பொதுச் சொத்துக்களை பாதுகாப்போம் கட்டுரை

பொதுச் சொத்துக்களானவை எமக்கு மட்டுமன்றி எம் எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கக் கூடியதாகும். அந்த வகையில் பொதுச்சொத்துக்களை எம் ஒவ்வொருவருடைய சொத்தாக நினைத்து பேணுவதோடு மட்டுமல்லாது அத்தகைய பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதும் அனைவரதும் கடமையாகும்.

பொதுச் சொத்துக்களை பாதுகாப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பொதுச் சொத்துக்களின் முக்கியத்துவம்
  • பொதுச் சொத்துக்களும் சேதங்களும்
  • பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதால் ஏற்படும் விளைவுகள்
  • பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல்
  • முடிவுரை

முன்னுரை

பொதுச் சொத்துக்களானவை அரசுக்கு சொந்தமான சொத்துக்களாகும். அதாவது சமூகத்தின் நலனை கருத்திற் கொண்டு அமையப் பெற்றதாகவே பொதுச் சொத்துக்கள் அமைந்துள்ளன.

அந்த வகையில் பள்ளிகள், நூலகங்கள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து அமைப்புக்கள், பாதைகள், காடுகள், மதஸ்தலங்கள் போன்றவற்றை பொதுச் சொத்துக்களாக கொள்ளலாம். இத்தகைய பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதன் மூலமாகவே எம்மால் சிறப்பாக வாழ முடியும்.

பொதுச் சொத்துக்களின் முக்கியத்துவம்

அனைவரது நலன் கருதியும் உருவாக்கப்பட்டவையே பொதுச் சொத்துக்களாகும். இத்தகைய பொதுச் சொத்துக்களானவை எமக்கு மட்டுமன்றி எம் எதிர்கால சந்ததியினருக்கும் பயன்படுத்தக் கூடியதாகும்.

எமது வாழ்வின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பொதுச் சொத்துக்களின் பங்கானது அளப்பரியதாகும். நாம் எமது பொதுச் சொத்துக்களை சிறப்பாக பேணி பாதுகாக்க வேண்டும்.

பொதுச் சொத்துக்களும் சேதங்களும்

இன்று பொதுச் சொத்துக்களானவை மனித நடவடிக்கைகளால் பல்வேறு வகையில் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.

அதாவது பொது சுவர்களில் கண்டவற்றை எழுதுதல், எச்சில் துப்புதல் மேலும் கழிவுகளை பொது இடங்களில் போடுதல், பொது இடங்களில் மின்விசிறியை சுழல விட்டுச் செல்லுதல், பூங்காக்களில் பூக்களை பறித்தல் மற்றும் ஓய்விற்காக செல்கின்ற பொது இடங்களை அழுக்கான பொருட்களாலும் அநாகரிகமான நடத்தைகளாலும் நாசம் செய்தே வைத்திருக்கின்றனர் இவ்வாறு பல்வேறு வகையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.

இத்தகைய நிலையிலிருந்து விடுபட்டு பொதுச் சொத்து எம் ஒவ்வொருவருடைய சொத்தே என்றடிப்படையில் அதனை பாதுகாக்க வேண்டும்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதால் ஏற்படும் விளைவுகள்

நாம் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து நடப்போமேயானால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும். அதாவது பொதுவான கட்டிடங்கள், மரங்கள் போன்றவற்றை சேதம் செய்வதனூடாக நாளை அது எம் சந்ததியினரையே பாதிப்படையச் செய்கின்றது.

குப்பைகளை பொது இடங்களில் போடுவதனூடாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதுபோன்று சூழல் மாசடைவிற்கு வழிவகுக்கிறது. மேலும் பொது குடிநீரை வீண்விரயம் செய்வதனூடாக நாளை நீர் இன்றி தத்தளிக்கும் நிலை எமக்கே ஏற்படும் என்பதனை உணர்ந்து செயற்படுதல் வேண்டும்.

பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல்

பொதுச் சொத்து என்பது ஒவ்வொரு தனிமனிதராலும் பாதுகாக்கப்பட வேண்டியதொன்றே ஆகும். அந்த வகையில் எமது சொத்தை பேணி பாதுகாப்பது எமது கடமையாகும்.

பொது இடங்களை தூய்மையாக வைத்தல் மற்றும் பொது இடங்களில் உள்ள பொருட்களை களவாடக் கூடாது. மேலும் குப்பைகளை பொது இடங்களில் போடாது முறையாக அகற்றுதல் வேண்டும்.

அதேபோன்று பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து பொதுச் சொத்துக்களை பாதுகாத்தல் வேண்டும் என்பதோடு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படுவதன் மூலமும் பொதுச் சொத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முடிவுரை

எமது நாடு சிறப்பாக வளர்ச்சி காண்பதற்கும், பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையவும் பொதுச் சொத்தை பாதுகாப்பது அவசியமாகும். பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பானது எமது வளமான எதிர்காலத்திற்கான அடித்தளமாகும்.

You May Also Like:

பத்திரிகையின் பயன்கள் கட்டுரை

உலக பொதுமறை திருக்குறள் கட்டுரை