செவிலியர் பணி கட்டுரை

seviliyar katturai in tamil

இந்த பதிவில் “செவிலியர் பணி கட்டுரை” பதிவை காணலாம்.

செவிலியர் பணியானது மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் மிக முக்கியமான பணி ஆகும்.

செவிலியர் பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • செவிலியர் பணியின் வரலாறு
  • செவிலியருக்கான தகுதிகள்
  • செவிலியரின் கடமைகள்
  • செவிலியர் பணியின் முக்கியத்துவம்
  • முடிவுரை

முன்னுரை

செவிலியர் பணியானது ஒரு கலையாகவும் விஞ்ஞானமாகவும் மற்றும் மனித நேய பணியாகவும் நோக்கப்படுகின்றது.

இது தனிமனிதர், குடும்பங்கள் மற்றும் சமூகத்தினுடைய நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் சுகாதார சேவையுடன் இணைந்துள்ள ஒரு தொழிற்துறையாகும்.

நோய்களை இனங்காண்பது தொடக்கம் குடும்ப நல சேவைகள் வரைக்கும் அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒரு முக்கியமான தொழிலான செவிலியர் பணி பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

செவிலியர் பணியின் வரலாறு

புளோரன்ஸ் நைட்டிங்கேள் என்ற பெண்மணியே நவீன செவிலியர் பணியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் ஆவார். இவர் நவீன செவிலியர் என்ற அமைப்பினை உருவாக்கியவர் ஆவார்.

மேலும் லண்டனில் உள்ள புனித தோமஸ் மருத்துவமனையில் செவிலியருக்கான பயிற்சி கல்லூரியினையும் 1860 ஆம் ஆண்டில் நிறுவி ஆயிரக்கணக்கானவர்களை செவிலியராக்கினார்.

இதன் காரணத்தினாலேயே கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது 200 வது பிறந்த தினத்தை நினைவு கூறும் முகமாக செவிலியர் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது.

செவிலியருக்கான தகுதிகள்

சுகாதார துறையில் மிக முக்கியமான பணியினை மேற்கொள்ளும் செவிலியராவதற்கு பல தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்.

அவற்றுள் சில – சிறந்த சுக தேகியாக இருத்தல், சிறந்த ஆங்கில அறிவு, விஞ்ஞான துறையில் சிறந்த அறிவு அத்துடன் கனிவான குணநலம் உடையவராக இருத்தல், சேவை மனப்பாங்கினை கொண்டிருத்தல் என்பன அவையாகும்.

செவிலியரின் கடமைகள்

செவிலியரானவர்கள் நோயாளிகளை மதிப்பீடு செய்தல், அவதானித்தல், நம்பிக்கை அளிக்கும் வண்ணம் பேசுதல், நோயாளியின் மருத்துவ வரலாறு, மற்றும் தற்போதைய விவரங்கள் நோய்சார் அறிகுறிகளை பதிவு செய்தல்,

பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக நோயாளர்களை தயார்படுத்தல், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை நிர்வகித்தல், பக்க விளைவுகள், எதிர் விளைவுகள் தொடர்பாக நோயாளிகளை கண்காணித்தல்,

மருத்துவ குழுவுடன் இணைந்து நோயாளர் பராமரிப்பு திட்டங்களை உருவாக்குதல், செயற்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், மருத்துவ உபகரணங்களை கையாளுதல், சிகிச்சை மற்றும் பராமரிப்புத் திட்டங்கள் குறித்து நோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கற்பித்தல்

அத்துடன் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்ற பல பணிகளை செய்ய கடமைப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

செவிலியர் பணியின் முக்கியத்துவம்

செவிலியர் பணியானது மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் மிக முக்கியமானது ஆகும். நோயாளி, மருத்துவர் மற்றும் நோயாளியின் குடும்பம் என்பவர்களுக்கு இடையில் பாலமாக காணப்படுகின்றது.

உதாரணமாக நோயாளியின் மருத்துவ வரலாறு தொடர்பாக மருத்துவருக்கு கூறுதல் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் நோயாளியின் நிலை தொடர்பாக குடும்பத்திற்கு அறிய தருதல் போன்றவற்றை கூறலாம்.

ஒரு தாய் தான் பிரசவித்த குழந்தையை தொடுவதற்கு முதல் அக்குழந்தையை தூக்கி அதற்கான பணிகளை செய்பவர்கள் செவிலியர்களே ஆவர்.

முடிவுரை

செவிலியர்கள் கடந்த இரு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட இடரின் போது எமக்கு ஆற்றிய சேவையானது அவர்களின் பணியின் மகத்துவ தன்மையினை வெளிப்படுத்தியது.

உன்னத சேவையினை நமக்கு கொடுக்கும் இவர்களை மதித்து நன்றி உணர்வினையும் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

You May Also Like :
போதை இல்லா உலகம் கட்டுரை
சாதனை பெண்கள் கட்டுரை