மின்சாரம் பற்றிய கட்டுரை

Minsaram Katturai In Tamil

இன்று அத்தியாவசிய தேவைப்பாடுகளில் ஒன்றாக காணப்படும் “மின்சாரம் பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

மின்சாரம் இல்லையென்றால் இவ்வுலகே இயங்காது. உலகமே இருளில் மூழ்கி விடும். அந்த வகையில் மின்சாரம் இன்று அத்தியாவசிய தேவையாக காணப்படுகின்றது.

மின்சாரம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மின்சாரத்தின் அவசியம்
  3. மின்சாரத்தின் நன்மைகள்
  4. மின்விரயம்
  5. மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

ஆதிகாலத்தில் நெருப்பு மனிதனுக்கு வெளிச்சமாய் இருந்தது. தற்காலத்தில் மின்சாரம் மனிதனுக்கு வெளிச்சமாய் இருக்கின்றது. நாள்தோறும் எமக்கு மின்சாரம் தேவை.

மின்சாரம் இல்லையென்றால் இவ்வுலகே இயங்காது உலகமே இருளில் மூழ்கி விடும். அந்த வகையில் மின்சாரம் இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. மின்சாரம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மின்சாரத்தின் அவசியம்

இன்று நமது அன்றாட தேவைகளுக்கு மின்சாரம் மிகமிக அவசியமாகின்றது. வீட்டில் பல உபகரணங்களை பாவிக்கின்றோம். அவற்றில் மின் உபகரணங்கள் அதிக பாவனைக்கும் அன்றாட பாவனைக்கும் உட்படுகின்றன. இவற்றின் இயக்கத்திற்கு மின்சாரம் அவசியமாகின்றது.

வீட்டில் சமையல் வேலைகளை இலகுபடுத்துவதற்கு மின்சாரம் அவசியமாகின்றது. பொழுது போக்கு சாதனங்களான தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்ற உபகரணங்களை இயங்குவதற்கும் மின்சாரம் தேவைப்பாடாக உள்ளது.

தொழிற்சாலைகள் இயங்குவதற்கும் தொழில்துறையில் வேலைகள் தடைப்படாமல் இருப்பதற்கும் போக்குவரத்தை மேற்கொள்ளவும் மின்சாரம் அவசியமாகின்றது.

மின்சாரத்தின் நன்மைகள்

மின்சாரம் பல பயன்களை நமக்கு அளிக்கின்றது. மின் விளக்குகள் ஒளிர்வதற்கு மின்சாரம் உதவுகின்றது. இதன் மூலம் நமக்கு வெளிச்சம் கிடைக்கின்றது.

மின் உபகரணங்கள் உட்பட இயந்திரங்களின் செயற்பாட்டிற்கு பங்களிப்புச் செய்கின்றது.

மின்சார தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சமூகத்தையும் அறிவியலையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றது.

போக்குவரத்து முதல் ஒளியூட்டல், தொலைத்தொடர்பு, கணிப்பு என பல தேவைகளின் பயன்பாட்டிற்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மின்விரயம்

அன்றாடம் நமது பாவனையின் போது மின்சாரம் அதிக அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றது. அதிலும் பல சமயங்களில் மின்சாரம் விரயமாவதை காண முடிகின்றது.

எமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்காக மின் உபகரணங்களை பயன்படுத்தி விட்டு அக்கறையின்றி செயற்படுவதன் மூலம் மின்விரயம் ஏற்படுகின்றது.

குறிப்பாக ஆளிகளை பாவனையின் பின்னர் நிறுத்தாமல் விடுதல் தேவைக்கதிகமாக மின்குமிழ்களைப் பாவித்தல், வெளிச்சம் வந்ததன் பின் குமிழ்களை அணைக்காது அப்படியே விடுதல்,

மின்விசிறிகளை தேவையின் பின்னர் அணைக்காது விடுதல் போன்ற பல சந்தர்ப்பங்களில் மின் விரயமாகின்றது. இவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் வீண் விரயத்தைத் தடுக்க முடியும்.

பல கோடி மக்களுக்காக அதிகளவான செலவினை செய்து அரசாங்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நமக்கு அளிக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு நாம் கவனத்துடனும் பொறுப்புடனும் செயற்படுவது அவசியமாகும்.

மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகள்

மின்சாரத்தை நாம் சேமிக்க பல வழிகள் உண்டு அவ்வகையில் மின் பாவனைக்கு பின்னர் ஆளிகளை சரியாக மூடுதல் மூலம் அதிகளவு மின்விரயத்தை தவிர்க்கலாம்.

அதிக அளவிலான மின்சாரத்தை எடுக்கும் அல்லது அதிக அளவு மின்சாரம் தேவைப்படும் மின் குமிழ்களை பாவிப்பதற்கு பதிலாக LED மின் குமிழ்களைப் பயன்படுத்தலாம்.

குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி திறத்தல் கூடாது. தேவையான பொருட்களை ஒரே தடவையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்தல் வேண்டும்.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகளவிலான சக்தி வளங்கள் தேவைப்படுவதால் மின் சிக்கனத்தை கடைப்பிடித்தல் வேண்டும்.

முடிவுரை

மின்சாரத்தின் தேவையானது மனித குலத்திற்கு இன்றியமையாததாக மாறிவிட்டது. அதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது.

எனவே இப்போதே விழித்துக் கொள்வோம். மின் சிக்கனம் தேவை என்பதை உணர்ந்து எதிர்கால உலகை இருளில் தள்ளாமல் ஒளிரச் செய்வோம்.

You May Also Like:

மின்சார பாதுகாப்பு கட்டுரை
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை