உணவை வீணாக்காமல் உண்ணுதல் கட்டுரை

Unavu Katturai In Tamil

இந்த பதிவில் “உணவை வீணாக்காமல் உண்ணுதல் கட்டுரை” பதிவை காணலாம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” எனும் நல் வாக்கிற்கிணங்க உணவை வீணாக்காது உணவின்றி பசியோடு வாடுபவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

உணவை வீணாக்காமல் உண்ணுதல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உலக உணவு தினம்
  3. உணவின் அருமையை உணர்ந்த நம் முன்னோர்கள்
  4. இந்தியா வீணடிக்கும் உணவு
  5. உணவு வீணாவதை தடுக்கும் வழிமுறைகள்
  6. முடிவுரை

முன்னுரை

உணவு மனித உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் ஆகும். உணவுகள் எல்லா உயிர்களுக்கும் இன்றியமையாதவையாகும். உலகில் எத்தனையோ பேர் உணவு கிடைக்காமல் பட்டினியால் இறக்கின்றனர்.

எனவே, உணவை வீணாக்கக் கூடாது. பசியால் வாடுபவனுக்கு தான் தெரியும் உணவின் அருமை உணவை வீணாக்குதல் என்பது வெறுக்கத்தக்க செயலாகும்.

நாம் வீணாக்கும் உணவு இன்னொருவரின் பசியை ஆற்றக் கூடியதாக கூட இருக்கலாம். எனவே உணவை வீணாக்கமால் உண்ண வேண்டும். இக்கட்டுரையில் உணவை வீணாக்காமல் உண்ணுதல் பற்றி நோக்கலாம்.

உலக உணவு தினம்

உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட தினம் தான் உலக உணவு தினமாகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக உணவு தினமானது உலகில் கோடிக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து கிடைக்காமலும், பட்டினியாலும் பாதிக்கப்படுவதையும் தடுக்கவும் உணவு பற்றிய விழிப்புணர்வையும், சேவையும் ஊக்கப்படுத்தவும் கொண்டாடப்படுகின்றது.

உணவின் அருமையை உணர்ந்த நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள் பழங் காலத்தில் மீதமாகும் சோற்றை தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். குழம்பை சூடாக்கி வைப்பார்கள். அந்தப் பழைய சோறும் குழம்பும் அடுத்த நாள் காலை உணவாக்கி உண்பார்கள்.

பசி என வந்தவர்களுக்கு இல்லை எனக் கூறாது உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் தான் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு பாரெங்கும் புகழ் பெற்றுள்ளது.

உணவின் அருமையை உணர்ந்ததால்தான் “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினார் பாரதியார்.

இந்தியா வீணடிக்கும் உணவு

இந்தியா ஆண்டுதோறும் 250 மில்லியன் டன் அளவுக்கு மேல் உணவுத் தானியம் உற்பத்தி செய்கிறது. ஆனால் உற்பத்தியாகும் உணவு தானியங்களில் ஏறத்தாழ 40% வீணாகி விடுகிறது.

இந்தியாவில் தினமும் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். 18 கோடிக்கும் அதிகமானோர் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உணவு வீணாவதை தடுக்கும் வழிமுறைகள்

வீட்டில் இருப்பவர்களின் தேவைகளுக்கு அளவான உணவினைத் சமைத்தல் வேண்டும்.

உணவு பொருள் ஒன்று இருக்கும் போதே மற்றவற்றை வாங்கி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். உண்ணக் கூடிய பகுதிகளை வீச வேண்டாம்.

பெரும்பாலான வீடுகளில் உணவு மீதமாவது பொதுவானதாகும். பெரும்பாலும், அவை குப்பைத் தொட்டியில் எறியப்படுகின்றன. அவற்றை வீசுவதற்குப் பதிலாக, மறுநாள் அவற்றை பயன்படுத்தலாம்.

மீதமாகும் உணவுப் பொருட்களை உரமாக உருவாக்குவது, தாவரங்கள் வளர துணையாக இருக்கும். காலாவதியாகும் முன் உணவை உட்கொள்ள வேண்டும்.

முடிவுரை

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் எனும் நல் வாக்கிற்கிணங்க உணவை வீணாக்காது உணவின்றி பசியோடு வாடுபவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

மேலும் உணவை வீணாக்காது உண்ணும் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் தேவைக்கு மேல் உண்ணும் உணவு அனைத்தும் அடுத்தவருக்குரியது என்ற எண்ணம் எம்முள்ளே எப்பொழுதும் தோன்ற வேண்டும். அப்போதுதான் உணவை வீணாக்காது உண்ணும் பழக்கம் நம்முள் வளரும்.

You May Also Like:
இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும்
உணவு கலப்படம் கட்டுரை