உலக கூட்டுறவு தினம் கொண்டாடப்படும் நாள்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமை ‘பன்னாட்டு கூட்டுறவு தினம்’ என்பதாக உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
“மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. எனவே மனித குலத்திற்கு கூட்டுறவு என்பதும் முக்கியமானதாகும். இது நாடுகளுக்கும் பொருந்தும்.
இன்றைய உலகம் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை உணர்ந்தே உள்ளது. மக்கள் கூட்டாக சேர்ந்து தங்களது நலனுக்காகவோ அல்லது பொது மக்கள் நலனுக்காகவோ ஒரு நிறுவனத்தைத் தொடங்கினால் அது “கூட்டுறவு சங்க நிறுவனம்” ஆகும்.
கூட்டுறவு தினம் உருவாக்கப்பட்டதன் வரலாறு
கூட்டுறவு அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்சின் சோசலிஸவாதி சார்ள்ஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771-1858), டாக்டர் வில்லியம்கிங் போன்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் உதித்த இத்தத்துவம், 1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 16 டிசம்பர் 1992 அன்று ஜூலை 1995 முதல் சனிக்கிழமையை சர்வதேச கூட்டுறவு தினமாக அறிவிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் ஸ்தாபனத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இது கூப்ஸ் (Coops Day) தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
“கூட்டுறவே நாட்டுயர்வு” எனும் கருப்பொருளின் கீழ் இந்தத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
உருவாக்கப்பட்டதன் நோக்கம்
சர்வதேச கூட்டுறவு தினம், கூட்டுறவுகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிப்பது மற்றும் கூட்டுறவு இயக்கத்தின் கருத்துக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச ஒற்றுமை, பொருளாதார திறன், சமத்துவம் மற்றும் உலக அமைதி போன்றவற்றை முதன்மைப்படுத்துகிறது.
பொருளாதார பங்களிப்பை வளர்க்கவும், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடவும், நல்ல வேலைகளை உருவாக்கவும், உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்கவும், உள்ளூர் சமூகங்களுக்குள் நிதி மூலதனத்தை வைத்திருக்கவும், நெறிமுறை மதிப்பு சங்கிலிகளை உருவாக்கவும், மக்களின் பொருள் நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் நேர்மறையான அமைதிக்கும் பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
கூட்டுறவுகள் சுயமதிப்பு, ஜனநாயகம், சமத்துவம், சுய உதவி மற்றும் ஒற்றுமை போன்ற குறிக்கோள்களைக் கொண்டு இயங்குகின்றது.
உலகளாவிய ஒருங்கிணைப்பு மற்றும் நாடுகளிடையேயான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகின்றது.
உலக கூட்டுறவு தினம் முக்கியத்துவம்
கூட்டுறவுத்துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. கூட்டுறவுகள் மூலம், சமூகம் மற்றும் தேசத்தின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடியும்.
கூட்டுறவுகள் மூலதனத்தை மையமாகக் கொண்டதற்குப் பதிலாக மக்களை மையமாகக் கொண்டவையாக இருப்பதால், அவை மூலதனச் செறிவை நிலைநிறுத்தாது, துரிதப்படுத்தாது செல்வத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கின்றன.
உறுப்பினர்களுக்கு சம இலாபத்தை வழங்கி, சுரண்டல்களைத் தடுப்பதற்கு கூட்டுறவு இன்றியமையாததாக உள்ளது. கூட்டுறவு அமைப்பிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் சம பங்கை முதலீடாகப் செலுத்துவதால் இதில் வரும் இலாபத்தை எல்லோரும் சமமாகப் பங்கு பிரித்துக் கொள்வார்கள்.
மக்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதற்கு கூட்டுறவு வழிவகுக்கின்றது. இதன் மூலம் பொருளாதாரம் உயர்த்தப்படுவதற்கும், சமநிலைப்படுத்துவதற்கும் ஏதுவாக அமையும்.
மக்களிடையேயும், நாடுகளிடையேயும் கூட்டுறவு இருந்தால்தான் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதனை நினைவுபடுத்தக்கூடிய நாளாக உலக கூட்டுறவு தினம் அமைந்துள்ளது.
ஐந்து அம்ச கூட்டுறவுக் கொள்கை
1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஐந்து அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. அவை,
- தன் விருப்புடனான தடையற்ற அங்கத்தவர்
- ஜனநாயக முறைக் கட்டுப்பாடும், நிர்வாகமும்
- முதலுக்கு ஏற்ப வட்டி வீதம்
- இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல்
- கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு
You May Also Like : |
---|
உலக புத்தக தினம் |
உலக மன்னிப்பு தினம் |