இக்கட்டுரையில் மனிதம் காக்கும் “கருணை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.
இவ்வுலகத்தில் கருணை உள்ளம் கொண்டவர்கள் இன்றும் இருப்பதனால் தான் உலகம் நிலைபெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
கருணை பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- அன்னையின் கருணை
- கருணையின் வடிவம் அன்னை திரேசா
- உலக கருணை தினம்
- வள்ளலார் தரும் கருணையின் விளக்கம்
- முடிவுரை
முன்னுரை
கருணை என்பது உன்னதமான குணங்களில் ஒன்றாகும். உயிர்களிடத்தில் கருணையுடன் வாழ்வதே சிறந்தது.
கடினமான வாழ்க்கை சூழ்நிலையில் இருக்கும் போதும், மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் போதும் ஒருவருக்கு உதவும் ஆசையே கருணை எனலாம்.
கருணையின் மகத்துவம் உணர்ந்ததாலேயே “கருணையின் வெளிப்பாடு கடவுளை உணரும் வழி” என்கின்றது அறநெறி. இத்தகைய மகத்துவமான கருணை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அன்னையின் கருணை
உயிரைக் காத்திடும் உயர்ந்த உறவே அன்னை. அன்னையின் கருணை அமுதம் போன்றது. “அன்னை” என்ற சொல், அனைவரது மனதிலும் அன்பின் உணர்வுகளை தட்டி எழுப்பக்கூடியதாகும்.
உலக ஆசாபாசங்களை துறந்த முனிவர்களும் கூட, அன்னையின் அன்பையும், பாசத்தையும் துறக்க இயலவில்லை என்பதை ஆன்மிக சான்றோர்களின் வாழ்க்கை வரலாறு உணர்த்துகின்றது.
பல தியாகங்களைச் செய்து நம்மை இப் பூவுலகில் வாழ வைத்துக் கொண்டிருப்பது நம்மீதான அன்னையின் கருணையே ஆகும்.
கருணையின் வடிவம் அன்னை திரேசா
கருணை உள்ளம் கொண்டவர்கள் இங்கு அதிகம். அந்த உள்ளத்தை எண்ணமாக மாற்றி அதனையே அர்ப்பணிப்புப் பணியாகச் செய்வதென்பது அரிதிலும் அரிது. அப்படி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் அன்னை தெரசா.
கருணை என்றவுடன் நினைவுக்கு வருபவர் அன்னை தெரேசா தான். அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. செயல்களில் வாழ்வது. பிறர் சொல்ல வருவதில்லை. பிறர் நிலையறிந்து தானாய் தோன்றுவது. அப்படிப்பட்ட அன்பின் அடையாளமாக, கருணைக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் தான் அன்னை தெரேசா.
தன்னால் முடிந்தவரைப் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் சமமான உதவியை அளித்தார். உதவ யாரும் இல்லாமல் கேட்பாரற்று, ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர்களின் நிலையைக் கண்ட இவர், அவர்களுக்கென்று ஒரு காப்பகத்தையும் தொடங்கினார்.
உலக கருணை தினம்
உலக கருணை தினம் 1988 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜப்பானின் டோக்கியோ நகரிலேயே கொண்டாடப்பட்டது. அதற்கடுத்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 13 ஆம் திகதி உலக கருணை தினமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
இப்போது 25 இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் இத் தினத்தை கொண்டாடுகின்றன. உலகத்திலேயே கருணைமிகுந்த நாடு போர்த்துகல் என்று சர்வதேச ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது.
நாம் அனைவரும் ஓர் இனம் ‘மனித இனம்’ என்ற உயர்ந்த கூற்றை உணர்த்தும் நாள்தான் இந்த கருணை நாள்.
வள்ளலார் தரும் கருணையின் விளக்கம்
பொதுவாகக் கருணை என்றால் மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவுதலும், அல்லது உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளுதலும், அவை துக்கப்படும் போது உருக்கம் கொள்வதும் கருணையாகும் .
ஆனால் கருணை என்பது “எல்லா உயிர்களிடத்திலும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும்” என்கின்றார் வள்ளலார்.
முடிவுரை
அன்புள்ளம் கொண்டவர்கள் தான் மனிதர்களாக கருதப்படுவர். இவ்வுலகத்தில் கருணை உள்ளம் கொண்டவர்கள் இன்றும் இருப்பதனால் தான் உலகம் நிலைபெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.
நவீன உலகில் கருணை என்பது மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளது. இயந்திரங்கள் போல் மனித மனங்களும் பெரிதும் மாறியுள்ளது. நிலையற்ற இந்த வாழ்க்கையில் வாழும் காலம் வரை அன்பு, கருணை கொண்டு இன்புற்று வாழ்வதே சிறந்ததாகும்.
You May Also Like: |
---|
அன்பு பற்றிய கட்டுரை |
அன்புடைமை பற்றிய கட்டுரை |