தன் சுத்தம் பற்றிய கட்டுரை

Than Sutham Katturai In Tamil

இந்த பதிவில் “தன் சுத்தம் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தன் சுத்தத்தைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியமான சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும்.

தன் சுத்தம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. சுகாதாரம்
  3. தன் சுத்தத்தின் அவசியம்
  4. தன் சுத்தம் பேணும் வழிகள்
  5. தன் சுத்தம் பேணாமையால் ஏற்படும் விளைவுகள்
  6. முடிவுரை

முன்னுரை

சுகாதாரம் என்பது நலமான வாழ்வின் தொடக்கப் புள்ளியாகக் காணப்படுகின்றது. எனவே நாம் உட்கொள்ளும் உணவு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியச் செயற்பாடுகளில் நம் வாழ்வின் ஆரோக்கியம் தங்கியுள்ளது.

ஒவ்வொருவரும் தன் சுத்தம் பேணும் போது தான் சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்கும்.

ஒவ்வொருவரும் தன்னில் இருந்து சுத்தத்தை பேணும்பொழுது சமூகமும் அவ்வழியினை விருப்போடு பற்றி நடமாடும். தன் சுத்தம் பற்றி கட்டுரையில் காண்போம்.

சுகாதாரம்

முதன்முதலில் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சுகாதாரமற்ற நிலைமை காரணமாகவே சுத்தம் பற்றிய கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

மனிதனானவன் உடல் மற்றும் உள ரீதியாக ஆரோக்கியமாக வாழ வேண்டும். நலமாக வாழ்வதின் மூலமே வாழ்வு சிறக்கும்.

இத்தகைய நல வாழ்விற்கு வழி அமைப்பதே சுகாதாரம் ஆகும். எனவே அனைவரும் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது முக்கியமாகும்.

தன் சுத்தத்தின் அவசியம்

தன்னைப் பற்றிய சிந்தனையே பொது நலத்திற்கான தூண்டுகோலாகும். இந்நிலையில் ஒவ்வொருவரும் தன் சுத்தத்தைப் பேணுவதன் மூலமாக சமூகத்தையும் காக்க முடிகின்றது.

பிறர் நம்மை மதிப்பதற்கு தன் சுத்தம் அவசியமாகும். அதாவது, தன் சுத்தத்தைப் பேணி வாழ்கின்றபோது நமது பழக்க வழக்கங்களும் பிறர் மதிக்கின்ற விதமாக மாறும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தன் சுத்தம் பேணும் வழிகள்

கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது அடிப்படை சுகாதார முறைகளில் முதன்மையானது.

சாப்பிடும் முன்பும் பின்பும், சமைக்கும் முன்பும், கழிவறை சென்று வந்த பிறகும், அசுத்தமான பொருள்கள், தூசு, குப்பை முதலானவற்றைத் தொட நேர்ந்த பிறகும் கட்டாயம் கைகளைக் கழுவ வேண்டும்.

காலையில் எழுந்தவுடனும், இரவு உறங்கச் செல்வதற்கு முன்பும் பற்களை நன்றாகத் துலக்க வேண்டும். அசைவ உணவுகளைச் சாப்பிட்ட பிறகும் பல் துலக்குவது நல்லது.

பாதம், கை, கால் நகங்கள், மடிப்புகள், வியர்வை சுரக்கும் இடங்கள் போன்ற அழுக்கு சேரும் இடங்களை நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க வேண்டும்.

தன் சுத்தம் பேணாமையால் ஏற்படும் விளைவுகள்

வாயில் ஏற்படும் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகள் வாய் மற்றும் பற்களை சரியாகப் பராமரிக்காத காரணத்தின் விளைவுகளே. தன்சுத்தம் பேணாமல் விட்டால், நோய்த்தொற்றுகள் இலகுவாக ஒட்டிக்கொள்ளும்.

தலை மற்றும் தலைமுடியின் சுத்தத்தில் சரியான கவனம் செலுத்தாதபோது, இறந்த செல்கள் அடை அடையாக மாறி தலையில் பொடுகு, பேன் போன்றவை உருவாக காரணமாகி விடும்.

துவைக்காத ஆடைகளை பயன்படுத்தும் போது உடலில் துர்நாற்றத்தையும், சரும வியாதிகளையும் ஏற்படுத்தும்.

முடிவுரை

அழகான வாழ்வென்பது உடல், உணர்வு, வாழ்கின்ற சூழல் சார்பானது. நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடங்களிலும் நமது வாழ்வினை ரசித்து வாழ்கின்ற மனநிலையை இத் தன் சுத்தம் தருகின்றது.

எனவே தன் சுத்தத்தைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியமான சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும். தன் சுத்தம் பேணுவோம் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

You May Also Like:
சுத்தம் சுகாதாரம் கட்டுரை
சுத்தம் சுகம் தரும் கட்டுரை