மருத்துவ துறையின் வளர்ச்சி கட்டுரை

Maruthuva Thurai Katturai In Tamil

இந்த பதிவில் உயிர் காக்கும் “மருத்துவ துறையின் வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

மருத்துவமானது நோய்களை கண்டறியவும் அவற்றை குணப்படுத்தவும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்ற அறிவியல் செயற்பாடு எனலாம்.

மருத்துவ துறையின் வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மருத்துவம்
  3. மருத்துவ துறையின் அவசியம்
  4. மருத்துவ துறையின் வளர்ச்சியில் தொழில்நுட்பம்
  5. மருத்துவ துறையின் வளர்ச்சியின் நன்மைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய நவீன உலகானது பல்துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றமையை காணலாம். அவ்வகையிலேயே மருத்துவத்துறையின் வளர்ச்சியானது அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது.

இன்று மருத்துவத்துறை வளர்ச்சி காரணமாக எண்ணிலடங்கா சாதனைகள் உலகம் கண்டு வருகின்றது. அதன் நன்மை, தீமை இரண்டையும் கலந்தே உலக மக்கள் அனுபவித்து வருகின்றமையும் யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

உயிர்காக்கும் உன்னத துறையான மருத்துவ துறையின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மருத்துவம்

நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் சேர்ந்ததே மருத்துவம் ஆகும். மருத்துவமானது நோய்களை கண்டறியவும் அவற்றை குணப்படுத்தவும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் உதவுகின்ற அறிவியல் செயற்பாடு எனலாம்.

மருத்துவம் என்பது மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், நோய் வராமல் தடுத்தல், நோய்களிலிருந்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு உடல்நலச் செயல்முறைகளை உள்ளடக்கும்.

மருத்துவத்துறையின் அவசியம்

மனித உயிர்களை காத்துக்கொள்ளவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் மருத்துவத்துறை இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. நோய்களை அண்டவிடாமல் பாதுகாக்கவும் புதிய நோய்கள் மற்றும் உயிர் கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கவும் மருத்துவம் முக்கியமானதாகும்.

சுகாதார முறையைக் கடைப்பிடிக்கவும் சுகாதாரத்தினைப் பேணவும் மருத்துவத்துறை இன்றியமையாததாகும்.

மனநோய்கள், மன அழுத்தங்களில் இருந்து பாதுகாப்புப் பெற்று சுமுகமான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை வாழ மருத்துவத்துறை இன்றியமையாததாகும்.

மருத்துவ துறையின் வளர்ச்சியில் தொழில்நுட்பம்

இன்று மருத்துவத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. மருத்துவத் துறையில் பல விதமான சிகிச்சை முறைகள் நவீன கருவிகள் முதலானவை பயன்படுத்தப்பட்டு வருவதை காணலாம்.

அறுவை சிகிச்சைகள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பத்தில் எக்ஸ்ரே பின்னர் தற்போது சி. டி ஸ்கேன் என தொழில்நுட்பங்கள் வளர்ந்திருப்பதை காணமுடிகின்றது.

மருத்துவ முறைகளின் அடிப்படையிலிருந்து வளர்ந்த இன்றைய நவீன மருத்துவம் அதிலுள்ளவர்களின் விஞ்ஞான பூர்வமான தேடல்களாலும், ஆய்வுகளாலும் இன்னும் இன்னும் வளர்ந்து வருகின்ற ஒரு பேரரசாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பேரரசுக்குள் சில பண முதலைகளும், மருத்துவ மாஃபியாக்களும் தங்களது வியாபாரத்தை விருத்தி செய்யும் வழி வகைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது என்பதுதான், இதன் மற்றைய பக்கத்தில் உள்ள கசப்பான உண்மையாக இருக்கிறது.

மருத்துவ துறை வளர்ச்சியின் நன்மைகள்

முன்னைய காலங்களில் சாதாரண வயிற்று வலியைக் குணப்படுத்த முடியாத காரணத்தினாலும் அதற்கு உரிய சிகிச்சை கிடைக்காத காரணத்தாலும் பலர் இறந்தனர்.

ஆனால் தற்போது அனைத்து நோய்களுக்கும் எளிய முறையில் சிகிச்சை கிடைக்க பெற்று வருகின்றது. பல வகையான அறுவைச் சிகிச்சை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

அவையவங்களை இழந்தவர்களுக்கும், உடலில் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கும் மருத்துவம் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

முடிவுரை

நவீன வளர்ச்சியில் மிகவும் பயனுள்ளதும் தேவைப்பாடானதுமாகக் காணப்படுவது மருத்துவத்துறையின் வளர்ச்சி ஆகும்.

உயிர்காக்கும் உன்னத துறையான மருத்துவத் துறையின் வளர்ச்சியை மென்மேலும் அதிகரிப்பதன் மூலம் மனித குலம் பல நன்மைகளை அடையும் என்பதில் ஐயமில்லை.

You May Also Like:
ஒழுக்கம் பற்றிய கட்டுரை
மின்சாரம் பற்றிய கட்டுரை