ஆறுமுக நாவலர் பற்றிய கட்டுரை

Arumuga Navalar Katturai In Tamil

சைவ சமய சித்தாந்த தத்துவங்களை மிளிரச் செய்த “ஆறுமுக நாவலர் பற்றிய கட்டுரை” பற்றி இதில் காணலாம்.

தன் வாழ்நாள் முழுதும் தமிழுக்கும், சைவத்துக்கும் பணியாற்றி வந்த ஆறுமுக நாவலரின் பெருமை என்றென்றும் தழைத்தோங்கும்.

ஆறுமுக நாவலர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆரம்ப வாழ்க்கை
  3. கல்வி
  4. ஆறுமுகநாவலரின் சமயப்பணிகள்
  5. தமிழகப்பணி
  6. முடிவுரை

முன்னுரை

இவ்வுலகில் தமிழுக்கு வரலாறு அதிகம், ஆனால் அதை நாம் அன்றாடம் அடையாளப்படுத்த தவறி விடுகின்றோம்.

அந்த வகையில் “சைவமும்,தமிழும் என் இரண்டு கண்கள், இவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதி வரை காத்துப்பயன் கொள்வதே என் கடமை. என் வாழ்வின் குறிக்கோள் என்று கூறி அதன் வழி வாழ்ந்தவர் தான் ஆறுமுகநாவலர் ஆவார்.

சித்தாந்த தத்துவங்களை மிளிரச் செய்த சைவசமயத்தின் ஐந்தாம் குரவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பற்றி இக்கட்டுரையில் காண்போம்

ஆரம்ப வாழ்க்கை

நாவலர் பெருமான் இலங்கையில் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை,சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு மகனாக மார்கழி 18ம் திகதி 1822 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும்.

நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்.

இவரது தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைகாவல் முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார்.

கல்வி

இவர் தனது ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் பெற்றவராவார். நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதி நூல்களையும், தமிழையும் நன்கு கற்றார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவர் இடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்விக்காக சேர்க்கப்பட்டார்.

தனது பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றவராவார். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னணி ஆங்கில பாடசாலையான வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் (தற்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) ஆங்கிலத் திறமையை பெற்றார். அதே பாடசாலையில் தனது 19வது வயதில் ஆசிரியராகப் பணியாற்றினார்

ஆறுமுகநாவலரின் சமயப்பணிகள்

சைவநெறி தழைத்தோங்க பெரும் பணியாற்றினார். இந்தியாவும், இலங்கையும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவம் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய காலப்பகுதியின் போது பிறந்தவராவார். ஈழ மக்கள் பெரும்பாலானோர் உள்ளத்தில் ஒளி விளக்காய் சுடர்விட்டு விளங்கும் சைவசமயமானது ஆங்கிலேயரின் செல்வாக்கினால் சிறிது நலிவுற்றிருந்தது.

இந்நிலையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும், எழுத்தாலும் மக்களின் கண்களைத் திறந்து அவல நிலையை அவருக்கு உணர்த்தியதோடு சைவம் புத்துயிர் பெற தம்மாலான பணிகளை ஆற்றினார்.

இவர் பல பிரசங்கங்களையும் நிகழ்த்தினார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் டிசம்பர் 31 1847 ஆம் ஆண்டு நடைபெற்றது. சைவப் பிரசங்கங்க விளைவாக சமய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பள்ளியை நிறுவினார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிட்டார்.

தமிழகப்பணி

இவரது பணி இலங்கையில் மட்டுமல்லாது தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார்.

அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி சென்னை தங்கசாலைத் தெருவில் வித்யாபாணு பகலன இயந்திரசாலை என்ற அச்சகம் ஒன்றை நிறுவி பல நூல்களை அச்சிட்டார்.

சென்னை, திருவாவடுதுறை போன்ற பல இடங்களிலும் தங்கி சைவப் பிரசங்கங்கள் செய்தார்.

முடிவுரை

1879 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. உடல் நலம் குறைவுபட்டு இருபத்தோராம் நாள் வெள்ளிக்கிழமை 5. 12. 1879 அன்று இரவு 9 மணியளவில் அவரது உயிர் இவ்வுலகை விட்டு நீங்கியது.

தன் வாழ்நாள் முழுதும் தமிழுக்கும், சைவத்துக்கும் பணியாற்றி வந்த ஆறுமுக நாவலரின் பெருமை என்றென்றும் தழைத்தோங்கும்.

You May Also Like:

ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு
அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு