இந்த பதிவில் கர்மவீரர் “காமராஜர் பற்றி கட்டுரை” பதிவை காணலாம்.
எளிய குடும்பத்தில் பிறந்த படிக்காத மேதையாய் நாட்டு நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கர்ம வீரர் ஆவார்.
காமராஜர் பற்றி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தொடக்க வாழ்க்கை
- சுதந்திரப்போரில் காமராஜர்
- பொற்காலம் தந்த நாயகன்
- இறுதிக்காலம்
- முடிவுரை
முன்னுரை
தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் பதவி வகித்தனர். அவர்களுள் ஒருவரே முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆவார். இவர் தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்.
ஆட்சிக்காலத்தில் பல மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டார். தன்னையும் மறந்து தன்னலம் துறந்து தேசம் காத்தவராவர். தோள்களில் தாங்கி தொண்டுகள் பல செய்த பெருந்தலைவராவார்.
இத்துணை குணங்களுக்கு மிகச்சரியான இலக்கணமாய்த் திகழ்ந்த ஏழைப்பங்காளர்⸴ பொற்காலம் தந்த நாயகர்⸴ மாபெரும் தலைவர் பாரத ரத்னா கர்மவீரர் காமராஜர் அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தொடக்க வாழ்க்கை
தமிழ்நாட்டிலுள்ள விருதுநகரில் 1903 ஜூலை மாதம் 15 இல் பிறந்தார். இவர் தந்தை பெயர் குமாரசாமி, தாயார் பெயர் சிவகாமி அம்மையார் ஆகும். முதலில் இவருக்கு குலதெய்வமான காமாட்சியின் பெயரையே சூட்டினார்கள்.
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும் அவரை “ராசாˮ என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி காமராசு என்று ஆனது இவர் தனது தொடக்கக் கல்வியை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் ஆரம்பித்தார்.
சுதந்திரப்போரில் காமராஜர்
பள்ளிப் படிப்பினை தொடர முடியாமல் போனதும் இவர் தனது மாமனார் துணிக்கடையில் வேலை பார்த்த வேளை பெ.வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும்⸴ சுதந்திரப்
போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.
உப்புச் சத்தியாகிரகம்⸴ ஒத்துழையாமை இயக்கம் போன்ற இயக்கங்களில் இணைந்து பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். தனது 16வது வயதில் காங்கிரசில் உறுப்பினரானார்.
இந்தியாவின் அடிமை வாழ்வாலும்⸴ சாதிப் பாகுபாடுகளும் ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகி விட்டது. இதனை உணர்ந்த காமராஜர் இதனை வெற்றி கொள்ள தன்னை அர்ப்பணித்தார்.
இறுதிக்காலம்
பதவியை விட தேச நலம் காப்பது முக்கியம் எனக் கருதிய காமராசர் முதல்வர் பதவியை துறந்தார். அகில இந்திய காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் இந்த படிக்காத மேதை.
இவரது செயற்பாட்டைப் பல தலைவர்களும் ஏற்றுக்கொண்டு பதவியைத் துறந்து தொண்டு செய்யப் புறப்பட்டனர். பதவி நாற்காலியைத் துறந்தாலும் பாரதத்தின் பல தலைமை நாற்காலிகள் இவர் முன்மொழிந்தவர்களால் நிரப்பப்பட்டன.
தன் வாழ்நாளையே தொண்டு செய்வதற்கு அர்ப்பணித்த பின் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் இவ்வுலக வாழ்க்கையை துறந்தார்.
பொற்காலம் தந்த நாயகன்
இந்திய அரசியலில் மக்களாட்சி முறையில் நெறிமுறைகளை ஆழமாக வேரூன்றச் செய்தார். 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து பொற்காலம் தொடங்கியது.
பெருந் தலைவர் பதவிக்கு வந்தார். பட்டி தொட்டி எங்கும் பள்ளி வந்தது. பாரதம் போற்றும் மதிய உணவுத் திட்டம் வந்தது. மூடிய பள்ளிகள் திறக்கப்பட்டன. குலக்கல்வி முறை ஒழிந்து போனது. இலவசக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேலே அணைகள் அமைக்கப்பட்டன. நீர்ப்பாசனத் திட்டம் பசுமை கண்டது. தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனம் சிறந்து விளங்கியது. சமூகநீதி செயல் வடிவாகியது. தாய் மண்ணும் வளர்ச்சி கண்டது.
முடிவுரை
எளிய குடும்பத்தில் பிறந்த படிக்காத மேதையாய் சிறந்து, நாட்டு நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கர்ம வீரர் ஆவார்.
உண்மையாய் உழைத்து தனக்கென்று எதையும் சேர்க்காமல் மறைந்த காமராஜரை போற்றுவோம். நற்பணியாற்றுவோம்.
You May Also Like: |
---|
கல்வி கண் திறந்தவர் கட்டுரை |
நீர் மேலாண்மை கட்டுரை |