நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

Nugarvor Pathukappu Katturai In Tamil

இந்த பதிவில் “நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்களுக்குத் தேவையானவற்றை விலைகொடுத்துப் பெற்று அனுபவிப்பதே ‘நுகர்வு’ ஆகும்.

நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நுகர்வு
  3. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் தோற்றம்.
  4. இந்தியாவின் தேசிய நுகர்வோர் தினம்
  5. நுகர்வோர் குறைகளுக்குத் தீர்வுக்கான வழிமுறைகள்.
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய காலத்தில் வணிகத்துறை இன்றியமையாததும் பெரிதும் வளர்ச்சி பெற்ற துறையாகவுமுள்ளது. அந்தவகையில் பல நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் வாடிக்கையாளரே அடித்தளம் ஆவார்.

ஒரு நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக நுகர்வோரின் தேவைகளை அடையாளம் கண்டு நிறைவேற்றுவதாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு உற்பத்தி, வணிக நிறுவனத்துக்கும் பெரிய சந்தை உருவாகியிருக்கிறது.

இன்றைய உலகில் எங்கும் எதிலும் கலப்படம், சுரண்டல், ஊழல், ஏமாற்று வேலைகள் போன்ற செயல்கள்தான் அன்றாடம் அரங்கேறுகின்றன. இதனால் நுகர்வோர்களாகிய பல அப்பாவி மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் நுகர்வோர் பாதுகாப்பு என்பது மிக அவசியமாகிறது. நுகர்வோர் பாதுகாப்பு பற்றி இக்கட்டுரையில் காணபோம்.

நுகர்வு

நுகர்வு வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. நீரின்றி அமையாது உலகு என்பது போல நுகர்வின்றி எந்த மனிதனுடைய வாழ்வும் அமையாது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்களுக்குத் தேவையானவற்றை விலைகொடுத்துப் பெற்று அனுபவிப்பதே ‘நுகர்வு‘ ஆகும்.

நுகர்வுச் செயல்பாடு என்பது விற்பனையாளர் சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துபவர் நுகர்வோர் என வரைமுறை செய்யப்படுகிறார்.

அவ்வகையில் நாட்டில் சாதாரண குடிமகன் முதல் ஜனாதிபதிவரை அனைவருமே நுகர்வோராவர்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் தோற்றம்

அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி என்பவர் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவந்தார். 1985-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஐ.நா. சபை நிறைவேற்றியது.

இந்த வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, தேவையான கொள்கை மாற்றங்கள், சட்டத்திருத்தங்களைச் செய்து நுகர்வோர் பாதுகாப்பை ஊக்குவிக்குமாறு உறுப்பு நாடுகளை ஐ.நா. சபையின் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய சட்டங்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் தேசிய நுகர்வோர் தினம்

இந்தியாவின் டிசம்பர் 24, 1986-இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. நுகர்வோர் உரிமைகளைச் சிறப்பாகவும், விரைவாகவும் பாதுகாப்பதற்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது.

ஆண்டுதோறும் டிசம்பர் 24-ம் தேதி நுகர்வோர் உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் பதிவு செய்யப்பட்டதில் 90% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

நுகர்வோர் குறைகளுக்குத் தீர்வுக்கான வழிமுறைகள்

மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்தனைச் சகித்துக் கொண்டு அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பாலான உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் கலப்படங்கள் கலந்து தயாரித்து விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள்.

நுகர்வோர் குறைகள் தீர்க்க பல அரசு அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்ய முடியும்.

முடிவுரை

வணிகம் இன்றைய காலத்தில் முக்கிய துறையாகவுள்ளது. மனிதகுல இருப்பிற்கு வணிகம் முக்கிய பங்காற்றுகின்றது.

எனவே அனைத்து வணிக நிறுவனங்களும் நுகர்வோர் பாதுகாப்பில் அக்கறை கொண்டு செயல்பட்டால் வர்த்தகம் பெருகி லாபம் கிடைப்பதுடன் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.

You May Also Like:
மருத்துவ துறையின் வளர்ச்சி
உணவு கலப்படம் கட்டுரை