இந்த பதிவில் “நான் விரும்பும் கவிஞர் கண்ணதாசன் கட்டுரை” பதிவை காணலாம்.
கண்ணதாசன் தனது வாழ்வில் பல்வேறு வகையில் இன்னல்களை எதிர்நோக்கிய போதும் அதில் துவண்டுவிடாமல் உயர்வடைந்துள்ளார்
நான் விரும்பும் கவிஞர் கண்ணதாசன் கட்டுரை
குறிப்புச் சட்டகம்
- முன்னுரை
- பிறப்பு
- கண்ணதாசனின் சிறப்புகள்
- மணிமண்டபம்
- மறைவு
- முடிவுரை
முன்னுரை
உலகில் எத்தனையோ கவிஞர்கள் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். ஆனால் மறைந்தும் வாழ்கின்ற கவிஞர்களாக ஒரு சிலரே உள்ளனர். அதில் நான் விரும்பும் கவிஞரான கண்ணதாசனும் ஒருவராவார்.
இவரது கவிவரிகளின் தாக்கம் இன்றும் எம்மை விட்டு அகலாதவையாகவுள்ளன. வாழ்வில் தான் கண்ட அனுபவபங்கள் அனைத்தையும் அழகான கவிநயத்துடன் படைத்துள்ளார்.
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.” என்ற தன் கவி வரிகளுக்கிணங்க இன்றும் எம் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இக் கட்டுரையில் நான் விரும்பும் கவிஞர் கண்ணதாசன் பற்றிப் பார்ப்போம்.
பிறப்பு
1972 ஜூன்24 காரைக்குடி பக்கத்தில் சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் தான் “முத்தையா” என்று அழைக்கப்படும் கவிஞர் கண்ணதாசன் ஆவார். இவரது தந்தை பெயர் சாத்தப்பன் செட்டியார் தாயின் பெயர் விசாலாட்சி என்பதாகும்.
தனது ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியில் தொடர்ந்தார். எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்ற கண்ணதாசன் பின்னாளில் மிகச் சிறந்த கவிஞரானார். இவரது கவிப் படைப்புகளால் தமிழ்த் திரையுலகம் பெருமை பெற்றது என்றால் அது மிகையாகாது.
1943ஆம் ஆண்டு திருமதி என்னும் பத்திரிகையில் வேலை கேட்டுச் சென்ற போது நேர்காணலில் அந்தப் பத்திரிகையின் அதிபருக்கு அவர் கூறிய பெயரே கண்ணதாசன் என்பதாகும். அக்காலத்தில் தாசன் என முடிவடையும் பெயர் மதிப்புக்குரியதாகப் பார்க்கப்பட்டது. முத்தையா என்பவர் கண்ணதாசனானது இவ்வாறுதான்.
கண்ணதாசனின் சிறப்புகள்
தத்துவப்பாடல், பகுத்தறிவுப் பாடல்கள், பக்திப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், காதல் பாடல்கள், சமுதாய சிந்தனைப் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், புதினங்கள், வினா விடைகள், உரை நூல்கள், சமயம், தன்வரலாறு எனப் பல்வேறு வகையிலும் தனது எழுத்தாற்றலை மிகப்படுத்தினார்.
எத்தனையோ பேர் இதுவரை திரைப் பாடல்கள் எழுதியிருந்தும் எல்லோரும் கண்ணதாசன் பெயரை மட்டும் நினைவில் கொள்ள காரணம் இவர் திரைப்படப் பாடல்களுடன் நின்றுவிடாது இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், அரசியல், ஆன்மீகம், பத்திரிகைகள், சொற்பொழிவுகள், போன்ற பல்வேறு துறைகளில் திறமை பெற்றிருந்தமையாலேயாகும்.
உரைநடையில் புதிய நடையைக் காட்டியவர் கண்ணதாசன். கவிஞர்களைப் பாராட்டும் பண்பு கண்ணதாசனுக்கு உண்டு.
மணிமண்டபம்
தமிழ்நாட்டு அரசினால் கவியரசு கண்ணதாசன் அவர்களை போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி என்னும் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
மணி மண்டபமானது 1981 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு 1990 முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1992இல் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மணி மண்டபத்தில் மேல் தளத்தில் அரங்கமும் கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. மேலும் இவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாகவும் வைக்கப்பட்டுள்ளது.
மறைவு
பிறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் இறப்பு நிச்சயிக்கப்படுகின்றது. அந்த வகையில் பெருமைக்குரிய கவியரசு கண்ணதாசன் அவர்கள் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று அமெரிக்க மருத்துவமனையில் இறைபதம் அடைந்தார்.
அவரது சடலம் அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் அஞ்சலிக்குப் பின்னர் அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
முடிவுரை
இவர் தனது வாழ்வில் பல்வேறு வகையில் இன்னல்களை எதிர்நோக்கிய போதும் அதில் துவண்டுவிடாமல் உயர்வடைந்துள்ளார். வாழ்வின் வலிகளை சாதனைகளாக மாற்றிய பெருமைக்குரிய கவியரசர் கண்ணதாசன் ஆவார்.
இவர் மனித வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கின்றார். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” என்று அவர் எழுதி வைத்ததை போன்று இன்றும் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
You May Also Like: