பகத்சிங் பற்றிய கட்டுரை

Bhagat Singh Katturai In Tamil

இந்திய விடுதலை போராட்டத்தில் பெரும் பங்காற்றிய “பகத்சிங் பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட்ட வீரர் பகத்சிங். இவரின் பெயர் வெறும் பெயரல்ல இந்திய மக்களின் உணர்ச்சி வேராகும்.

பகத்சிங் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பு
  3. இளமைக் காலம்
  4. விடுதலைப் போராட்டத்தில் பங்கு
  5. இறப்பு
  6. முடிவுரை

முன்னுரை

பகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து நாட்டிற்காக போராடி மடிந்து போனதால் இவர் சாஹீது பகத்சிங் என அழைக்கப்படுகிறார்.

ஆங்கிலேயர் ஆட்சியை வெளியேற்றி இந்தியாவை சுதந்திர நாடாக மாற்றுவதற்கு ஆயுதம் ஏந்திப் போராடிய புரட்சி அமைப்பான “இந்துஸ்தான் சோசலிச குடியரசு” அமைப்பின் தலைவர்களுள் ஒருவராவார்.

கடுமையான போராளியும் ஜனநாயகவாதியுமாகிய பகத்சிங் அவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மாவீரர் பகத்சிங் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு

பகத்சிங் அவர்கள் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லாயல்பூர் மாவட்டத்திலுள்ள பங்கா என்ற ஊரில் சர்தார் கிஷன்சிங் என்பவருக்கும் வித்யாபதிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

இவர் ஒரு சீக்கிய குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரது குடும்பப் பின்னணியானது விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்டதாக காணப்பட்டதால் சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்று கொண்டவராக வளர்ந்தார்.

இளமைக் காலம்

பகத்சிங் அவர்கள் சிறு வயதிலேயே நாட்டுப்பற்று கொண்டதால் விடுதலைப் போராட்டத்திற்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்தார். இவர் தனது தொடக்கப் பள்ளியை டி.ஏ.வி பள்ளியில் தொடங்கினார்.

லாலா லஜபதிராய் மற்றும் ராஷ் பிஹாரி போன்றோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி நட்பு கொண்டிருந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை இவர் மனதை வெகுவாக பாதித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் இவர் மனதில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது.

இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டு வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கு

தனது 13வது வயதில் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1922ல் கோரக்பூரில் நடந்த சௌரி சௌரா வன்முறைக்கு எதிராகக் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திய போது பெரிதும் ஏமாற்றம் அடைந்து, அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் அடைய முடியாது, ஆயுத வழியில் மட்டுமே சுதந்திரம் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இதன் பின் 1924 இல் சச்சீந்திரநாத் சன்யா என்பவரால் தொடங்கப்பட்ட “ இந்துஸ்தான் குடியரசு கழகம் ” எனும் அமைப்பில் இணைந்தார்.

1926 இல் பாரத்சபா என்ற இளைஞர் அமைப்பை நிறுவி விடுதலை போராட்டத்தில் பெரும் பங்களிப்பு செய்தார்.

இறப்பு

காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாக இருந்த காவல் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ஆங்கிலேய அரசு இவருக்கு மரண தண்டனை விதித்தது. இதன் காரணமாக 1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி அன்று தனது 24 ஆவது வயதில் தூக்கிலிடப்பட்டு இறந்தார்.

முடிவுரை

இந்திய விடுதலைக்காய்த் தன் மரணத்தை பரிசாக கொடுத்த போராளி பகத்சிங் ஆவார். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட்ட வீரர் பகத்சிங் என்பது வெறும் பெயர் அல்ல. இந்திய மக்களின் விடுதலைக்கான வேராகும்.

You May Also Like:

இமானுவேல் சேகரன் வாழ்க்கை வரலாறு
ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு