பயணங்கள் பலவகை கட்டுரை

Payanangal Palavagai katturai In Tamil

இந்த பதிவில் வாழ்வில் பல படிப்பினைகள் மற்றும் பாடங்களைக் கற்றுத் தரும் “பயணங்கள் பலவகை கட்டுரை” பதிவை காணலாம்.

பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்கு பெரிதும் உதவுகிறது என்கின்றன ஆய்வுகள்.

பயணங்கள் பலவகை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பயணத்தின் தேவை
  3. தரைவழிப் பயணங்கள்
  4. கடல் பயணங்கள்
  5. பயணங்களின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்றைய நவீன உலகில் பயணங்கள் பல வகையாகிவிட்டன. மனித வாழ்க்கையில் பயணங்கள் இன்றியமையாததாகி உள்ளன.

பொதுவாக பயணங்கள் மூன்று வகைப்படுகின்றன. தரைவழி பயணம், கடல் வழிப்பயணம், வான்வழிப் பயணங்கள் என்பனவே அவையாகும்.

அவ்வகையில் பூமியில் பிறந்த மனிதர்களுள் வாழ்நாளில் ஒரு நாளேனும் பயணங்கள் மேற்கொள்ளாதவர் என்று எவருமில்லை. அந்தளவு வாழ்க்கையில் பயணங்கள் இரண்டற இணைந்துள்ளதுடன் தவிர்க்க முடியாததுமாக உள்ளது.

இத்தகைய பயணங்களே உலகின் வரைபடத்துக்கு உயிர் கொடுத்தன என்றால் அது மிகையல்ல. இக்கட்டுரையில் பயணங்கள் பலவகை பற்றி நோக்கலாம்.

பயணத்தின் தேவை

இன்றைய உலகில் பலரும் பலவிதமான தேவைகளுக்காகப் பல பயணங்களை மேற்கொள்கின்றனர். பாடசாலை அல்லது வேலைக்கு செல்வோர் என ஏதோ ஒரு வகையில் பயணங்களை வாழ்நாட்களில் மேற்கொள்கின்றனர்.

பொழுது போக்கிற்காகவும் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. மன நிம்மதிக்காக புதிய இடங்களின் தேடல்களுக்கும் பயணங்கள் தேவைப்படுகின்றன.

எதிர்பாராதவிதமாகவும் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். மனிதனது பல்வேறு தேவைகள் பயணங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகின்றன.

தரைவழிப் பயணங்கள்

மனித வாழ்வில் அடிக்கடி நிகழ்பவை இந்த தரைவழிப் பயணங்களே ஆகும். ஆரம்பகால மனிதர்கள் கால்நடையாகத் தரைவழிப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

பின்னர் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் போன்றவற்றை பயன்படுத்தினான். ஆனால் இன்று மனிதன் துவிச்சக்கரவண்டி, மகிழுந்து, மோட்டார் வண்டி, பேருந்து, முச்சக்கர வண்டி, ரயில் போன்ற பல்வேறுபட்ட சாதனங்கள் மூலம் தரைவழி பயணத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கின்றான்.

கடல் பயணங்கள்

பயணங்களில் மிகவும் சுவாரஸ்யமான பயணமாகக் கடல் வழிப்பயணம் காணப்படுகின்றது. கடல்வழிப் பயணங்களுக்காக கப்பல், பாய்மரம், படகு, தோணி, வள்ளம் போன்ற பலவும் பயன்படுத்தப்படுகின்றன.

இக்கடல் பயணம் மூலம் தான் பல நாடுகளிடையே தொடர்புகள் ஏற்பட்டது எனலாம். மேலும் அறிவியல் ஆய்வுகளுக்காகவே கப்பல் பயணம் மேற்கொள்வோரும் இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி சாகசத்துக்காகக் கடல் பயணம் மேற்கொள்வோரும் இருக்கிறார்கள்.

பயணங்களின் பயன்கள்

பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நமக்கு பெரிதும் உதவுகிறது என்கின்றன ஆய்வுகள்.

இயற்கையை ரசித்துக் கொண்டே பயணம் செய்யும்போது எமது உடல் நலத்துக்கும், இதயத்துக்கும் பெரும் நன்மையை தேடி தரும் புத்துணர்வாக உணர முடியும். மன அழுத்தத்தைப் போக்க பயணங்கள் பெரிதும் துணை புரிகின்றன.

பயணம் என்பது நமது மூளை திறனை தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். புதிய உணவுகள், சிறந்த சூழல், மற்றும் பலவிதமான மொழிகள் என அனைத்தும் நமது மூளை சிறப்பாக செயல்பட உதவும். பயணங்கள் வாழ்வின் பல படிப்பினைகள் மற்றும் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.

முடிவுரை

பயணம் மனிதர்களைப் பிணைத்திருக்கிறது. கடலும் மலையும் நாடும் கண்டமும் பிரித்தாலும் உலகம் என்பது ஒன்றுதான். அத்தகைய உலகத்தில் வாழும் மனிதர்கள் எல்லோர் வாழ்விலும் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது.

பயணங்கள் வாழ்வில் வியப்பையும், காதலையும் உருவாக்கும். தேவைகளுக்காக மட்டும் பயணம் செய்யாது மன நிம்மதிக்காக இயற்கையை ரசிக்கவும் பயணங்களை மேற்கொண்டு வாழ்வில் இன்புறுவோமாக!

You May Also Like :
போக்குவரத்து விதிமுறைகள் கட்டுரை
விரைவான தொழில்நுட்ப மாற்றம் கட்டுரை