இந்த பதிவில் “நாட்டுப்பற்று கட்டுரை” பதிவை காணலாம்.
தேசத்திற்கு எந்த வகையிலும் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையினையும் ஆர்வத்தினையும் தூண்டுவது நாட்டுப்பற்றே ஆகும்.
நாட்டுப்பற்று கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நாட்டுப்பற்றின் முக்கியத்துவம்
- சிறந்த நட்டுப்பற்றாளர்கள்.
- வெளிப்படுத்தும் முறைகள்
- மாணவர்களிடையே நாட்டுப்பற்று
- முடிவுரை
முன்னுரை
நாட்டுப்பற்று என்பது ஒருவர் தமது தாய்நாட்டின் மீது கொண்டுள்ள அளவில்லாத அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பலவகையில் உழைப்பதும் நாட்டுப்பற்று எனக்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தான் தன்னுடைய குடும்பம், சுற்றம், தன்னுடைய இனம், மொழி, மதம், பண்பாடு என்று தான் சார்ந்த தேசத்திலும் வேர் கொண்ட ஒன்றே நாட்டுப்பற்றாகும். இது தொடர்பான விளக்கத்தை அளிப்பதாக இக்கட்டுரையானது அமைந்துள்ளது.
நாட்டுப்பற்றின் முக்கியத்துவம்
ஒரு நடானாது முன்னேற்றப் பாதையில் தடம் பதித்து முடிவில் வல்லரசு என்ற நிலையினை அடைவது என்பது அந்நாட்டினுடைய தலைவர்கள் கையிலோ அல்லது அரசியல்வாதிகளிடமோ இல்லை மாறாக குடிமக்களிடமும் அவர்கள் கொண்டுள்ள நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது.
தேசபக்தி என்பது முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க மக்களை ஊக்குவிக்கும் ஒரு வகையான உந்துதலாகின்றது.
சாதி, மத, மொழி வேற்றுமையில் ஒற்றுமையை விட்டுக்கொடுக்காமல் எந்த விதமான கொடுங்கோன்மைக்கும் முகங்கொடுத்து கடமையுடன் நிற்பதற்கு நாட்டுப்பற்று தான் காரணமாகின்றது. தேசத்திற்கு எந்த வகையிலும் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையினையும் ஆர்வத்தினையும் தூண்டுவது நாட்டுப்பற்றே ஆகும்.
சிறந்த நட்டுப்பற்றாளர்கள்
எமது தேசத்தினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுக்க அரும்பாடுபட்டவர்களை சிறந்த தேசப்பற்றாளர்களுக்கு உதாரணமாக கூறலாம்.
அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தியடிகள், போர் வழி தேர்ந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், தம் எழுத்தாற்றலால் சுதந்திரம் பெற போராடிய மகாகவி பாரதி மேலும் சர்தார் வல்லபாய் பட்டேல், ராணி லட்சுமி பாய், வீர மங்கை வேலு நாச்சியார் போன்றவர்களை கூறலாம்.
வெளிப்படுத்தும் முறைகள்
நாட்டுபற்று உணர்வினை பலவகையில் எம்மால் வெளிப்படுத்த முடியும்.
- தேசிய பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை மதித்தல்
- நாட்டின் பண்பாட்டு சின்னங்களை பாதுகாத்தல்
- நாட்டின் எல்லைகளை காவல் காத்தல்
- தேச நலனுக்காக உயிர் நீத்தல்
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைத்தல்
- நேர்மையாக வரிகளை கட்டுதல்
- நாட்டின் அனைவருக்கும் கல்வி பயில்வித்தல்
- பல வேலையில்லாதோரை பணியில் அமர்த்தல்
போன்றவற்றின் மூலம் எமது தேசப்பற்றினை வெளிப்படுத்தலாம்.
மாணவர்களிடையே நாட்டுப்பற்று
நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாக வளர்ந்தால் தான் நாடும் வீடும் நலம் பெறும்.
நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
இந்நிலமையினை மாற்றியமைக்க சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டிற்கு தொண்டாற்ற வேண்டும்.
முடிவுரை
சுதந்திர போராளிகளினுடைய நாட்டுப்பற்று தான் அந்நியரிடம் இருந்து நம் தாய் நாட்டை சுதந்திரம் அடைய வைத்தது. தாயை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும்.
இந்திய தேசம் முன்னேற்றம் அடையவும் வல்லரசு நாடாக உருவாகவும் அனைவரும் தேசப்பற்றுடன் செயற்பட வேண்டும். எனவே மாணவர்களாகிய நாம் நம் தாய் நாட்டின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம்.
You May Also Like: |
---|
என் கனவு இந்தியா கட்டுரை |
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை |