உலக மலேரியா தினம் | ஏப்ரல் 25 |
World Malaria Day | April 25 |
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அப்படிப்பட்ட நோய் நொடி இல்லாமல் வாழ்பவரே அதிசயமாக பார்க்கும் நிலை இன்றைய சூழலில் உள்ளது.
மலேரியா என்ற நோயானது தோற்றத்திலிருந்து இன்றுவரை உலகத்தில் பல கண்டங்களுக்கும் பரவியுள்ளது. கொசுக்கள் மூலமாகப் பரவி மனிதனது உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களில் ஒன்றாக மலேரியா காய்ச்சல் உள்ளது.
இந்த நோய் பெண் அனோபெலஸ் கொசுவினால் பரப்பப்படுகின்றது. மலேரியாவால் உலக அளவில் அதிகம் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசிய நாடுகளில் அதிகமாகப் பரவியுள்ளது.
உலகளாவிய ரீதியில் 90 நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி உலகில் மலேரியாவால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் 80% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது கவலைக்குரியதாகும். இதனைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு இன்றளவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
உலக மலேரியா தினம் வரலாறு
மலேரியாவை கட்டுப்படுத்தவும், தடுக்கவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஆபிரிக்க அரசால் 2001 ஆம் ஆண்டில் அதற்கான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டது.
மலேரியாவைக் கட்டுப்படுத்தவும், ஆபிரிக்க நாடுகளில் மலேரியாவால் ஏற்படும் இறப்பைக் குறைப்பதற்கும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
முதன் முதலாக ஆபிரிக்க மலேரியா தினமே அனுசரிக்கப்பட்டது. பின்பு 2007ஆம் ஆண்டு உலக சுகாதார சபையின் 60 ஆவது அமர்வில் உலக சுகாதார நிறுவனம் ஆபிரிக்க மலேரியா தினத்தை உலக மலேரியா தினமாக அறிவித்தது.
அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
மலேரியா தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மலேரியா ஏற்படுவதைத் தடுக்கவும், உரிய சிகிச்சை அளிப்பதை ஊக்கிவிக்கவும் உலக மலேரியா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மலேரியா தினத்தின் முக்கியத்துவம்
மலேரியா நோய் இன்றளவும் உலகளாவிய ரீதியில் பல உயிர்களைக் காவுகொள்கின்றது. இதனால் எதிர்காலத்தில் இந்த கொடிய நோயின் ஆபத்தைக் குறைக்க மக்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் இத்தினம் அமைந்துள்ளது.
மேலும் உயிர்கொல்லி நோயான மலேரியாவின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இத்தினம் மேற்கொள்கின்றது.
மலேரியாவைத் தடுக்க உத்திகள்
மலேரியா நோய் பரம்பலானது பெரும்பாலும் காலநிலை மாற்றத்தின் போதுதான் அதிகமாகப் பரவுகின்றது. எனவே மலேரியாவை கட்டுப்படுத்த சில உத்திகளை மேற்கொள்ளுவது சிறந்தது.
ஆரம்பக்கட்ட நோயை கண்டறிதல் மற்றும் உடனடி சிகிச்சை, வேதியியல் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளால் நோய் பரப்பி கொசுக்களை கட்டுப்படுத்தல், கொசுக்கடிக்கு எதிராக தனிநபர் தற்காப்பு நடவடிக்கைகள்
உதாரணமாக கொசு விரட்டிகள், ஜன்னல்களை இடுதல், கொசுவலை படுக்கை, உடலை மூடும் வண்ணம் முழு உடை அணிதல், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து ஒழித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற தற்காப்பு முறைகளைப் பயன்படுத்தலாம்.
மலேரியா நோய் குணப்படுத்தக் கூடியதே. மலேரியாவிலிருந்து பாதுகாப்பை நாம் தான் முதலில் மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் செயற்படும் போது நிச்சயம் உயிர் கொல்லி நோயிலிருந்து விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
You May Also Like: |
---|
டெங்கு ஒழிப்பு கட்டுரை |
சுத்தம் பேணுவோம் கட்டுரை |