இந்த பதிவில் உலகை ஆளும் “அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை” பதிவை காணலாம்.
அறிவியல் ஆக்கங்களை நன்மையான செயற்பாடுகளுக்காக பயன்படுத்தினால் இயற்கை மட்டுமன்றி மனித உள்ளத்திற்கும் தீங்கு ஏற்படாது
அறிவியல் ஆக்கங்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விவசாயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- அன்றாட வாழ்வில் அறிவியல்
- அறிவியல் சாதனங்களின் பயன்கள்
- அறிவியல் ஆக்கங்களின் தீமைகள்
- முடிவுரை
முன்னுரை
இன்றைய நவீன காலத்தில் அறிவியலும் மனிதனும் இரண்டறக் கலந்துள்ளது. அறிவியல் இன்றி மனிதனும் மனிதனின்றி அறிவியலும் இயங்க முடியாத நிலை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.
மக்களுக்காக பயன்படும் பொருட்களில் மிகவும் இன்றியமையாதவை அறிவியல் சாதனங்கள் ஆகும்.
மனிதர்கள் அறிவியலின் துணை கொண்டு தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு வசதிகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். அத்தகைய சிறப்பான அறிவியல் ஆக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
விவசாயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள்
வளர்ந்துவரும் தற்கால அறிவியல் சூழ்நிலையில் விவசாயமும் தன் பங்கிற்கு வளரத்தான் செய்துள்ளது. விவசாய கருவிகள் மட்டுமல்லாது விவசாய பொருட்களும் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளன.
தற்காலங்களில் விதை விதைப்பது முதல் அறுவடை செய்து முடிக்கும் வரை புதிய புதிய கண்டுபிடிப்புகளும், புதிய கருவிகளும் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகின்றன.
துல்லியமாக விவசாயப் பொருட்களை பிரித்து எடுத்தல் விவசாய இடுபொருட்களை முறையான செயல் மூலமாக விதைத்தல் போன்றவற்றிற்கு புதிய புதிய கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அன்றாட வாழ்வில் அறிவியல்
அறிவியல் என்ற ஒரு வார்த்தையில் இந்த உலகமே அடங்கி விட்டது எனலாம். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அன்றாடம் நம் செயற்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நிறைந்துள்ளது.
வீட்டில் பயன்படுத்தும் மாவரைக்கும் இயந்திரம், மின்சார அடுப்பு, பலவகையான மின்விளக்குகள், குளிரூட்டி இயந்திரங்கள், சமையல் செய்யப் பயன்படும் பாத்திரங்கள், வாயு அடுப்புகள், துணி துவைக்கும் இயந்திரம் என வீட்டில் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள் பல உள்ளன.
அறிவியல் சாதனங்களின் பயன்கள்
மாணவர்கள் கல்வி கற்க பயன்படும் நூல்கள் அனைத்துமே அறிவியல் சாதனமான அச்சுப்பொறிகள் உதவியினால் கிடைக்கின்றன. தகவல்தொடர்பு சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி, கணனி, தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற பலவற்றின் பயன்கள் எண்ணிலடங்காதவையாகும்.
உடனுக்குடன் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், இயற்கை அனர்த்தங்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும் அறிவியல் சாதனங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
தொழிற்சாலைகளுக்கு பயன்படும் இயந்திரங்களை உருவாக்குவதற்கும் அறிவியல் மிகவும் பயன்படுகின்றது. பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்கும் உரிய நேரத்திற்குள் அவற்றை நுகர்வோருக்கு அனுப்புவதற்கும் அறிவியல் பயன்படுகின்றது.
அறிவியல் ஆக்கங்களின் தீமைகள்
எல்லா அறிவியல் ஆக்கங்களும் நன்மை பயப்பது இல்லை. சில அறிவியல் ஆக்கங்கள் எதிர்மறையான தாக்கத்தையும் உருவாக்கியுள்ளன.
குறிப்பாக பல தசாப்தங்களாக, உயிர்களைக் கொல்ல போர் நோக்கத்திற்காக அதிக அளவில் சாதனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்று துப்பாக்கிகள் மட்டுமல்ல, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி, வெடிகுண்டு, அணுகுண்டு ஆகியவை கண்டுபிடிக்கபடவில்லை என்றால் உலகம் அமைதியாக இருந்து இருக்கும்.
வாகனங்களின் புகைகள், தொழிற்சாலை இயந்திரங்களின் மூலம் வெளிவரும் புகைகள், பிளாஸ்டிக் உருவாக்கம் போன்றனவும் சுற்றுச்சூழல் மாசடைவிற்கு காரணமாக அமைகின்றன.
முடிவுரை
இயற்கையின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதில் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே அறிவியல்.
அறிவியல் ஆக்கங்களை நன்மையான செயற்பாடுகளுக்காக பயன்படுத்தினால் இயற்கை மட்டுமன்றி மனித உள்ளத்திற்கும் தீங்கு ஏற்படாது என்பதனை கவனத்திற் கொண்டு அனைவரும் செயற்படுவோம். அறிவியல் ஆக்கங்களின் நற்பயன்களை பெறுவோம்.
You May Also Like: |
---|
அறிவியல் வளர்ச்சி கட்டுரை |
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை |