இணையத்தின் பயன்கள் கட்டுரை

inayathin payangal katturai in tamil

அறிவியலின் பிரதானமானதொரு கண்டுபிடிப்பாக திகழ்வதே இணையமாகும். இன்று இணையத்தின் பயன்பாடானது உலகளாவிய ரீதியில் பாரியதொரு பங்கினை வகிக்கின்றது. மேலும் இணையமானது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவராலும் பயன்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றது.

இணையத்தின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இணையம் என்பது
  • இணையத்தின் பயன்கள்
  • இணையவழிக் கல்வி
  • தற்காலத்தில் இணையம்
  • முடிவுரை

முன்னுரை

இன்று இணையமானது பல்வேறு வகையில் அனைவருக்கும் பயன்படக் கூடியதாகவே காணப்படுகின்றது. ஒரு விடயத்தை பற்றிய தகவல்களை இலகுவாக எமக்களிக்க கூடியதொரு வகையில் இணையமானது திகழ்கின்றது.

அந்த வகையில் இணைய பயன்பாட்டை பயன்படுத்தாத நாடுகளே இல்லை என்றே குறிப்பிட முடியும். இக்கட்டுரையில் இணையத்தின் பயன்கள் பற்றி நோக்கலாம்.

இணையம் என்பது

உலகம் முழுவதும் காணப்படுகின்ற பல கோடிக் கணக்கான கணிணி இணைப்பின் தகவலே இணையமாகும். இந்த இணையத்தினூடாக உலகம் நம் கையில் உலாவுகின்றது என்று கூற முடியும்.

தகவல்களை இலகுவாக தேடி பெற்றுக் கொள்ளவும், பொருள்களை வாங்கவும், ஒருவருக்கொருவர் உறவை பேணிக் கொள்ளவும், வணிகம் செய்யவும் என பல்வேறு வேலைகளை மிக விரைவாக பரிமாறிக் கொள்ளும் ஓர் வழிமுறையாகவே இணையம் காணப்படுகின்றது.

இணையத்தின் பயன்கள்

இணையத்தின் பயன்பாடானது இன்று அனைத்து விடயங்களிலும் செல்வாக்கு செலுத்தக் கூடியதாகவே காணப்படுகின்றது.

இணையமானது பல்வேறு அறிவியல் ரீதியான தகவல்களை எமக்கு இலகுவாக பெற்றுத்தரக் கூடியதாக காணப்படுகின்றதனைப் போன்று இணையமானது பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதிலும் பாரிய பங்காற்றி வருகின்றது.

அதாவது வணிக நிறுவனங்கள் தங்களது விற்பனையை பெருக்குவதற்கான சிறந்ததொரு ஊடகமாக இணையம் காணப்படுகின்றது.

இணையத்தில் உள்ள பல்வேறு கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், சஞ்சிகைகள் போன்றன எம் வாசிப்பு திறனை அதிகரித்துக் கொள்ள உதவுகின்றது.

பல தொலைவில் உள்ள உறவுகளுடன் உறவை பேணுவதற்கான சிறந்த ஊடகமாக இணையம் திகழ்கின்றது. மாணவர்கள் தங்கள் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கவும் உதவுகின்றது.

அந்த வகையில் இணையத்தின் வசதி இல்லாமல் இன்று எந்தவொரு விடயமும் இடம் பெறாது எனுமளவிற்கு இணையத்தின் பயன்பாடானது காணப்படுகின்றது.

இணையவழிக் கல்வி

இணையப் பயன்பாட்டில் பிரதானமானதொன்றாக இணையவழிக் கல்வி முறை காணப்படுகின்றது. இணையவழிக் கல்வி முறை மூலம் மாணவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்து கொண்டே இலகுவாக கல்வி கற்கின்றனர்.

அந்த வகையில் Zoom தொழில் நுட்பத்தின் மூலமாக இலகுவாக கல்வியானது கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அதாவது நெருக்கடியான சூழ்நிலைகளின் போது அல்லது கல்வி கற்பதற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இந்த இணையவழிக் கல்வியானது பெரிதும் உதவுகின்றது.

உதாரணமாக கொரோனா காலப்பகுதியில் வீட்டில் இருந்து கொண்டே கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டமையானது இணையவழிக் கல்வியின் சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது.

அதுமாத்திரமல்லாது உலகில் எப்பாகங்களிலிருந்தும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு கல்வி நடவடிக்கையை மேற்கொள்ள சிறப்பானதொன்றாகவே இணையவழிக் கல்வி திகழ்கின்றது.

தற்காலத்தில் இணையம்

இன்றைய காலப்பகுதியில் இணையமும் மனிதனும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவர்களாகவே காணப்பட்டு வருகின்றனர். அதாவது சிறு பிள்ளை முதல் பெரியோர் வரை அனைவரும் பயன்படுத்தக் கூடியதாகவே இணையப் பாவனை காணப்படுகின்றது.

இவ்வாறு இணையத்தினால் எண்ணற்ற பயன்கள் காணப்படுகின்ற போதிலும் இன்று தவறான நடவடிக்கைகளுக்கும் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று பல்வேறு குற்றங்கள் இடம் பெறுகின்றமைக்கான காரணங்களுள் ஒன்றாகவும் இணையம் திகழ்கின்றது. இத்தகைய நிலையை மாற்றி நல்விடயங்களுக்காக இணையத்தை பயன்படுத்தல் வேண்டும்.

முடிவுரை

இணையத்தினை சிறந்த தேவைகளுக்காக பயன்படுத்தும் போதே எம்மால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். மாறாக தவறான விடயங்களுக்காக பயன்படுத்துகின்ற போது எமது வாழ்வானது அழிவுக்குட்படுகின்ற நிலையே காணப்படுகின்றது.

You May Also Like:

சமூக வலைத்தளங்கள் கட்டுரை

செயற்கை நுண்ணறிவு கட்டுரை