மனித வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகவே விளையாட்டு காணப்படுகிறது. மனிதனானவன் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுவதற்கு விளையாட்டு அவசியமானதாகும். சிறந்த விளையாட்டே உடற்பயிற்சிக்கான ஒரு சிறந்த வழி முறையாகும்.
விளையாட்டின் முக்கியத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விளையாட்டின் முக்கியத்துவம்
- விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்
- விளையாட்டும் உடல் ஆரோக்கியமும்
- இன்றைய விளையாட்டு முறை
- முடிவுரை
முன்னுரை
பொழுது போக்கிற்காகவும் மகிழ்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்கிற்காகவும் நடாத்தப்படும் ஒரு செயற்பாடாகவே விளையாட்டானது காணப்படுகிறது. அந்த வகையில் விளையாட்டு ஒரு கலையாகும்.
“ஓடி விளையாடு பாப்பா ஓய்ந்திருக்கலாகது பாப்பா” என்ற பாரதியின் கூற்றானது விளையாட்டின் முக்கியத்துவத்தை பறை சாற்றுபவையாகவே காணப்படுகிறது. இன்று துடுப்பாட்டம் , கால்பந்து, கபடி, ஓட்டப்போட்டி என பல்வேறு விளையாட்டுக்கள் விளையாடப்பட்டு வருகின்றன.
விளையாட்டின் முக்கியத்துவம்
விளையாட்டானது ஒருவரை ஆக்கபூர்வமாக சிந்திக்க வைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே காணப்படுகிறது. அதேபோன்று ஓர் குழந்தையினுடைய வளர்ச்சியில் விளையாட்டினுடைய பங்கானது பாரிய செல்வாக்கு சொலுத்துவதாக காணப்படுகிறது.
அதாவது ஒரு குழந்தை பிறந்தவுடனே விளையாட்டுடனேயே தான் காணப்படுகிறது என்பது விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றது.
மேலும் விளையாட்டானது வெற்றி மற்றும் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையை ஏற்படுத்த துணைபுரிவதோடு வாழ்வில் விளையாட்டின்றி மனிதனில்லை என்று கூறுமளவிற்கு விளையாட்டு முக்கியத்துவம் பெறுகின்றது.
விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஒரு மனிதனானவன் பல விளையாட்டுக்களை விளையாடும் போது குழு ரீதியில் ஒற்றுமையானது வளர்க்கப்படுகிறது. அதாவது உதாரணமாக கிரிகட் விளையாட்டை எடுத்துக் கொண்டோமேயானால் அது ஒரு குழு விளையாட்டாகும்.
இதனூடாக குழு ரீதியில் ஒற்றுமையாக செயற்படுவதற்கான வழி பிறக்கிறது. அதேபோன்று விளையாட்டின் மூலமாக உடல் ஆரோக்கியத்தை பெறுவதோடு சுறுசுறுப்பாகவும் காணப்படமுடியும்.
மேலும் விளையாடுவதனால் தலைமைத்து பண்பு வளர்க்கப்படுகிறது, கல்வியில் சிறந்தவர்களாக உருவாக வழியமைத்தல் மேலும் சிந்தனைத்திறன் விருத்தியடைதல் என பல்வேறு நன்மைகள் விளையாட்டின் மூலமாக கிடைக்கின்றது.
விளையாட்டும் உடல் ஆரோக்கியமும்
உடல் ஆரோக்கியத்தில் விளையாட்டானது பிரதான இடத்தை வகிக்கிறது. உடற்பயிற்சிக்கு நிகரான ஒன்றாகவே விளையாட்டானது திகழ்கின்றது. நாம் விளையாடும்போது உடலின் சோர்வின் தன்மை நீங்கி உற்சாகம் ஏற்படும்.
உடல் எடை குறைப்பதற்கான ஓர் சிறந்த முறையாக விளையாட்டே காணப்படுவது சிறப்பிற்குரியதாகும். மேலும் விளையாடுவதன் மூலமாக இதயம், தசைகள், எலும்புகள் என பல இடங்களில் ரத்தம் சீராக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. ஹார்மோன்கள் சீராக வழியேற்படுவதோடு மன அழுத்தமும் குறைவடையும்.
இன்றைய விளையாட்டு முறை
இன்று விளையாட்டுக்கள் என்பது நவீன தொழிநுட்ப சாதனங்களான தொலைபேசி, கணினியுடனேயே தான் அதிகம் விளையாடப்படுகின்றதே தவிர ஆரம்பகாலங்களை போன்று கபடி, பல்லாங்குழி, கிரிக்கட், ஓட்டப்போட்டி என காணப்படவில்லை.
அதாவது தான் ஓர் இடத்தில் இருந்துகொண்டே விளையாடும் முறைமையினை இன்று காணக்கூடியதாக உள்ளது. இது எம் உடல் ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்க கூடியதொன்றாகவே காணப்படுவதோடு வெளியுலகத்தை மறக்கடிக்கச் செய்யும் முறையாகவும் திகழ்கின்றது.
மேலும் எம்மை அடிமைப்படுத்தும் ஓர் முறைமையாகவும், கண் பார்வையை இழக்கச் செய்யும் முறைமையாகவும் கணினி விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.
முடிவுரை
விளையாட்டுக்களானவை மனிதனுடைய வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லன அதே போன்று நாம் விளையாடும் விளையாட்டுக்கள் எமக்கு சிறந்தனவா என்பதனை உணர்ந்து விளையாட வேண்டும்.
மேலும் இயன்றளவு கணிணி மற்றும் தொலைபேசியில் விளையாடும் விளையாட்டுக்களை தவிர்ப்பது எம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
You May Also Like: