உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

Ulaga Sutru Sulal Naal Katturai

இந்த பதிவில் “உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த பூமியின் இயற்கை அழிவைப் பற்றிய விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகத்தான் மனிதர்களால் பெருமளவில் உணரப்பட்டு வருகிறது.

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உலக சுற்றுச்சூழல் தினம்
  3. மரங்கள் அழிப்பு
  4. சுற்றுச்சூழல் மாசடைவால் ஏற்படும் பாதிப்புக்கள்
  5. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் புவியானது நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி ஆகிய ஐவ்வகை பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாகும்.

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் வசிப்பிடமாக புவி திகழ்வதற்கு சுற்றுச்சூழல் காரணமாக உள்ளது. புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்ற, சுற்றுச்சூழல் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமாகும்.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகின்றது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உலக சுற்றுச்சூழல் தினம்

1972 ஆம் ஆண்டில் ஐ.நாவின் பொது அவையினால் மனித சூழலுக்கான ஐ.நா மாநாடு நடத்தப்பட்ட நாளில் உலக சுற்றுச்சூழல் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி ஆண்டுதோறும் யூன் 5 ஆம் நாள் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான ஒரு இடம் தேர்வு செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

கடந்த வருடத்திற்கான கருப்பொருளாக “மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது” என்பதனை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.

மரங்கள் அழிப்பு

பிராணவாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டி வீழ்த்தியதால் மனித இனம் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கத் திணறி வருகின்றனர்.

மரங்களின் எண்ணிக்கைகள் குறைவடைந்தமையால் நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகின்றது. மனிதனது சுயநலத்தால் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றனவும் பாதிப்படைகின்றன.

சுற்றுச்சூழல் மாசடைவால் ஏற்படும் பாதிப்புக்கள்

புவிக்கோள மாசடைதல் நடவடிக்கையில் பச்சை வீட்டு விளைவும் ஒன்றாகும். பச்சை வீட்டு விளைவானது பூமி அதிகளவில் வெப்பமடைவதால் நிகழ்கின்றது. இத்தாக்கமானது பூமியை வெப்பமாக்கும்.

விவசாய நிலங்களில் கிருமி நாசினிகள், பீடை நாசினிகள், மற்றும் இரசாயன உரங்கள் என்பவற்றின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் நிலம் மாசடைவிற்குட்படுகின்றது. இதனால் மண் செழிப்பற்றதாகவும் தாவரங்கள் வளர ஏற்பற்றதாகவும் மாறும். இது உணவு வலையில் உள்ள மற்றய உயிரினங்களைப் பாதிக்கும்.

நகராக்கம் காரணமாகவும் அதிளவில் கழிவுகள் நீரில் கலக்கின்றன. மாசடைந்த நீரினைப் பயன்படுத்தும் போது வாந்திபேதி, வயிற்றோட்டம் முதலான பல நோய்கள் ஏற்படக் காரணமாக அமைகின்றது. நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் வழிவகுக்கும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

ஒரு மரம் அழிக்கப்பட்டால் அதற்குப் பதிலாகப் பல மரங்களை நடுதல் வேண்டும். காடுகள் வளர்ப்பது, சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் நீர் நிலைகள் மாசடைவினைத் தடுக்கலாம்.

அதிக மாசுபாட்டை உண்டாக்கும் திட்டங்களை கைவிடுவது, மற்றும் நாம் ஒவ்வொருவரும் காற்று மண்டலத்தை பாதிக்கும் செயல்பாடுகளை குறைக்க வேண்டும். இவற்றால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் முடியும்.

முடிவுரை

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட்டால் இப்புவியில் அனைத்து உயிரினங்களும் இயற்கையோடு ஒன்றினைந்து ஆரோக்கிய வாழ்வினை வாழலாம்.

You May Also Like :
இயற்கை பாதுகாப்பு கட்டுரை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு