மழை நீர் உயிர் நீர் கட்டுரை

Mazhai Neer Uyir Neer Katturai In Tamil

இந்த பதிவில் “மழை நீர் உயிர் நீர் கட்டுரை” பதிவை காணலாம்.

நீரானது மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளினதும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும்.

மழை நீர் உயிர் நீர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நீரின் முக்கியத்துவம்
  3. நீரும் மனிதனும்
  4. மழை நீரின் பயன்கள்
  5. மழைநீர் சேகரிக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இயற்கை நமக்களித்த அனைத்து படைப்புகளும் அற்புதமானவையே. அதிலும் மனிதனின் இருப்புக்கு நீர் இன்றியமையாததாக உள்ளது.

அதனால்தான் “நீரின்றி அமையாது உலகு” என்று கூறுவார்கள். அந்தவகையில் மழைநீர் மனிதனின் உயிர் நீராகும்.

மழையின்றி மனிதன் இல்லை என்றே கூறவேண்டும். உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒன்றை சார்ந்து வாழ்கின்றன.

மனிதனும் தனது வாழ்நாள் முழுவதும் நீரைச் சார்ந்தே வாழ்கின்றான். இக்கட்டுரையில் மழை நீர் உயிர் நீர் பற்றி நோக்கலாம்.

நீரின் முக்கியத்துவம்

நீரானது மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளினதும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உயிர் நாடியாக விளங்குகின்றது.

நமக்கு உணவளிக்கும் விவசாயத்தை மேற்கொள்வதற்கும் நீர் முக்கியம் பெறுகின்றது. தொழிற்சாலை இயங்குவதற்கும், உற்பத்திகளைத் தடையின்றி மேற்கொள்வதற்கும் நீரே மூல காரணமாக அமைகின்றது. எமது சுகாதார செயற்பாடுகளுக்கும் நீர் அவசியமாகும்.

நீரும் மனிதனும்

நீருடன் மனித உறவானது இரண்டறக் கலந்துள்ளது. அதனால்தான் நம் முன்னோர்கள் நீர் கிடைக்கும் ஆறுகள், குளங்கள், ஏரிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து பேணிக்காத்தனர்.

நீரின்றி மனிதன் இல்லை. மனித உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது. நீர் மனித வாழ்வின் அன்றாடத் தேவைகளில் மிக அடிப்படையானது.

மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தினமும் நீரை அதிகளவில் பருக வேண்டுமென்று மருத்துவம் கூறுகிறது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை நீருடன் தொடர்புபட்டே வாழ்கின்றான்.

மழை நீரின் பயன்கள்

நாம் நீரை ஆறு, ஏரி, குளம், நதி போன்றவற்றிலிருந்து பெறுகிறோம். இவற்றிலிருந்து நீர் வற்றாமல் கிடைப்பதற்கு மழை நீரே மூலகாரணம் ஆகும்.

விவசாயத்திற்கு மழை நீர் பயன்படுகின்றது. நீர் இல்லாமல் வறண்ட நிலங்களில் விவசாயம் என்பது எட்டாத கனிதான்.

மின்சார உற்பத்திக்கும் மழை நீரின் பங்களிப்பு முக்கிய காரணமாய் அமைகிறது. பண்டைய காலந்தொட்டு இன்றைய காலம் வரைக்கும் போக்குவரத்துக்கு நீர் பெரும் பங்காற்றுகிறது.

மழைநீர் சேகரிக்கும் வழிமுறைகள்

தரைவழியாகவோ கட்டடங்களின் மேற்கூரைகள் வழியாகவோ மழை நீரை சேமிக்கலாம். குளங்கள், குட்டைகள் கிராமங்களிலிருந்தால் அவற்றை 3 வருடங்களுக்கு ஒரு முறை தூர்வாரி சுத்தம் செய்யவேண்டும்.

தரைத்தள தொட்டிகளை அமைத்து மழை நீரை சேமிக்கலாம். மழை நீரைச் சேமித்தால் நீர்ப்பற்றாக்குறை தீரும் விவசாயத்திற்குத் தடையின்றி நீர் கிடைக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவே மழை நீரைச் சேமிப்பதில் அதிகம் கவனம் கொள்ள வேண்டும்.

முடிவுரை

அனைத்து உயிரின வாழ்க்கைக்கும் இன்றியமையாததாக விளங்கும் நீரானது இன்று பற்றாக்குறையை சந்தித்து வருகின்றது. இது மனித குலம் எதிர்நோக்கும் பாரிய சவாலாகும்.

எனவே நீர்ப் பாதுகாப்பு என்பது முக்கியமாகின்றது. இயற்கை நமக்கு தரும் மழை நீரை சேமித்து பாதுகாப்பதன் மூலம் நீர் பற்றாக்குறையை தடுப்பதோடு எதிர்கால சந்ததியினருக்கு நீர் பற்றாக்குறை அற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

மழை நீர் நம் உயிர் நீர் என்பதை மறந்து விடாமல் மழைநீர் சேமிப்போம். வளம் பெறுவோம்.

You May Also Like:
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை