வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை

veetu thottam katturai in tamil

எமது நேரங்களை தேவையற்ற விடயங்களில் செலவளிப்பதை விட பொருளாதாரத்தை ஈட்டித் தரும் பயனுள்ள வீட்டுத்தோட்டத்தில் செலவளிக்கும் போது எமக்கு பல்வேறு வழியில் பயனளிக்க கூடியதாக காணப்படும். வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்வதினூடாக மனநிறைவான வாழ்க்கையினை வாழ முடியும்.

வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வீட்டுத்தோட்டம் என்பது
  • வீட்டுத்தோட்டத்தின் பயன்கள்
  • பொருளாதாரத்தில் வீட்டுத்தோட்டத்தின் பங்கு
  • ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வீட்டுத்தோட்டம்
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய கால கட்டத்தில் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இத்தகையதொரு சூழலில் வீட்டுத்தோட்ட செய்கையானது எம்மை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு பாரிய பங்களிப்பினை செய்கின்றது. அந்தவகையில் வீட்டுத்தோட்டத்தின் மூலமாக எம்மால் பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வீட்டுத்தோட்டம் என்பது

வீட்டுத்தோட்டம் என்பது நாம் வாழும் வீட்டை சுற்றியுள்ள நிலப்பரப்பில் தோட்டம் செய்வதனையே குறித்து நிற்கின்றது.

அதாவது வீட்டுத்தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள், மரக்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை நடுவதன் ஊடாக பல்வேறு பயன்களை எம்மால் அடைந்து கொள்ள முடியும் என்பதோடு வீட்டுத்தோட்டம் செய்வதன் மூலமாக எமது உணவுத் தேவைகளையும் இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

வீட்டுத்தோட்டத்தின் பயன்கள்

வீட்டுத்தோட்டத்தின் மூலமாக எமக்கு தேவையான உணவுகளை பொருளாதார ரீதியான செலவின்றி இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் வீட்டுத்தோட்டத்தில் மேற்கொள்ளும் பயிர்ச் செய்கைகளினூடாக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். அதே போன்று சந்தையில் பெற்றுக் கொள்ளும் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை போல் அல்லாது வீட்டுத்தோட்டத்தில் விளைவிக்கப்படுவதானது இயற்கையானதாகவும் ஊட்டமிக்கதாகவும் காணப்படும்.

வீட்டுத்தோட்டம் செய்வதினூடாக மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும். ஏனெனில் பல மலர்கள் மற்றும் செடிகளை வீட்டுத்தோட்டத்தில் நடுவதால் இயற்கையை ரசிக்க முடிவதோடு சுத்தமான காற்றினையும் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை முறைமையானது வழிவகுக்கின்றது, மண்வளம் பேணப்படுகின்றது. போன்ற பல்வேறு பயன்களை கொண்டமைந்ததாக வீட்டுத்தோட்டமானது காணப்படுகின்றது.

பொருளாதாரத்தில் வீட்டுத்தோட்டத்தின் பங்கு

வீட்டுத்தோட்டத்தினூடாக பொருளாதார ரீதியில் பல்வேறு நன்மைகள் கிடைக்கப் பெறுவதனை அவதானிக்க முடிகின்றது. அதாவது எமக்கு தேவையான பழங்கள், காய்கறிகளை எமது வீட்டுத்தோட்டத்தில் இருந்தே பெற்றுக் கொள்வதினூடாக எமது பணமானது சேமிக்கப்படுகின்றது.

மேலும் வீட்டுத்தோட்டத்தின் மூலமாக அதிக விளைச்சல் ஏற்படுவதோடு விற்பனை செய்து வருமானத்தினையும் ஈட்டிக் கொள்ளவும் முடியும். இன்று பொருளாதார ரீதியில் நெருக்கடியான சூழலே காணப்பட்டு வருகின்றது.

இத்தகைய சூழலில் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய சிறந்ததொரு வழியாக வீட்டுத்தோட்டம் காணப்படுவதானது சிறப்பிற்குரியதாகும்.

ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வீட்டுத்தோட்டம்

மக்களுடைய ஆரோக்கியமான உணவுத் தேவையை நிறைவேற்றுவதில் வீட்டுத்தோட்டத்தின் பங்கு அளப்பரியதாகும்.

இயற்கையான முறையில் எமது வீட்டிலேயே மேற்கொள்ளும் வீட்டுத்தோட்டத்தினூடாக எமது உடல் ஆரோக்கியம் பேணப்படும்.

மேலும் நச்சுத் தன்மைகளற்ற ஊட்டமிக்க உணவுகளை எமது வீட்டுத்தோட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடிவதோடு பல்வேறு கொடிய நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முடிவுரை

இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானதொன்றாக வீட்டுத்தோட்டம் காணப்படுகிறது. அந்தவகையில் அனைவரும் தனது வீட்டில் வீட்டுத்தோட்ட செய்கையை மேற்கொள்வதினூடாக சிறந்த பயனை பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

You May Also Like:

விவசாயம் காப்போம் கட்டுரை

விவசாயம் அன்றும் இன்றும் கட்டுரை