இக்கட்டுரையில் “ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை” பதிவை காணலாம்.
ஐம்பூதங்களை அளவுடனும் அதன் தன்மையை அறிந்து பக்குவமாய் பயன்படுத்தல் வேண்டும்.
ஐம்பூதங்கள் பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நிலம்
- நீர்
- காற்று
- தீ
- ஆகாயம்
- முடிவுரை
முன்னுரை
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகியவை ஐம்பூதங்களாகும். ஐம்பூதங்கள் என்பதை வடமொழியில் பஞ்சபூதங்கள் என்று குறிப்பிடுவர்.
இப்பிரபஞ்சம் மற்றும் அனைத்து ஜீவராசிகளும் ஐம்பூதங்களின் சேர்க்கையினால் ஆனது எனவும் அவற்றின் தோற்றம் குறித்து பல்வேறு நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.
ஐம்பூதங்களின் சமநிலை இருப்பின் உலகம் வளமானதாகவும், நலமானதாகவும் அமையும். மனிதன் இயற்கைக்கு மாறாகச் செயல்படும் போது ஐம்பூதங்களும் மாற்றத்திற்கும், பாதிப்பிற்கும் உள்ளாகின்றன. இக்கட்டுரையில் ஐம்பூதங்கள் பற்றி நோக்கலாம்.
நிலம்
ஐம்பூதங்களில் முதன்மையாக விளங்குவது நிலம் ஆகும். நிலத்தை மண், பூமி, உலகம், புவி என்று குறிப்பிடுவர். நிலமானது அனைத்திற்கும் அடிப்படையான கல், மண், நீர் உள்ளிட்ட பல்வேறு விதமான அணு மூலக்கூறுகளின் சேர்க்கையாக விளங்குகிறது.
பொறுமையின் சிகரமாக விளங்குவது நிலமாகும். எவ்வளவு தான் அதனைக் குத்தித் தோண்டித் துன்புறுத்தினாலும் பொறுமையாக இருந்து தன்னை துன்புறுத்தியவர்களுக்கு பலனை கொடுக்கும்.
பெண்களும் பொறுமை எனும் அணிகலன் அணிந்தவர்களேயாவர். அதனால் தான் “பெண்ணும் மண்ணும் ஒண்ணு” என்று பழமொழி தெளிவுறுத்துகிறது.
நீர்
உலக வாழ்க்கைக்கு இன்றியமையாததாக நீர் அமைகின்றது. நீரினை “அமிர்தம்” என்று கூறுவர். நீரானது கீழ்நோக்கி செல்லும் இயல்புடையது. இது பணிவின் வெளிப்பாடாகும்.
நீரை வைத்து உறவுகளையும், வாழ்க்கைச் சூழல்களையும் நமது முன்னோர் விளக்கியுள்ளனர். உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் உறவை முறித்துக் கொள்ளல் கூடாது.
“நீர் வேகமாக வந்து தேங்கிக் கிடக்கின்ற நீர் மீது மோதினால் அந்நீர் விலகுமா? விலகாது. ஒன்று சேர்ந்து இரண்டறக் கலந்து விடும்.” அதுபோல உறவுகளுக்குள் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உறவை முறித்துக் கொள்ளக் கூடாது.
காற்று
உயிர் வாழ்க்கைக்கு முக்கியானதாகும். காற்று எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாம் சுவாசிக்கும் மூச்சே நமக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்துகிறது.
தான் இல்லை என்றால் இந்த உலகில் யாராலும் வாழமுடியாது என்று தெரிந்தாலும் தன்னை வெளிப்படுத்தி கொள்ளாமல் உலகில் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறது காற்று. இது தன்னடக்கத்திற்கு உதாரணமாகும்.
பணம் சம்பாதிக்க நேரம் ஒதுக்கும் மனிதர்கள் யாவரும் காற்றை சம்பாதிக்க விரும்பவில்லை. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” , “ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்” என்பது போல நாம் காற்றின் சிறப்பினை உணர்ந்து நடக்க வேண்டும்.
தீ
மிகவும் வெப்பத்தன்மையுடையது. நெருப்பானது இந்த உலகத்தில் எந்த பொருளையும் எரித்து சாம்பலாக்கும். எந்த இடத்திலும் எப்போதும் மேல்நோக்கி செல்லும் தன்மையுடையது.
மனிதனுடைய பிராத்தனை, வேண்டுதல் என்பவற்றை இறைவனிடத்தில் எடுத்து செல்லும் தன்மையுடையது என பலராலும் நம்பப்படுகின்றது.
ஆகாயம்
ஏனைய நான்கு ஐம்பூதங்களும் தோன்ற காரணமான காரணமாக அமைவது ஆகாயம் ஆகும். நாம் வணங்கும் தெய்வங்கள் வாழும் இடம் என்று பலராலும் நம்பும் ஓர் இடமாகும்.
இந்த உலகை படைத்து இயக்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை விட பல சக்திகளை தாங்குவதாலும் உயர்ந்த தன்மையை கொண்டது ஆகாயம்.
“வானம் நினைத்தால் மழை மனிதன் நினைத்தால் வினை” என்பது போல இறை தத்துவத்தின் விளக்கமாய் நிறைந்து நிற்கின்றது ஆகாயம்.
முடிவுரை
இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த ஐம்பூதங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாம் உயிர் வாழ ஏற்ற துணையாய் நிற்கின்றன.
ஐம்பூதங்களின் செயல்பாடுகளையும் அவற்றின் குறியீடாகவும் வைத்து மனிதன் செம்மாந்த வாழ்வு வாழ வேண்டும்,
அத்துடன் அவற்றினை அளவுடனும் அதன் தன்மையை அறிந்து பக்குவமாய் பயன்படுத்தல் வேண்டும்.
You May Also Like: |
---|
காற்று மாசுபாடு பற்றி கட்டுரை |
நீர் மேலாண்மை கட்டுரை |