உலக புன்னகை தினம் | அக்டோபர் முதல் வெள்ளிக்கிழமை |
World Smile Day | The first Friday of October |
புன்னகை என்பது வார்த்தைகள் இல்லாமல் நம் உணர்ச்சிகளையும், விருப்பங்களையும் காட்டும் மொழியாகும். மகிழ்ச்சியை அள்ளித்தர ஆயிரம் வழிகள் இருந்தாலும் அவை வெளிப்படுத்துவது என்னவோ புன்னகையாலேயே ஆகும்.
புன்னகை என்பது ஒவ்வொரு மனிதனும் வெளிக்காட்டும் உணர்வின் வெளிப்பாடு ஆகும். மனதை கொள்ளை கொண்டு வெளி நபர்களிடமும் ஒரு அழகான நட்பை உருவாக்குவதற்கு சிரிப்பே சிறந்தது.
உலகில் எண்ணிலடங்கா உயிரினங்கள் இருந்தும் மனிதப் பிறவிக்கு மட்டுமே உரித்தான புன்னகை மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை எனலாம்.
புன்னகைப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். புன்னகைப்பதன் மூலம் மன அமைதி பெறுவதுடன் மற்றவர்களையும் மகிழ்வாக வைத்திருக்க முடியும். புன்னகையுங்கள் உங்கள் புன்னகையை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உலக புன்னகை தினம் உருவான வரலாறு
1963 இல், ஹார்வி பால் நாம் நன்கு அறிந்திருக்கும் மஞ்சள் ஸ்மைலி முகத்தை உருவாக்கினார். வணிகக் கலைஞர், ஹார்வி பால் (Farvey Ball), ஸ்டேட் மியூச்சுவல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன பிரச்சாரத்திற்காக 1963 ஆம் ஆண்டில் ஸ்மைலி ஃபேஸ் (Smiley Face) டிசைனை உருவாக்கினார்.
அந்த நேரத்தில், இந்த சின்னம் நல்லெண்ணத்துடன் தொடர்புடையதாகவும் மற்றும் மக்களை உற்சாகப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு பயன்படுத்தப்பட்டது.
காலம் செல்லச் செல்ல ஹார்வி பால், ஸ்மைலி ஃபேஸ் வணிகமயமாக்கலால் அது உண்மை அர்த்தத்தை வெளிப்படுத்தவில்லை என வருத்தப்பட்டார். ஸ்மைலி ஃபேஸினுடைய உண்மை அர்த்ததை உலகிற்குக் கொண்டுவர எண்ணினார்.
அதனடிப்படையில் அவர் உலக புன்னகை தினத்தை உருவாக்க முடிவு செய்தார். உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாளை புன்னகைக்கும் கருணைச் செயல்களுக்கும் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
2001 இல் ஹார்வி இறந்த பிறகு, அவரது பெயரையும் நினைவையும் போற்றும் வகையில் ஹார்வி பால் வேர்ல்ட் ஸ்மைல் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இது ஒவ்வொரு ஆண்டும் உலக புன்னகை தினத்தை அனுசரணை செய்கிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக புன்னகை தினத்தின் நோக்கம்
நாமும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதையே உலக சிரிப்பு தினம் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
இனம், பாலினம் அல்லது புவியியல் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அன்பையும் பரப்புவதற்காக உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகின்றது.
உலக புன்னகை தினம் முக்கியத்துவம்
இன்றைய அவசர உலகில் நாம் சிரிப்பதை மறந்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் சிரிப்பது அவசியம் என்பதை நினைவுபடுத்தும் நாளாக இந்த தினம் உள்ளது.
சிரிப்பு மனநிலையை மேம்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, மன அழுத்தத்தை போக்குகிறது, சிறந்த உறவுகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை அதிகரிக்கிறது, வலியைப் போக்குகின்றது, ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது.
ஒரு புன்னகை வயது, பாலினம், நாடு, இனம், நிறம் அல்லது கலாச்சாரத்தின் அனைத்து எல்லைகளையும் கடக்கின்றது. இது ஒரு உலகளாவிய மொழி பேசுகிறது.
நாம் போகிற இடங்களிலெல்லாம் செய்கிற காரியங்களிலெல்லாம் வெற்றி பெற வேண்டுமெனில் சிரித்த முகமாக, மனதை லேசாக வைத்துக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
மனித வாழ்வில் ஏற்ற இறக்கம், இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் புன்னகை கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்கவல்லது.
You May Also Like : |
---|
உலக தாய்மொழி தினம் |
உலக வானொலி தினம் |