உலக முத்த தினம் | ஜூலை 6 |
International Kissing Day | July 6 |
உலக முத்த தினம் ஜூலை 6ம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
ஒரு குழந்தை பிறந்த நாளிலிருந்து முத்தம் கொடுக்கும் பழக்கம் ஆரம்பமாகின்றது. ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயின் முத்தத்தை பெறுகின்றது. முத்தம் கொடுக்கும் பழக்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்துள்ளமையைக் காணலாம்.
முத்தம் காதலின் வெளிப்பாடு மட்டுமல்ல அது பாசத்தின் அடையாளமும் ஆகும். அதாவது முத்தம் என்பது நமது பாசத்தை வெளிப்படுத்த ஒரு அடிப்படை தொடர்புச் செயல் ஆகும்.
உலகில் முத்தம் என்பது கலாச்சாரம் சார்ந்த அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
சில கலாச்சாரங்களில் எதிர் பாலினத்தவர்களுக்கிடையில் முத்தமிடுவது வெறுக்கப்படுகிறது மற்றும் நெருக்கத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் மேற்கத்திய கலாச்சாரங்களில் முத்தம் மரியாதை, வாழ்த்து அல்லது நட்பின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
உரோமானிய கலாச்சாரத்தில் முத்தங்கள் ஒருவரின் சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக அறியப்படுகின்றது.
சர்வதேச முத்த தினத்தின் பின்னணி
சர்வதேச முத்த தினக் கொண்டாட்டங்கள் முதன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. உலக முத்த தினம் ஜூலை 6ம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
மேலும் மற்றுமொரு முத்த தினமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 13 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது காதலர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக வருகிறது. பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் காதல் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு முந்தியது முத்த தினமாகும்.
சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
அன்றாட வாழ்வில் முத்தத்தின் முக்கியத்துவத்தினை பற்றியும் அன்பை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது.
அன்புக்குரியவர்களுக்கு அன்பை வெளிப்படுத்துவதற்கும், அவர்கள் நேசிக்கபடுவதை உணர்த்துவதற்கும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச முத்த தினமானது, நாம் விரும்பும் நபர்களையும், அவர்கள் நம் வாழ்வில் இருப்பதையும் ஒரு முத்தத்தின் மூலம் உணர்த்துவதை நோக்கம் கொண்டது.
சர்வதேச முத்த தினத்தின் முக்கியத்துவம்
முத்தம் அன்பையும், பாசத்தையும், நெருக்கத்தையும் வளர்க்க உதவுகின்றது. முத்தத்தின் மூலம் ஒரு வார்த்தை கூட பேசாமல் உங்கள் உணர்வுகளை ஒருவரிடம் தெரிவிக்க முடியும்.
உறவுகளைப் பலப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் முத்தம் உதவுகின்றது. சமூகப் பிணைப்பிலும் முத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
முத்தம் காதலை மட்டுமல்ல தாய் மற்றும் குழந்தைப் பாசம், அனுதாபம், மென்மை, நன்றி, விசுவாசம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.
இன்றைய அவசர உலகில் அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கும், ஆறுதல் வார்த்தை கூறவும் நேரம் போதாமல் அலைகின்றோம். இதனால் உறவுகளிடையே பிரிவுகளும் தவறான புரிதல்களுமே அதிகம் இடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர்த்து அன்பைப் பகிர்ந்து வாழ்வதன் மூலமே வாழ்க்கை அர்த்தமாகும்.
முத்தத்தைப் பகிர்ந்தாலே மொத்த அன்பும் வெளிப்படும். உலக முத்த தினத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உறவுகளிடையே முத்தத்தால் புனிதமான அன்பைப் பகிர்வோம்!
You May Also Like : |
---|
உலக உடன்பிறப்புகள் தினம் |
அறிவு பற்றிய கட்டுரை |