தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாக விளங்கும் மாட்டுப் பொங்கல் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.
இந்த பண்டிகை பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகின்றது. இது தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை தெளிவாக எடுத்து காட்டுகின்றது.
மாட்டுப் பொங்கல் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- அறிமுகம்
- மாட்டுப் பொங்கலின் சிறப்புக்கள்
- கோ பூஜை
- மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
- ஜல்லிக்கட்டு
- முடிவுரை
அறிமுகம்
முன்னுரை மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இந்த மாட்டுப் பொங்கலானது பட்டிப் பொங்கல் என்றும் கன்றுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகின்றது.
தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப்பொங்கல் நாடு முழுவதும் தமிழர்களால் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
மக்களுடன் ஒன்றி வாழ்வதாலும்⸴ உழவுக்கு உயிரூட்டுவதாலும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாடுவது தமிழர்களின் கலாச்சார பண்புகளில் சிறப்பான ஒன்றாகக் காணப்படுகின்றது. மாட்டுப் பொங்கல் பற்றி இக்கட்டரையில் காண்போம்.
மாட்டுப் பொங்கலின் சிறப்புகள்
புலவர்களின் உயிர் தோழனாக இருக்கும் கால்நடைகளைப் போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி விருந்து படைத்து நன்றிக்கடன் செய்யும் வகையில் கொண்டாடப்படுவது இந்நாளின் சிறப்பாகும்.
விவசாயத்திற்கு பயன்படும் உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம்⸴ குங்குமம் பூசி சிறப்பிப்பர். இந்நாளில் ஜல்லிக்கட்டு நிகழ்வும் நடாத்தப்படுகின்றது. இந்நாளில் இளம் காளையர்கள் நிஜக் காளைகளை அடக்கும் விளையாட்டு இடம்பெறும். அங்கா நல்லுர்⸴ பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்று விளங்குகின்றது.
கோ பூஜை
தேவாசுரர்கள் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து தோன்றியவர் தான் காமதேனு. அவளுடைய சந்ததி வாழும் லோகமே பூலோகம் ஆகும். இங்குதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா⸴ ராதை மற்றும் கோபியர்களுடன் ஆனந்தமாய் வாழ்கின்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.
காமதேனுவின் சந்ததிகள் தான் பசுக்கள் ஆகும். பசுக்களின் பாலினாலும்⸴ நெய்யினாலும் யாகங்கள் செய்யப்படுகின்றன. இப்பொழுதும் இப்படிப்பட்ட யாகங்கள் செய்வதனாலேயே தான் மழை பொழிகிறது என்று புராணங்கள் கூறுகின்றன.
பசுவின் பால்⸴ தயிர்⸴ மோர்⸴ நெய் ஆகியவை நமக்கு பல வழிகளிலும் பயன்படுகின்றன. அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு தாயை போல் அனைத்தையும் அளிப்பதால் தான் கோமாதா என்று கொண்டாடுகின்றனர்.
அப்படிப்பட்ட பசுவைப் பூஜித்து நைவேத்தியம் படைத்து நன்றியை செலுத்தும் பூஜையே கோ பூஜை ஆகும்.
மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
மாட்டுப் பொங்கலின் போது மாடுகளை குளிப்பாட்டி விபூதிக் குறி வைத்து சந்தனம்⸴ குங்குமம்⸴ பொட்டு இட்டு மலர் சாத்தி அல்லது மலர் மாலை சாத்தி மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி⸴ சலங்கை அணிவித்து அலங்கரிப்பர்.
மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து பொங்கல்⸴ பழம்⸴ கரும்பு போன்றவற்றை உண்ணக் கொடுத்து தாமும் உண்டு மகிழ்ந்து மாட்டுப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.
ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய மற்றுமொரு விடயம் ஜல்லிக்கட்டு ஆகும். இளம் காளையர்கள் நிஜக் காளைகளை அடக்கும் விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடாத்தப்படுகின்றது. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடாத்தப்படும் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு என்ற பெயரில் நடாத்தப்படுகின்றது.
முடிவுரை
தமிழ்ப் பாரம்பரியங்களும்⸴ பண்டிகைகளும் மிகவும் சிறப்புக்குரியவையாகும். தமிழர்களின் நன்றி மறவாமைப் பண்பை எடுத்தியம்பும் வகையில் இந்த மாட்டுப்பொங்கல் காணப்படுகின்றது.
நம் முன்னோர் வழி நாமும் நடந்து எமது பண்பாட்டையும்⸴ கலாசாரத்தையும் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிற்கும் அதனை எடுத்துச் செல்வோம்.
You May Also Like: