இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும் கட்டுரை

Indraya Unavu Murai Essay In Tamil

உடல் நலத்திற்கு மிக முக்கியமான “இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும் கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

நலமான நோய்கள் அற்ற ஆரோக்கியமான உடல் நலத்துடன் வாழ்வதற்கு உணவு பழக்கம் மிக அவசியமாகும்.

இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தமிழர் உணவு முறை
  3. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்
  4. இன்றைய உணவுகளும் அதன் விளைவுகளும்
  5. உணவே மருந்து
  6. முடிவுரை

முன்னுரை

உணவு நம் உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகும். அதிலும் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம் உணவுப் பழக்கமே என்றால் அது மிகையாகாது. நமக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவினைப் போதுமான அளவு உட்கொள்தல் ஆரோக்கியமான உணவுப் பழக்கமாகும்.

ஆனால் இன்றைய உணவுப் பழக்கங்கள் அவ்வாறு அமைவதில்லை. நேரத்தினை மீதப்படுத்துவதற்காகவும்⸴ ருசிக்காகவும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கமே காணப்படுகின்றது.

இது ஆரோக்கியமற்ற உடல் நலத்திற்கு வழிவகுக்கின்றது. இன்றைய உணவு பழக்கவழக்கமும் ஆரோக்கியமும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தமிழர் உணவு முறை

தமிழர்களின் வாழ்வியல் முறையில் உணவு சார்ந்த கலாச்சாரம்⸴ உணவையே மருந்தாக பயன்படுத்திய முறை இருந்துள்ளன. இதற்கான ஆதாரமாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்ககால இலக்கியங்களில் காணலாம்.

ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூற்றுக்குத் தகுந்த எந்த உணவை எந்த பருவ காலத்தில் சாப்பிட வேண்டும் என்ற முறைகளெல்லாம் தமிழர்களுடைய வாழ்வியல் முறைகளில் உள்ளது.

வரகு⸴ திணை⸴ குதிரைவாலி⸴ சாமை இவற்றினையே தமிழர்கள் அதிகமாக உண்டனர். இதனால் வாழ்வும் ஆரோக்கியமாக அமைந்தது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்

நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறந்த உணவுப் பழக்கவழக்கம் அவசியமாகும். நாம் உண்ணும் போது அதிகமாக உண்ணக் கூடாது. பாதியளவு உணவு⸴ கால்பகுதி தண்ணீர்⸴ அடுத்த கால்பகுதி காற்றின் வருகைக்கு ஏற்றபடி வயிற்றில் இடம் விட்டு சாப்பிடுதல் சிறந்தது.

மூன்று வேளை உணவுகளையும் உரிய அளவில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். கீரை வகைகள்⸴ காய்கறிகள்⸴ தானியங்கள் முதலானவற்றை உண்ண வேண்டும். துரித உணவுகளை உண்பதைத் தவிர்ப்பது நன்று.

உணவு உட்கொண்ட உடனே தூங்குதல் கூடாது. அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து விட்டமின் உள்ள பொருட்களை உட்கொள்ளுதல் வேண்டும்.

இன்றைய உணவுகளும் அதன் விளைவுகளும்

இன்றைய உணவுப் பழக்கமானது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவே உள்ளது. இன்றைய சமூகத்தினர் பீட்சா⸴ பர்கர்⸴ பரோட்டா போன்ற துரித உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

இத்தகைய துரித உணவுகளில் எம்.எஸ்.ஜி என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது. இதனால் அதிகமாக மற்றும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படுகின்றது.

இதன் காரணமாக உடல் எடை கூடுவது மட்டுமல்லாது⸴ பல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. சிறுவயது மரணம்⸴ மாரடைப்பு⸴ நீரிழிவு⸴ உயர் ரத்த அழுத்தம் போன்ற பாரிய நோய்களும் ஏற்படுகின்றன.

உணவே மருந்து

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்ˮ என வள்ளுவப் பெருந்தகை கூறுகின்றார்.

அதாவது நாம் தினமும் உணவு உண்ணும் போது எது நமது ஆரோக்கியத்திற்கு சிறந்தது எனத் தெரிவு செய்து உண்ணும் போது அதுவே சிறந்த மருந்தாக அமைந்து விடும்.

நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நம்மை நோய்கள் அண்டாது. காய்கறிகள்⸴ தானியங்களை உணவாக உட்கொள்ளும் போது அவற்றில் உள்ள ஊட்டச்சத்து உடலில் சேரும் போது நோய்ப் பாதுகாப்பை உணவுகளே ஏற்படுத்துகின்றன.

தினமும் ஐந்து விதமான பழங்களையும்⸴ சில காய்கறிகளையும் உணவில் உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

முடிவுரை

இன்றைய உணவுப் பழக்கமானது நாகரிக வளர்ச்சி⸴ சமூக வளர்ச்சி⸴ வாழ்க்கைத்தரம் முதலானவற்றால் மாறியுள்ளது. இதனால் நமது ஆரோக்கியமானது பெரிதும் பாதிப்படைகின்றது.

அதிக நோய்கள் ஏற்படவும்⸴ மரணம் ஏற்படவும் நம் முறையற்ற உணவுப் பழக்கவழக்கமே காரணமாகிறது.

எனவே ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்டு⸴ சிறந்த உணவு பழக்கத்தையும் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியும்.

You May Also Like:

வனவிலங்கு பாதுகாப்பு கட்டுரை
இளைஞர்கள் பற்றிய கட்டுரை