வாக்காளர் பற்றிய கட்டுரை

Vakalar Katturai In Tamil

இந்த பதிவில் நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் “வாக்காளர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

வாக்கு எனும் சக்தியினைக் கொண்டு ஜாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டை கட்டமைக்க உறுதி கொள்வோம்.

வாக்காளர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. வாக்களிப்பதன் முக்கியத்துவம்
  3. இந்திய வாக்காளர் உரிமைகள்
  4. இந்தியாவில் ஓட்டுரிமைக்காகப் போராடிய பெண்கள்
  5. வாக்காளர்களின் சக்தி
  6. முடிவுரை

முன்னுரை

தமிழ்நாட்டில் பராந்தக சோழன் காலத்திலேயே குடவோலை முறை மூலமே மக்கள் பிரதிநிதிகளை வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை தொடங்கிவிட்டது எனலாம். தமிழ் நாட்டில் தேர்தல் களம் 2500 ஆண்டுகள் பழமையானது என்ற வரலாறு எமக்குண்டு.

அந்தவகையில் தன் அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்களான வாக்காளர்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

வாக்களிப்பதன் முக்கியத்துவம்

ஓட்டு போடும் போது அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே, நமக்கான நல்ல பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது. எனவே சிறந்த பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிக்க வேண்டும்.

சமூகத்தை உயர்த்துவதற்கான உயர்ந்த தலைவனாக ஒருவரைத் தேர்தெடுப்பதற்கு வாக்களிப்பது முக்கியமாகும். வாக்களிப்பதன் மூலம் சமூக நலனுக்கான பல புதிய சட்டங்கள் பிறப்பிப்பதற்கு வழியேற்படுகின்றது.

இந்திய வாக்காளர் உரிமைகள்

இந்திய வாக்காளர்களுக்கு, பல்வேறு விதமான வாக்கு உரிமைகள் உள்ளன. 18 வயது நிரம்பிய எந்த ஓர் இந்தியக் குடிமகனும், தேர்தலின் போது வாக்களிக்க முழு உரிமையுடையவர் ஆவார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி, குற்ற வழக்குகள், சொத்துகள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள வாக்காளருக்கு முழு உரிமையுண்டு.

சுதந்திரமாக விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. பணம் கொடுத்து தனக்கு வாக்கு அளிக்கும்படி கட்டாயப்படுத்தவோ அல்லது வேறு ஒருவருக்கு வாக்கு அளிக்கக் கூடாது எனக் கட்டளையிடவோ இந்திய ஜனநாயகத்தில் இடமே இல்லை.

நம்மையும் நம் நாட்டையும் ஆளக்கூடிய நபரைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளர்களார்களுக்கு மட்டுமே உண்டு.

இந்தியாவில் ஓட்டுரிமைக்காகப் போராடிய பெண்கள்

இன்று அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. இந்நிலையை அடைவதற்காக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தினர்.

அந்தவகையில், இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோர் 1917 ஆண்டில் பெண்களின் ஓட்டுரிமைக்காக போராடிய போது, இந்திய பெண்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை என ஆட்சியாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

எனினும் 1920 – 1921 ஆண்டுகளில் திருவாங்கூர், கொச்சின், சென்னை, மும்பையில் பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடைத்தது. 1926 ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் எம்.எல்.ஏ, ஆக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

வாக்காளர்களின் சக்தி

வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது. மக்களின் வாக்களிப்பு சக்தியால் சக்தி வாய்ந்த அரசுகளும், தலைவர்களும் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.

புதிய சட்டங்கள் பிறந்திருக்கின்றன. பல சட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. வாக்காளர்களால் ஆட்சியைக் கவிழ்க்கவும், புதிய ஆட்சியை உருவாக்கவும் முடியும்.

வாக்காளர்கள் தங்களின் வாக்கு எனும் மாபெரும் சக்தியால் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டை கட்டமைக்கின்றனர்.

முடிவுரை

நம் ஜனநாயக நாட்டை சிறப்புப் பெறச் செய்வதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. நம்மையும் நம் நாட்டையும் ஆள்பவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். இதனைத் தீர்மானிப்பதற்கு நமக்கு கிடைத்த மாபெரும் ஆயுதமே ஓட்டு ஆகும்.

பணத்திற்கோ அல்லது பொருளுக்கோ விலை போகாமல் சரியான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வழிசெய்வது வாக்காளர்களாகிய எமது தலையாய கடமையாகும்.

வாக்கு எனும் சக்தியினைக் கொண்டு ஜாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டை கட்டமைக்க உறுதி கொள்வோம்.

You May Also Like :
என் கனவு இந்தியா கட்டுரை
தாய் நாடு பற்றிய கட்டுரை