ஆசிரியர் பற்றிய கட்டுரை

Aasiriyar Patri Katturai In Tamil

இந்த பதிவில் வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்கும் “ஆசிரியர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

நடத்தைகளில் சரி எது? தவறு எது? என தரம் பிரித்து சரியான பாதையை வழிகாட்டுபவரே ஆசிரியர் ஆவார்.

ஆசிரியர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. யார் ஆசிரியர்
  3. ஆசிரியரின் அடையாளம்
  4. ஆசிரியரின் பண்பு
  5. ஆசிரியரின் பணி
  6. ஆசிரியரின் சிறப்புக்கள்
  7. முடிவுரை

முன்னுரை

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. வாழ்க்கை எனும் ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு என்பன அனைத்தும் நிறைந்த பாடத்தை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்கி ஒவ்வொரு மாணவர்களையும் சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.

அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். இத்தகைய பெருமை வாய்ந்த ஆசிரியரை பற்றி நோக்குவோம்.

யார் ஆசிரியர்

எக்காலகட்டத்திலும் எவர் ஒருவர் எவ்விடத்திலும் புதுமையான ஒன்றை அறியச் செய்கிறாரோ அவரே ஆசிரியராவர். அவ்விதத்தில் பூமியில் வாழும் அனைவரும் ஏன்! சிறு மண்புழு கூட மண்ணை உரமாக்கும் பாடத்தைக் கற்றுத் தருகிறது. அவ்வகையில் அனைத்துமே ஆசிரியர் தான்.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” எனும் பழமொழிக்கிணங்க மனிதன் பகுத்தறிவு எனும் ஆறாம் அறிவுடன் பிறந்து இருந்தாலும் அவ்வறிவை பயன்படுத்த ஒரு வழிகாட்டி அவசியம் தேவை.

ஏனென்றால் மனிதன் அவன் மற்றவர் செய்கை மற்றும் நடத்தையைக் கண்டு அதை தன் வாழ்விலும் பிரதிபலிக்கிறான். அந்நடத்தைகளில் சரி எது? தவறு எது? என தரம் பிரித்து சரியான பாதையை வழிகாட்டுபவரே ஆசிரியர் ஆவார்.

ஆசிரியரின் அடையாளம்

ஆசிரியர் என்பவர் ஒட்டுமொத்த உலக அறிவையும் ஒரே இடத்தில் அறியச் செய்பவர். அவர் புதிய அறிவையும், அவ்வறிவை பயன்படுத்தும் விதத்தையும் ஒருங்கு சேர வழங்குபவர்.

ஒவ்வொரு இடத்திலும் புதுமையான ஏதோ ஒன்றை கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் ஓரே இடத்தில் தொடர்ச்சியாக ஒருவர் கற்பது என்பது கடினமானதொன்றாகும். அதனை எவ்வித சலிப்பும் ஏற்படாவண்ணம் பல யுக்திகளை கையாண்டு கவனம் சிதறாமல் கற்பிப்பதே ஆசிரியருக்கான அடையாளம் ஆகும்.

ஆசிரியரின் பண்பு

கற்க வேண்டியது உலகில் ஆயிரம் இருந்தாலும் எவை கற்க உகந்தது என அன்னப் பறவையாய் அறிவைப் பிரித்து வழங்குவதோடு நற்பழக்கவழக்கங்களை உடல் மொழியாலும், கருத்தாலும் உணர்த்துவதே ஆசிரியரின் பண்பாகும்.

விரலுக்கேத்த வீக்கம் என்பது போல அறிவுக்கு ஏற்ற அனுபவத்தை வயது வாரியாக வழங்குபவர். தன்னை நாடி வருவோரின் சந்தேகங்களை தெளிவடைச் செய்பவர். சிந்தனையை கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று கருத்தை கண்முன்னே காட்டுபவர். இவையெல்லாம் ஆசிரியரின் பண்புகளாகும்.

அத்துடன் மனதால் யாரையும் புண்படுத்தாத புத்தனாக, அள்ளி வழங்கும் கல்விக் கர்ணனாக, பலதரப்பட்ட அறிவைச் சுமக்கும் ஞானியாக, கண்களால் மனதை அளவிடும் உளவியல் வல்லுநராக, அன்பாய் அறிவை ஊட்டும் அன்னையாக, ஏற்றத் தாழ்வு இல்லாமல் போதிக்கும் நியாயபதியாக, போதனையால் புதிய உலகை உண்டாக்குபவராக, போட்டி நிறைந்த உலகில் போராட தேவையான அறிவாயுதத்தை வழங்குபவராக, கண்ணை போல பாதுகாக்கும் இன்னொரு பெற்றோராக இருப்பதும் ஆசிரியருக்கே உரித்தான பண்புகளாகும்.

ஆசிரியரின் பணி

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும்.

அப்படிப்பட்ட தெய்வீகமான் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது. கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான பணிக்குரிய ஆசிரியர்களாவர்.

ஆசிரியரின் சிறப்புக்கள்

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திசூடியில் பாடியிருக்கிறார் ஒளவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர். அந்த வகையில் மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு குழந்தை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை. மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும் எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையார்.

ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள் தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்.

மேலும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழக அரசினால் “நல்லாசிரியர் விருது” வழங்கப்படுகிறது.

அவ்வாறே இந்தியாவில் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்லாசியராக வாழ்ந்து காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்ரெம்பர் 5ம் நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றனர்.

முடிவுரை

விதைகள் விதைக்கப்படலாம். விதைத்த விதைகள் எல்லாம் முளைப்பதில்லை. முளைத்த செடிகள் எல்லாம் மரமாவதில்லை.

என்னால் விதைக்கப்பட்ட விதை என்றாவது ஒருநாள் ஆலமரமாய் வேரூன்றி நிழல் பரப்பும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் “நடப்பது நடக்கட்டும், போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்

என்று குன்றிலிட்ட விளக்காய் பிரகாசித்து குன்றா புகழோடு இருந்து கல்வியை கற்றுக்கொடுப்பது ஆசிரியர்கள் மட்டுமே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

You May Also Like:
ஆசிரியர் பணி கட்டுரை
நான் ஒரு ஆசிரியர் ஆனால் கட்டுரை