உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் கட்டுரை

uyirgal idathil anbu vendum katturai

இந்த பதிவில் “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் கட்டுரை” பதிவை காணலாம்.

சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் சண்டை சச்சரவின்றி அமைதியாகவும் பிறரிடம் அன்பு கொள்வது அவசியமாகின்றது. 

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • அன்பின் முக்கியத்துவம்
  • உயிர்களிடத்தில் அன்பு
  • இரக்கமற்ற செயல்கள்
  • அன்பின் சிறப்பு
  • முடிவுரை

முன்னுரை

உயிர்களின் குறைந்தபட்ச கடமை வாழ்தல், அதிக பட்ச கடமை வாழ்வித்தல் ஆகும். உயிரினங்களிலேயே மனிதனுக்கு மட்டும் தான் மற்ற உயிரினங்களையும் வாழ வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சில வேளைகளில் மனிதன் மற்ற உயிரினங்களை வாழ வைத்தலில் இருந்து விலகிச் செல்வதை காண முடிகிறது. நம் வாழ்க்கை என்பது நிலையற்றது.

ஆதலால் வாழும் நாட்களில் உயிர்களிடத்தில் அன்பு உடையவர்களாக வாழ்ந்து அன்பினை பரப்புவது சிறந்தது. இக்கட்டுரையில் உயிர்களிடத்தில் அன்பு கொள்ளுதல் பற்றி நோக்கலாம்.

அன்பின் முக்கியத்துவம்

மனிதன் தனது வாழ்நாளில் மகிழ்வுடன் வாழ அன்பு அவசியமாகும். அது போலவே அனைத்து உயிர்களுக்கும் அன்பு அவசியமாகின்றது. வசதியாக வாழ பணம் தேவை. ஆனால் அந்த வாழ்வை மகிழ்வாகவும் நிறைவாகவும் வாழ அன்பு மட்டுமே போதுமானது.

சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் சண்டை சச்சரவின்றி அமைதியாகவும் பிறரிடம் அன்பு கொள்வது அவசியமாகின்றது. ஆபத்தின் போதும் அவசர நிலையின் போதும் பிறருக்கு உதவிட அன்பு முக்கியம் பெறுகின்றது.

உயிர்களிடத்தில் அன்பு

இவ்வுலகில் வாழும் குறுகிய காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி அன்பை பெற்று பேரானந்தம் அடையலாம். மனிதர்களுடன் மட்டுமின்றி மிருகங்கள், பறவைகளுடனும் அன்பு செலுத்த வேண்டும். அன்பிற்கு கட்டுப்படாத உயிர்கள் எதுவும் இல்லை.

எல்லா மதங்களும் அன்பு வழியில் நின்று எம்மை ஆற்றுகின்றன. மிருகங்கள் மற்றும் பறவைகளிடம் நாம் அன்பு செலுத்தும் போது அவை எம்மிடம் கனிவாக பழகிவிடும்.

ஐந்தறிவு படைத்த மிருகங்களே அன்பு செலுத்தும் போது ஆறறிவு கொண்ட மனிதர்கள் எல்ல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் அல்லவா?

இரக்கமற்ற செயல்கள்

உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களுமே வாழ்வதற்கான உரிமையை கொண்டுள்ளன. அதை தடுப்பதற்கோ அழிப்பதற்கோ மனிதர்களாகிய நமக்கு உரிமை கிடையாது.

உதாரணமாக மிருகங்களை துன்புறுத்தல், வளர்ப்பு மிருகங்களை முறையாக பராமரிக்காமை, ஒழுங்காக உணவளிக்காமை, அதிக காலம் கூண்டுகளில் அடைத்து வைத்தல், விலங்குகள், பறவைகளை வேட்டையாடுதல், போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

அன்பின் சிறப்பு

அன்பினால் சாதிக்க முடியாதது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என்றால் அது மிகையாகாது. உயிர்களிடத்து நாம் அன்பு செலுத்துகின்ற போது அவை ஆபத்து வேளைகளில் தமது உயிரை கூட நமக்கு கொடுக்க தயங்காதவை.

எஜமானியை காக்க தனது உயிரைக் கொடுக்கும் செல்லப்பிராணிகள் தொடர்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில் தற்போது அடிக்கடி காணலாம். மனிதர், மிருகம் என்ற வேறுபாடுகளையும் கடந்து நேசத்தையும் இரக்கத்தையும் உண்டு பண்ணக் கூடிய சக்தி அன்பிற்கு உண்டு.

முடிவுரை

இவ்வுலகில் அன்பு அள்ள அள்ள குறையாதது. பிறருக்கு கொடுக்க கொடுக்க மேலும் வளரும், பெருகும். நமக்கு நன்மையையும் மகிழ்வையும் கொண்டு வரும். சாந்தியையும் சமாதானத்தையும் தரும்.

எனவே இத்தகைய அன்பினை அனைத்து உயிர்களிடத்திலும் இயற்கையிடமும் செலுத்தி மகிழ்வான வாழ்வை வாழ்ந்து அன்பு நிறைந்த அமைதியான உலகை உருவாக்குவோம்.

You May Also Like :
பொறுமை பற்றிய கட்டுரை
உலக அகதிகள் தினம்