ஒளவையார் கட்டுரை

Avvaiyar Patri Katturai In Tamil

இந்த பதிவில் தமிழ் பெரும் பாட்டியான “ஒளவையார் கட்டுரை” பதிவை காணலாம்.

இவரது செல்வாக்கானது சாமானிய மக்கள் மத்தியிலும் பரவியுள்ளது. மனித வாழ்வுக்கேற்ப பல மகத்தான தத்துவங்களை வாரி வழங்கியுள்ளார்.

ஒளவையார் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஒளவையார் என்ற சொல்லின் பொருள்
  3. ஒளவையார் என்ற பெயரில் வாழ்ந்தவர்கள்
  4. சங்க கால ஒளவையார்
  5. ஒளவையாரின் சிறப்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்பாற் புலவர் கோலோச்சி இன்றுவரை தன் பாடல்கள் மற்றும் செய்யுள்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அப்பெருமை ஒளவையாரையே சாரும்.

பெண்களின் வீர உணர்ச்சிக்கு வித்திட்டவராக இவர் விளங்குகின்றார். பண்டைய காலத்து தமிழ் வரலாற்றையும், வாழ்வியல் முறைகளையும், சிறப்பினையும், அறச் செயல்களையும், நிலையான தத்துவங்களையும் தம் படைப்புகளில் ஒளவையார் எடுத்துரைத்துள்ளார். ஒளவையார் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஒளவையார் என்ற சொல்லின் பொருள்

ஒளவை என்ற சொல் “அவ்வா” என்ற சொல்லின் திரிபினை உடையது. ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறுகின்றது.

பிற்காலத்தில் ஒளவை என்ற சொல் வயது மற்றும் அறிவாற்றல் என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கின்றது.

ஒளவையார் என்ற பெயரில் வாழ்ந்தவர்கள்

ஒளவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால ஒளவையார் ஆவார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர் ஆவார். நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னன் தான் உண்ணாமல் ஒளவையார் நீண்ட காலம் வாழவேண்டுமென கொடுத்ததாக வரலாற்று கதை உண்டு.

சங்ககால ஒளவையார் சங்க இலக்கியங்களில் 59 பாடல்களைப் பாடியுள்ளார்.

இரண்டாவது ஒளவையார் பக்தி கால ஒளவையார் ஆவார். இவர் விநாயகர் அகவலைப் பாடியவர் ஆவார். விநாயகரை வழிபடுபவர்கள் இந் நூலை முதல் நூலாகக் கொண்டு படிப்பார்கள்.

மூன்றாவது ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர் ஆவார்.

நான்காவது ஒளவையார் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். இவருடைய தனிப்பாடல்களானது மிகச்சிறந்த கருத்து உள்ளது. சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற கதையுடன் நெருங்கிய தொடர்புடையவர் நான்காவது ஒளவையாராவார்.

சங்க கால ஒளவையார்

சங்க காலத்தில் வாழ்ந்த பெண் புலவர் சங்க கால ஒளவையார் இவர் இளமை தளும்பும் ஒரு விறலி ஆவார். அதாவது ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவளே விறலி ஆவாள்.

மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். மை தீட்டிய கண்களும், வட்டமான நெற்றியும் உடையவராக அறியப்படுகின்றார். எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்தவராகவும் அறியப்படுகின்றார்.

ஒளவையாரின் சிறப்புகள்

மூவேந்தர்கள் தமிழ்நாட்டில் பெருமையுடனும் புகழுடனும் வாழ்ந்த காலத்தில் பெண் கவிச் சிங்கமாக உலா வந்தவர் தான் ஒளவையார் ஆவார். முடி மன்னர்கள் மூவேந்தர்கள் காலத்தில் தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டி பெருமை சேர்த்த ஒரே ஒரு பெண் புலவர் ஒளவையார் ஆவார்.

இவரது செல்வாக்கானது சாமானிய மக்கள் மத்தியிலும் பரவியுள்ளது. மனித வாழ்வுக்கேற்ப பல மகத்தான தத்துவங்களை வாரி வழங்கியுள்ளார்.

முடிவுரை

அறிவு மிகுந்த செயல்களைச் செய்த சமூக சிந்தனை மிக்கவராக திகழ்ந்தவர் ஒளவையார்.

தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் காலங்களை வென்று தமிழ்மொழியின் பொக்கிஷங்களை உலகுக்கு அளித்தவர் என்ற பெருமை ஒளவையாரையே சாரும். தமிழுக்கு தொண்டாற்றிய இவர் என்றென்றும் போற்றுதற்கு உரியவர் ஆவார்.

You May Also Like:
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை
பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்