண்ணில் வாழும் காலத்தில் அவரவர் தகமைக்கு ஏற்ப பிறர் கஷ்டம் உணர்ந்து உதவி செய்ய பழகுவோம்.

You May Also Like:
வாய்மையே வெல்லும் கட்டுரை
நேர்மை பற்றிய கட்டுரை