உப்பு சத்தியாக்கிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt march) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அகிம்சை வழியில் எதிர்ப்பதற்காக திட்டமிட்ட போராட்டம் ஆகும்.
காந்தியடிகள் அப்போது இருந்த லார்ட் இர்வின் என்பவரிடம் பல கோரிக்கைகளை விடுத்தார். காந்தியடிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கீழ்க்காணும் விடயங்கள் முக்கியமாக காணப்பட்டன.
- இராணுவம் மற்றும் ஆட்சிப்பணி சேவைகளுக்கான செலவுகள் 50 சதவிகிதம் வரை குறைப்பது.
- முழுமையான புறக்கணிப்பை அறிமுகம் செய்வது.
- அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது.
- நிலவருவாயை 50 சதவிகிதமாக குறைப்பது.
- உப்பு வரியை ரத்து செய்வது.
இக் கோரிக்கை மனுவிற்கு அரச பிரதிநிதிகள் பதில் தெரிவிக்காத நிலையில் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார்.
சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதிக்கும் உப்பு வரியை நீக்குதல் என்பது அறிவு பூர்வமான விடயமாகும். இதனை அடித்தளமாகக் கொண்டே காந்தியடிகள் மக்களை ஒன்று திரட்டி தண்டி யாத்திரை என்னும் உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொண்டார்.
உப்பு சத்தியாக்கிரக ஆரம்பம்
1930 மார்ச் மாதம் 12ம் திகதி குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் என்னும் இடத்தில் இருந்து சுமார் 375 km தூரம் கொண்ட இப்பயணமானது 78 பேருடன் ஆரம்பித்து தண்டி வரை சென்று காந்தியடிகள் தண்டியில் ஒரு கைப்பிடி உப்பைக் கையில் எடுக்க இப்போராட்டம் வெற்றி கண்டது.
செயல் திட்டங்கள்
உப்பு சட்டத்தை மீறல்.
அரசாங்கம் உப்பின் மீது வரி விதித்து இருந்தமையின் காரணமாக அதனை மீறும் பொருட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே உப்பு காய்ச்சிடுங்கள் என்று கூறினார். இச் செயற்பாடே உப்பு சட்டத்தை மீறும் வகையில் காணப்பட்டது.
வரி கட்ட மறுத்தல்.
அரசாங்கத்திற்கு எக்காரணம் கொண்டும் வரி கட்ட கூடாது என்பன இச்செயற்றிட்டத்தின் திட்டங்களாக அமைந்தன.
உப்பு சத்தியாக்கிரகம் இடம்பெற்ற இடங்கள்
தமிழ் நாட்டில் ராஜாஜி என்பவரின் தலைமையில் திருச்சி தொடக்கம் வேதாரணியம் வரை இந்த சத்தியாக்கிரகம் மேற்கொள்ளப்பட்டது.
மலபாரில் கேலப்பன் என்பவர் உப்பு சத்தியுக்கிரகத்தை மேற்கொண்டார்.
இந்தியாவின் வடமேற்கு மாகாணங்களில் எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கஃபார் கான் என்பவர் இந்த இயக்கத்திற்கு அதிக ஆதரவு வழங்கினார்.
உப்பு சத்தியாக்கிரகத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகள்
1930 மே மாதம் 4ம் திகதி காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்.
அதன் பின் தொடர்ச்சியாக ஜவஹர்லால் நேரு, கான் அப்துல் கஃபார் கான் போன்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இயக்கத்தில் பங்கேற்ற மக்கள் மீது கடுமையான தண்டனைகளை பிரயோகம் செய்தனர். 90,000 மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சத்தியாக்கிரகத்திற்கு மக்களின் ஆதரவு மிக அதிகமாக காணப்பட்டது. விவசாயிகள், குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் என பலரும் இந்த சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு வழங்கினர் இது முதன்மையான சத்தியாக்கிரகம் என்பதால் காந்தியடிகள் இதனை “உண்மை சக்தி” என்று வர்ணித்தார்.
ஆரம்பம் என்ற ஒன்று இருப்பின் முடிவு என்ற ஒன்று இருந்தே தீரும். அவ்வகையில் இச்செயற்றிட்டமும் காலப்போக்கில் முடிவு கண்டது.
உப்பு சத்தியாக்கிரகத்தின் முடிவு
1930 ஆம் ஆண்டு பிரித்தானியரால் லண்டனில் ஒரு வட்ட மாநாடு நடாத்தப்பட்டது. மாநாட்டில் எந்த காங்கிரஸ் தலைவர்களும் கலந்துகொள்ளவில்லை. அதன் பின் 1931 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி லாட் இர்வினோடு காந்தியடிகள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இந்த ஒப்பந்தம் டெல்லி உடன்படிக்கை என்றும் அழைக்கப்படும். இதன்படி காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகத்தை நிறைவு செய்த பின்பு 1931 ஆம் ஆண்டு லண்டனில் இரண்டாம் வட்ட மாநாடு இடம்பெற்ற வேளையிலும் காந்தியடிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் மீண்டும் இந்தியா திரும்பிய காந்தி சட்டமறுப்பு இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்தார்.
அதன் போது பிரித்தானியர்கள் மிகவும் கடுமையான சட்டங்களை பிரயோகித்தனர். அதன் பின்பு 1933 ஆம் ஆண்டு மே மாதம் சட்டமறுப்பு இயக்கம் ரத்து செய்யப்பட்டாலும் இறுதியாக 1934 ஆம் ஆண்டு மே மாதம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தியாவின் முக்கியமான பலமான போராட்டங்களில் வரலாறு காக்கும் உப்பு சத்தியாக்கிரகம் இன்றியமையாதது.
You May Also Like : |
---|
காந்தியின் அகிம்சை கட்டுரை |
சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டுரை |