இந்த பதிவில் “குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.
பாதுகாப்பற்ற சூழல்களில் குழந்தைகள் வாழ்வதனால் அவர்களது சிந்தனை திறன், கல்வி, பழக்க வழக்ககங்கள் என்பன மோசமாக பாதிக்கப்படுகின்றன.
குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சமூகத்தின் பங்கு
- சட்ட நடவடிக்கைகள்
- சட்ட விரோத செயல்கள்
- விழிப்புணர்வு
- முடிவுரை
முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பெரிதும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக இன்று குழந்தைகள் வாழ்கின்ற சூழல் மிகவும் பாதுகாப்பற்ற ஒரு சூழலாக மாறியிருப்பது வேதனைக்குரியது.
இதனால் குழந்தைகளின் கல்வி வாழ்க்கை, எதிர்காலம் என்பன கேள்விக்குறியாக மாறி வருகின்றமை கண்டிக்கத்தக்கதாகும். எதிர்காலத்தின் தூண்களாக வளரும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது இந்த சமுதாயத்தின் முக்கிய பொறுப்பாக உள்ளது.
சமூகத்தின் பங்கு
குழந்தைகள் விடயத்தில் அதிகம் கவனம் எடுக்க வேண்டியவர்களாக முதலில் பெற்றோர்கள் விளங்குகின்றனர். தமது குழந்தைகளின் வாழ்க்கை சூழல் என்பது பெற்றோர்களது கையில் தான் தங்கியிருக்கின்றது.
அமைதியான பாதுகாப்பான வீடு மற்றும் உணவு, மருத்துவம், கல்வி, சுதந்திரம் என்பன குழந்தைகளுக்கு சரியாக கிடைக்கும் படியாக ஒவ்வொரு பெற்றோர்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறே ஆசிரியர்கள் மிகவும் முக்கியமான பொறுப்பை கொண்டுள்ளார்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் பழக்கவழக்கம் மற்றும் மகிழ்ச்சியான சூழல் ஆகியற்றுக்கு ஆசிரியர்கள் பொறுப்பாக இருந்து அவர்களை வழிநடத்தல் வேண்டும்.
சட்ட நடவடிக்கைகள்
குழந்தைகள் விடயத்தில் இந்த சமூகத்தில் இடம்பெற கூடிய சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுலில் உள்ளன.
அவ்வாறு தவறுகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்கென உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு விரைவாக அறிவிக்க முடியும். அல்லது காவல்துறையினரிடம் முறையீடு செய்ய முடியும்.
இவற்றின் மூலமாக குழந்தைகளுக்கு எதிராக துஷ்பிரயோகங்களை செய்யும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் தண்டிக்கப்படுகின்றமை பாராட்டத்தக்கது.
சட்டவிரோத செயல்கள்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக பல சட்ட விரோத செயல்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக பாடசாலைக்கு செல்ல வேண்டிய குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
சில குடும்பங்களில் பெற்றோர்களின் ஒற்றுமை இன்மை, போதைப்பொருள் பாவனை ஆகியவற்றால் குழந்தைகள் உடல் அளவிலும் மனதளவிலும் துன்புறுத்தப்படுதல் போன்ற பல விரோதமான செயல்கள் அதிகம் இடம்பெற்று வருவதனை காண முடிகின்றது.
விழிப்புணர்வு
பாதுகாப்பற்ற சூழல்களில் குழந்தைகள் வாழ்வதனால் அவர்களது சிந்தனை திறன், கல்வி, பழக்க வழக்ககங்கள் என்பன மோசமாக பாதிக்கப்படுகின்றன. இதனால் அவர்களது எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறிவருகின்றது.
இவ்வகையான சூழ்நிலைகள் இந்த சமூகத்துக்கு வேண்டாத குற்றவாளிகளையும் உருவாக்கி கொண்டிருக்கின்றது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வுடையவர்களாக மாறி ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை
இன்றைய குழந்தைகள் தான் இந்த நாட்டின் நாளைய தலைவர்களாக வருவார்கள் ஆகவே தான் அரசாங்கம் இந்த நாட்டின் குழந்தைகள் தொடர்பாக அதிகம் அக்கறை உடையவர்களாக இருக்கின்றது.
எனவே நாமும் சமூக பொறுப்புடையவர்களாக குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறையுடன் எமது நாட்டின் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
You May Also Like: |
---|
பெண்கள் பாதுகாப்பு கட்டுரை |
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை |