நாம் வாழக்கூடிய நவீன உலகானது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றமையினால் இங்கு வாழக்கூடிய மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதனை காணக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுகின்றமையால் அங்கு சேரக்கூடிய குப்பை நெகிழியும் அதிகமாகவே காணப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே நெகிழி இல்லா உலகை கட்டி எழுப்புவதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.
இதன் முதற்கட்டமாகவே ஒவ்வொரு நாட்டின் பிரதேச அடிப்படையிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதனை காணலாம்.
அந்த வகையில் “நெகிழி இல்லா மதுரை” என்பது மதுரையை மையமாகக் கொண்டு மாசு இல்லாத மதுரையை உருவாக்குவதற்கான ஒரு ஏற்பாடாகவே காணப்படுகின்றது.
நெகிழி இல்லா மதுரை கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நெகிழியின் வகைகள்
- நெகிழியின் பாதகங்கள்
- நெகிழியின் மீதான தடை
- நெகிழிக்குப் பதில் மாற்று வழிகள்
- முடிவுரை
முன்னுரை
இன்றைய இந்தியாவில் நவீனம் என்ற பெயரில் நெகிழி பொருட்களின் பாவனை மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. அவை மனித வாழ்வோடு இரண்டர கலந்திருப்பதனையும் காண முடியும்.
இதன் அடிப்படையிலேயே மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகம் நெகிழி இல்லா மதுரையை உருவாக்கும் நோக்கோடு பொதுமக்களின் ஆதரவையும் வேண்டி நிற்பதனை காணலாம். இங்கு நெகிழி எனப்படுவது மண்ணினுள் மங்கிப்போகாமல் மண்ணுக்கு ஆபத்தினை விளைவிக்க கூடிய பொருட்களையே ஆகும்.
அதாவது பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள், பொலீத்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் குவளைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். ஆகவே இவ்வாறான நெகிழிகளில் இருந்து மதுரையை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த “நெகிழி இல்லா மதுரை திட்டம்” கொண்டுவரப்பட்டுள்ளது.
நெகிழியின் வகைகள்
பொதுவாக வெப்பத்தினால் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழியை இருவகையாக நோக்க முடியும். அவை இளகும் நெகிழி, இறுகும் நெகிழி என்பனவாகும்.
இதன் அடிப்படையில் இளகும் நெகிழிகள் என்பவை மீள் சுழற்சிக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிகள் ஆகும். இறுகும் நெகிழிகள் என்பவை மீள் சுழற்சிக்கு பயன்படுத்தப்பட முடியாதவை ஆகும்.
அதாவது 33 வீதமான நெகிழிப் பொருட்கள் மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்பட முடியாதவைகள் ஆகும். இவை ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டால் 2000 வருடங்களுக்கு மேல் அதே நிலையில் இருக்கும் என ஆய்வுகளின் வழி தெரிய வந்துள்ளன.
நெகிழியின் பாதகங்கள்
நெகிழி பயன்பாடுகள் அதிகமாக காணப்படும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனா, இந்தியா என்பன முதல் மூன்று இடங்களிலும் காணப்படுகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பொலித்தீன் தயாரிக்கப்படுவதனையும் அவை மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதனையும் காணலாம்.
இவ்வாறாக நெகிழி பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதனால், அவை மனிதனுடைய இரத்தம் மற்றும் திசுக்களில் பாதிப்புகளை செலுத்துவதன் ஊடாக புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நாளம் இல்லா சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
இன்னும் இவ்வாறான நெகிழிகளின் பாதகங்களாக சூழல் மாசு, நீர் மாசு, நிலமாசு, மற்றும் வளிமாசு போன்ற அனைத்தும் இடம்பெறுவதையும் நாம் காண முடியும்.
நெகிழியின் மீதான தடை
2022ம் ஆண்டில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு பணிக்குழு கூட்டத்தில், எஸ். அனிஷ்சேகர் தலைமையில் இந்த மதுரை மாவட்டத்தில் நெகிழிகளின் மீதான தடை விதிக்கப்பட்டது.
அதாவது ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு விட்டு தூக்கி எறியப்படும் பொலீத்தீயின் பைகள், பிளாஸ்டிக் உணவுப் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள், நெகிழி உரைகள் மற்றும் நெகிழி நீர் நிரப்பி பைகள் போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நெகிழிக்குப் பதில் மாற்று வழிகள்
நெகிழி பொருட்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையான பொருட்களை உபயோகிப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகம் விழிப்புணர்வு ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் நெகிழிப் பைகளுக்கு பதிலாக துணி பைகள், சணல் பைகளை பயன்படுத்துதல் மற்றும் நெகிழி உரைகளுக்கு பதிலாக வாழையிலை, தாமரை இலை மற்றும் பீங்கான், தட்டுகள் போன்றனவும், நெகிழி போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி கண்ணாடி போத்தல்கள் என்பனவும் பயன்படுத்தப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமையினை நாம் இங்கு குறிப்பிட முடியும்.
முடிவுரை
நெகிழி இல்லா மதுரையை கட்டி எழுப்புவது அங்கு வாழக்கூடிய ஒவ்வொரு மக்களினதும் கடமையாகும்.
இதன் அடிப்படையில் மக்கள் மீள் சுழற்சிக்கு பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை மீள் சுழற்சிக்காக ஒப்படைப்பதோடு, அவ்வாறு மீள் சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பொருட்களை உபயோகிப்பதை மிகவும் தவிர்ந்து கொள்வதும் அவசியமானதாகும்.
இவ்வாறாக நாம் செயற்பட்டால் மட்டுமே நெகிழி இல்லாத மதுரையை கட்டியெழுப்ப முடியும்.
You May Also Like: