சங்கரய்யா வரலாறு

n sankaraiah history in tamil

தமிழ்நாடு உருவாக்கிய இடதுசாரி சிந்தனையாளர்களுல் ஒருவர். செங்கொடி ஏந்தி மக்களின் குரலாக ஒலித்த குரல். பிரித்தானியருடைய காலத்தில் போராட்ட வாதியாகவும் இந்திராகாந்தி, நேரு போன்றோரின் காலத்தில் அரசியல் களத்தில் தீவிரமாக செயற்பட தொடங்கி இன்றைய தலைமுறைக்குள்ளும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய போராளி. நூற்றாண்டு கண்ட அரசியல்வாதிகள் பட்டியலில் இவரும் ஒருவர்.

சங்கரய்யா வரலாறு
இயற்பெயர்பிரதாபச்சந்திரன்
பிறந்த ஆண்டு1921 ஜுலை 15
பிறப்பிடம்ஆத்தூர்,
தூத்துக்குடி மாவட்டம்
தந்தைஇராமானுஜனம்
தாய்நரசிம்மலூர்
வாழ்க்கை துணைவி நவமணி

சங்கரய்யா என்ற பெயர் பெறக்காரணம்

இவரது தாத்தாவின் பெயர் எல்.சங்கரய்யா அவரின் பெயர் தனக்கும் சூட்டப்பட வேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணா விரதம் இருந்து பின் தாத்தாவின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டார். அதன் பின்பே பிரதாபச் சந்திரன் சங்கரய்யா என அழைக்கப்பட்டார்.

சங்கரய்யாவின் சகோதரர்கள்

இவருக்கு அண்ணா ஒருவரும், நான்கு சகோதரிகள் மற்றும் மூன்று தம்பிகளும் உடன்பிறந்த சகோதரங்களாகும்.

ஆரம்பக் கல்வி

சங்கரய்யாவின் தந்தைக்கு அடிக்கடி பணி இடமாற்றம் ஏற்படும் அதனால் சங்கரய்யாவும் அவரது சகோதரன் இராசமாணிக்கமும் தங்களது தாய்வழி தாத்தாவின் ஊரான தூத்துக்குடியில் தங்கி ஆரம்பக் கல்வியைக் கற்றார்.

பின்னர் இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுரை மாணவர் ஒன்றியத்தின் செயலாளராதல்

1930 களின் இறுதியில் மதுரையில் மாணவர் ஒன்றியம் என்று உருவாக்கப்பட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய போது சங்கரய்யா தேடப்பட்டார். மதுரை ரீவ்ஸ் அரங்கத்தில் மாணவர் மாநாடு கூட்டப்பட்டது.

பிரபல கம்யூனிஸ்ட் தலைவரான மோகன் குமாரமங்கலம் பங்கேற்ற அந்த மாநாட்டில் மதுரை மாணவர் சபை உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக சங்கரய்யா தெரிவு செய்யப்பட்டார். மாணவர் சங்கம் மேலுயர நண்பர்களுடன் இணைந்து செயற்பட்டார்.

கல்லூரி பருவத்தில் மேற்கொண்ட முதன்மையான பணி

தமிழ்நாடு மாணவ சம்மேளத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட இவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பொதுக் கூட்டத்தில் சென்று உரையாற்றல், மாணவர் அமைப்புகளை அழைத்து பேசுதல், அவர்களுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் போன்ற சிறப்பான பணிகளை செய்தார்.

அரசியலில் ஈடுபட எண்ணம் ஊட்டியது

மதுரை அமெரிக்கன் கல்லூரி 10 ஆம் வகுப்பில் படித்து முடித்த சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயங்கி வந்த மாணவர் மன்றத்தில் இணைந்த பின்பே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வந்தது.

இவ்வாறு ஆர்வம் கொண்ட அவர் மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக இருந்த போது கல்லூரிக்கு இராஜாஜி, முத்துராம லிங்க தேவர் போன்ற தலைவர்களை அழைத்து வந்து பேச்சுக்களை நடாத்தினார்.

பள்ளி பருவத்தில் சுயமரியாதை இயக்கம் குறித்து அறிமுகம் இருந்த போதிலும் கல்லூரி காலங்களில் சோசலிசம், கம்யூனிசம், குறித்தே அதிகம் சிந்தித்தார்.

அவ்வாறான சிந்தனை கொண்ட நண்பர்களுடனேயே பழகினார். இவ்வாறே இவரின் அரசியல் ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்துச் சென்றது.

கம்யூனிஸ்ட கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்படல்

1940 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சங்கரய்யா தன்னை இணைந்து கொண்டார்.

சங்கரய்யாவின் சுறுசுறுப்பினாலும் போராட்ட குணத்தினாலும் அயராத பணியினாலும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கான பணி

சைக்கிளில் சென்று கம்யூனிஸ்ட் கட்சிக்கான பிரசாரங்களை மேற்கொள்வார். கட்சி உறுப்பினர் ஒருவர் ஒரு தெருவில் நின்று கரகாட்டம் ஆட அங்கு மக்கள் கூட்டம் நிறையும் அப்போது அந்த இடத்திற்கு சைக்கிளில் வரும் சங்கரய்யா கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை பற்றிப் பேசுவார்.

அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே கரகாட்டக்காரன் இன்னொரு தெருவிற்கு சென்று விடுவார். பின் அங்கு சென்றும் சங்கரய்யா உரையாற்றுவார். இவ்வாறு கட்சி வளர்க்க அவர் பணிகள் மேற்கொண்டார்.

சங்கரய்யாவின் அரசியல் வாழ்வில் முக்கியமான அத்தியாயம்

மதுரை சதி வழக்கு இவரின் அரசியல் வாழ்வில் முக்கிய அத்தியாயம். ஏனெனில் சங்கரய்யாவும் பி. இராமமூர்த்தி என்பவரும் இணைந்து இதர தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய முற்பட்டனர் என கைது செய்யப்பட்டு 8 மாத கால விசாரணைக்கு பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார் இது அவரின் அரசியல் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

தலைமறைவான வாழ்க்கை

பிரித்தானியர் ஆட்சியில் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது தலைமறைவான முறையில் செயற்பட்டார் சங்கரய்யா.

அக்காலத்தில் அவருக்கு சொரி சிரங்கு ஏற்பட்ட போது இரகசியமாக சென்னை அழைத்துவரப்பட்டு குணமாக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டு காலமும் இரகசிய முறையில் இயங்கியே கட்சி வேலைகளை செய்தார் சங்கரய்யா.

காவல் துறையின் கண்களுக்கு அகப்படாமல் அவர் கூட்டங்களுக்கு வந்து பங்கேற்றதும் நடந்தோ வாகனத்திலோ தப்பி செல்வார். ஒரு கூட்டம் நடைபெறும் போது மாறு வேடத்தில் வந்து இன்னுமொரு மாறு வேடத்தில் திரும்பிச் செல்வார்.

இதன்போது கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு 06 மாத கால சிறை வாசத்தின் பின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறே இவரின் தலை மறைவான வாழ்க்கை கழிந்தது.

சங்கரய்யா சிறை வாழ்க்கை

சங்கரய்யா பல தடவைகள் பல காரணங்களின் நிமித்தம் சிறை வாழ்க்கையை அனுபவிக்க நேர்ந்தது.

மாணவர் சங்கத்தை வளர்த்தல், மக்கள் போராட்டத்தில் ஈடுபடல், மறியல் செய்வது போன்ற செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டார். இதனால் இவரை கல்லூரி நிர்வாகம் ரத்து செய்ய விரும்பியது. இவரை ரத்து செய்தால் போர் களம் வெடிக்கும் என கூற கல்லூரி நிர்வாகம் அந்த எண்ணத்தை கைவிட்டது.

அதன் பின் சங்கரய்யா அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். 1940 ஆம் ஆண்டு உருவான ககம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைக் கிளையில் உறுப்பினரானார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக செயற்பட ஆரம்பித்தது.

அந்த நேரம் சிதம்பர அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பிரித்தானியருக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கன் பல்கலைக்கழகம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதான் போராட்டத்தின் சூத்திரகாரியாக சங்கரய்யாவே செயற்பட்டார்.

அதனால் பொலீசாரால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் விட வேண்டும் என போராட்டம் வெடிக்க அவரை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர். அதனால் இளங்கலை பட்டப் பரீட்சையை தவறவிட்டார். மேலும் 18 மாதம் வரை சிறை வாழ்க்கையை மேற்கொண்டார்.

அவர் சிறையில் இருக்கும் போது அரசியல்வாதிகளால் காமராஜர், ஜீவானந்தம் போன்றோரின் அறிமுகம் பெற்றார்.

இரண்டாவதாக 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான மொழி போர் தீவிரமாக இடம்பெற்ற வேளையில் கேரள் சட்ட தேர்தலுக்கு தயாராகி இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டம் கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடந்தது.

அதில் பங்கேற்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து சென்ற P. இராமமூர்த்தி, சங்கரய்யா போன்றோரை கைது செய்தனர். அப்போது அவர் 16 மாத காலம் சிறைவாசம் அனுபவித்தார்.

இவ்வாறு மக்களுடன் போராட்டங்களில் ஈடுபடும் போது பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் வாழ்ந்தார் சங்கரய்யா.

திருமண வாழ்க்கை

சிறையில் இருந்து வெளிவந்த சங்கரய்யா ஆசிரியரான நவமணியை சாதி மறுப்பு, மத மறுப்பு என்பவற்றிற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார்.

சங்கரய்யா மேற்கொண்ட மொழி பெயர்ப்பு பணி

1946 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பிரிவின் செயலாளரான பி.சி. பேசி சுற்றுப்பயணம் இந்தியா வந்தார்.

அப்போது மதுரை, மன்னார் குடி போன்ற இடங்களில் பேச்சு நடாத்தினார் அவரின் பேச்சை இவர் மொழிபெயர்ப்பு செய்தார் சுமார் மூன்று மணித்தியாலங்கள் அவரின் பேச்சு மீது கொண்ட ஆர்வத்தினால் மக்கள் கவரப்பட்டு அவரின் பேச்சைக் கேட்டனர்.

சங்கரய்யா எழுதிய நூல்கள்

சங்கரய்யா சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகியாக பணியாற்றிய போது அவர் இரண்டு புத்தகங்கள் எழுதினார்.

  • காங்கிரஸ் கம்யூனிஸ்ட்
  • ஹைட்ரஜன் குண்டுகளை தடை செய்தல்

சங்கரய்யா பணியாற்றிய பத்திரிகைகள்

  • ஜனசக்தி
  • தீக்கதிர்

சங்கரய்யா வேட்பாளராக நின்ற சந்தர்ப்பங்கள்

1957 ஆம் ஆண்டு தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளராக நின்று போட்டியிட வைத்தது கம்யூனிஸ்ட் கட்சி ஆனால் அவரால் அத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் சங்கரய்யா மதுரை கிழக்கு கம்பனியின் வேட்பாளராக நின்றார். அத்தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

1957 ஆம் ஆண்டு 1962 ஆம் ஆண்டு என்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற சங்கரய்யா 1967 ஆம் ஆண்டு தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார் சங்கரய்யா. அப்போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அ.தி.மு.க வின் கூட்டனியில் இருந்தது. C.P.M. இன் சட்டமன்ற தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

சங்கரய்யாவின் பொதுப் பணிகள்

  • சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு கூட்டங்கள் நடாத்துதல்.
  • பொதுக் கூட்டத்தில் பேசுதல்.
  • போராட்டங்களில் கலந்து கொள்ளல்.
  • தீக்கதிர் பத்திரிகையில் கட்டுரை வரைதல்.
  • அனுதினமும் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் வாழுதல்.
  • பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து மத நல்லினக்கத்துடன் பேசியமை.
  • தீண்டாமையை ஒழிக்க பணியாற்றியமை.

சங்கரய்யாவின் பதவி விலகல்

சங்கரையாவுக்கு 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின் முன்பே போல செயல்பட இயலாமையின் காரணமாக பதவியில் இருந்து விலகி அரசியல் ஆலோசகராக கடைமையாற்றினார்.

இவ்வாறு நூறு வயதாகியும் தன் கடமையை தவறாது செய்து கொண்டு இருக்கும் சங்கரய்யாவின் பணிகள் போற்றத்தக்கன.

உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றார் “மார்க்ஸ்” தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் இக்கோசம் ஒலித்த வேண்டும் என பிரசாரம் செய்தவர் சங்கரய்யா. இவ்வாறு மக்களே தன் மூச்சு என வாழ்ந்த சங்கரய்யாவைப் போற்றுவோம்.

You May Also Like :
ஒத்துழையாமை இயக்கம் வரலாறு
நேசமணி வாழ்க்கை வரலாறு