இந்த பதிவில் இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்றான “மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள் கட்டுரை” பதிவை காணலாம்.
இறப்பு விகிதத்தின் குறைவும், பிறப்பு விகிதத்தின் அதிகரிப்பும் மக்கள் தொகை பெருக்கத்தின் முக்கிய காரணமாக உள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மக்கள் தொகை வெடிப்பு என்றால் என்ன
- மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணங்கள்
- மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள்
- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
பூமியின் மிக முக்கியப் பிரச்னையாக மக்கள் தொகை பிரச்சனை உள்ளது. மனித இனத்தின் பெருக்கம் இந்தப் பூமியில் வாழ்கின்ற மற்ற அனைத்து உயிரினங்களுக்குமே உணவு மற்றும் வாழிடப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்ற அளவுக்கு அதிகமாகிவிட்டது.
இக்கட்டுரையில் இன்றைய உலகம் எதிர்நோக்கும் பாரிய சவால்களில் ஒன்றான மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
மக்கள் தொகை வெடிப்பு என்றால் என்ன
மக்கள் தொகை வெடிப்பு என்பது மக்கள் தொகை வளர்ச்சியில் திடீர் எழுச்சியாகும். இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னரே மக்கள் தொகையின் அதிகரித்த வளர்ச்சியினை காண முடிகின்றது.
தற்போது உலக மக்கள் தொகை எண்ணிக்கை 7 பில்லியனாகும். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை பல மில்லியனால் அதிகரிக்கின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று உலக நாடுகள் பலவும் மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணங்கள்
இறப்பு விகிதத்தின் குறைவும், பிறப்பு விகிதத்தின் அதிகரிப்பும் மக்கள் தொகை பெருக்கத்தின் முக்கிய காரணமாக உள்ளது. அதாவது மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித இறப்பு விகிதம் குறைந்ததும், பிறப்பு விகிதத்தில் கட்டுப்பாடு இல்லாததுமே இந்த அபரிமிதமான மக்கள் தொகை பெருக்கத்திற்கு பிரதான காரணமாகும்.
இள வயதுத் திருமணம் காரணமாக மகப்பேறு காலம் அதிகரிக்கிறது. இதனால் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க குழந்தைகளினதும் முதியவர்களினதும் எண்ணிக்கை
அதிகமாகின்றது.
இதனால் சத்துணவு, மருத்துவ வசதி, பொதுச் சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலை ஏற்படுகின்றது.
மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள்
வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு, போன்றவை மட்டுமல்லாது தண்ணீர்ப் பஞ்சம் அதாவது மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க காடுகள் சுருங்கி, நீர் ஆதாரம் வெகுவாகக் குறைந்தும் வருகிறது.
மக்கள் தொகையின் கட்டுப்பாடற்ற அதிகரிப்பால் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பாதிப்படையும். மேலும் சுற்றுச்சூழல் மீது பெரும் அழுத்தத்தை மக்கள் தொகைப் பெருக்கம் உண்டாகிக்கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மக்களுக்குக் கல்வி அளிப்பது, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பிறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்.
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் போது மக்கள் தொகை அதிகரிப்பு குறைக்கப்படும்.
அரசு சட்டங்களைப் பிறப்பிப்பதன் மூலம் கணிசமான அளவு மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்படும். சீனா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு தொடர்பான சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முடிவுரை
மனித இனத்தின் எண்ணிக்கை, இந்தப் பூமியினால் சுமக்க முடியாத அளவுக்கு எல்லைமீறிக் கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் தொகை பெருக்கத்தை குறைத்து வளமுடன் வாழ அனைவரும் முன்வரவேண்டும்.
பூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல. மற்ற அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்பதை உணர்ந்து மக்கள் விழிப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
You May Also Like : |
---|
உலக மக்கள் தொகை தினம் |
சூழல் மாசடைதல் கட்டுரை |