உலக நகைச்சுவை தினம் | ஜூலை 1 |
International Joke Day | July 1 |
சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. உலகில் வசிக்கும் ஜீவராசிகளில் மனிதர்களுக்கு மட்டுமே நகைச்சுவை உணர்வு உள்ளது. ஆனால் இன்றைய விஞ்ஞான காலத்தில் பரபரப்பான சூழலில் சிரிக்க மறந்து எதையோ தேடி நாம் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
சிரிக்க மறந்து வாழ்வதால் நாம் மனிதர்களுக்கு உரிய இயல்பை இழந்துவிடுகிறோம். நமது வாழ்வின் சிரிப்பை உண்டாக்குவதற்கான பிரதான வழியாக நகைச்சுவை உள்ளது.
சோகமான நேரத்தில் கூட சில நகைச்சுவை விஷயங்கள் நடக்கும் போது சோகத்தை மறந்து சிரிப்போம் அல்லவா? அது ஒரு மிகப் பெரிய வரம்.
சிரிப்பை கொண்டாடி கவுரவப்படுத்த ஆண்டுதோறும் ஜூலை 1ம் திகதி சர்வதேச நகைச்சுவை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலக நகைச்சுவை தினம் கொண்டாடப்படுவதற்கான நோக்கம்
சர்வதேச நகைச்சுவை தினம் அதிகாரபூர்வமாக அமெரிக்காவில் ஜூலை 1ல் தொடங்கியதாகத் தெரிகிறது. உலக மக்கள் தொகை வெவ்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொரு நபரும் ஒருவருக்கொருவர் இணைந்திருக்கும் ஒரு விஷயம் சிரிப்பு. மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் நகைச்சுவையின் சிறப்பை உணர்த்தும் வகையிலும் ஆண்டுதோறும் உலக நகைச்சுவை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
நகைச்சுவை உலகின் பிதாமகன் சார்லி சாப்ளின்
உலகில் அதிக மக்களைச் சிரிக்க வைத்தவர் என்ற சிறப்புக் கொண்டவரும் நகைச்சுவைக்கு இலக்கணம் வகுத்தவருமான சார்லி சப்பிளின் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி லண்டனில் பிறந்தார்.
வார்த்தையால் நகைச்சுவையை வெளிப்படுத்த முடியும் என்பதையும் தாண்டி ஊமைப் படங்களிலேயே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் ஜாம்பவானாவார்.
இவரது திரைபடங்களின் சிறப்பு நகைச்சுவையும் மனிதநேயமும் இழையாகப் பின்னப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் கதையமைப்பே ஆகும்.
எல்லோரையும் சிரிக்க வைத்த இவரது வாழ்க்கை சோகம் நிறைந்தது. “நான் மழையில் நனைந்து கொண்டே இருக்க விரும்புகின்றேன் அப்போதுதான் நான் அழுவது மற்றவர்களுக்குத் தெரியாது” என்று வேதனையோடு குறிப்பிட்டவர்.
வாழ்வில் வேதனைகள் இருந்தாலும் நகைச்சுவை உணர்வோடு வாழ்ந்து பிறரை சிரிக்க வைத்து வாழ வேண்டும் என்பதற்கு இவரே சிறந்த எடுத்துக்காட்டு. அனைவரையும் சிரிக்க வைத்த சார்லி சப்பிளின் காலம் கடந்தும் இன்றும் நம் எல்லோரின் புன்னகையிலும் வாழ்கின்றார்.
நற்பலன் தரும் நகைச்சுவை
சிரிக்கும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்துகின்ற வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிறந்ததொரு நகைச்சுவை கோபம் மற்றும் கோபமான சூழ்நிலைகளைப் போக்குகிறது. வேடிக்கையான சிரிப்பு கூடுதலாக வலுவான உறவுகளை உருவாக்குகிறது.
மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். ஆனால் சிறந்த நகைச்சுவை உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் பேண உதவுகின்றது.
நகைச்சுவை மனத்தின் சுமையைக் குறைக்கிறது. சிரிக்கும்போது இரத்த அழுத்தம் குறைகின்றது. இதனால் சீரான இரத்த ஓட்டம் பேணப்பட்டு நுரையீரல் நன்கு செயல்படுவதுடன் கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பு நோய் வராமலும் தடுக்கின்றது.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகமாகவே இருக்கும். மருந்துகளுக்கு எல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து. இந்த சிறப்பான மருந்து நகைச்சுவை மூலமாக எமக்கு கிடைக்கின்றது.
நகைச்சுவை உணர்வு ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கின்றது. இயந்திர உலகில் சிரிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைத்து கொண்டிருக்கின்றார்கள்.
வாழ்க்கையில் பிரச்சினைகள், சர்ச்சைகள், எதிர்ப்புகள் எனப் பல காரணங்களுக்காக சிரிப்பதையே மறந்து விடுகின்றார்கள்.
சிரிப்புகளை விற்று மன அழுத்தங்களை வாங்காமல், நாமும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைக்க நகைச்சுவை உணர்வோடு இருப்போம்.
You May Also Like : |
---|
உலக மன்னிப்பு தினம் |
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினம் |