உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை

உறவுகளின் முக்கியத்துவம்

இந்த பதிவில் “உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை” பதிவை காணலாம்.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையான வாழ்க்கை காலத்தில் உறவுகளின் துணையுடனேயே வாழ முடியும்.

உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை

உறவுகளின் முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உறவு முறை
  • உறவுகளின் முக்கியத்துவம்
  • உறவுகளை பேணுதல்
  • நட்புறவு
  • முடிவுரை

முன்னுரை

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் பிறப்பிலேயே வழங்கப்படுகின்ற செல்வமாக உறவுகள் காணப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களுக்கு இடையேயான இணைப்பை உறவு எனலாம்.

தனி மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்குபடுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் உறவு முறைகள் ஆகும்.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையான வாழ்க்கை காலத்தில் உறவுகளின் துணையுடனேயே வாழ முடியும். இக்கட்டுரையில் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி நோக்கலாம்.

உறவு முறை

உறவு முறைகளை பெரும்பாலும் மூன்று பிரிவுகளினுள் வகைப்படுத்திக் கொள்ள முடியும். குடும்ப உறவுகள், சட்ட உறவுகள், நட்புறவுகள் என்பன அவையாகும்.

பெற்றோர் பிள்ளை உறவு, சகோதர உறவு என்பன குடும்ப உறவுகள் ஆகும். இவை மரபணு தொடர்புடயவையாக காணப்படுபவை.

கணவன், மனைவி உறவு சமூக சட்ட முக்கியத்துவம் உடையது. எனவே இது சட்ட உறவு ஆகின்றது.

நட்புறவானது இரத்த, சட்ட தொடர்பற்ற மனிதர்களிடையே புரிந்துணர்வு, நம்பிக்கை ஒத்துழைப்பு, நேசம் போன்ற பண்புகளால் பிணைக்கப்பட்ட உறவாகும்.

உறவுகளின் முக்கியத்துவம்

நல்ல உறவுகள் நமது நல வாழ்வை தாங்கிப் பிடிக்கும் தூண்களாகும். சொந்த வாழ்வில் ஏற்படக் கூடிய சுக துக்கங்களின் போது எம்மை தாங்கிப் பிடித்து தேற்றவும் எம்மோடு சேர்ந்து கொண்டாடவும் எமது உறவுகளால் மாத்திரமே முடியும்.

உறவுகளே சந்ததிகளுக்கு இடையிலான பாரம்பரியம் மரபுகளை கடத்தும் பாலமாக உள்ளன. உறவுகள் தான் ஒவ்வொரு மனிதனையும் சமூகமயப்படுத்தும் காரணிகளாகவும் உள்ளன.

சமூக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் உறவுகள் மூலமாகவே நாம் கற்றுக் கொள்கின்றோம்.

உறவுகளை பேணுதல்

மனித உறவுகள் விலைமதிப்பற்றவை எனவே அவற்றை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.

மன்னிப்பு என்பது மிக பெரிய மனித பண்பு. பிறர் செய்த தவறுகளை மன்னிக்காத பட்சத்தில் அவருடனான உறவு துண்டிக்கப்படக்கூடும்.

உறவுகளை மரியாதை செய்தலும் உறவுகளுக்காக விட்டுக் கொடுத்து தியாகம் செய்தலும் மற்றும் உறவுகள் மட்டிலான எமக்குரிய கடமைகளை சரிவர செய்தலும் நாம் கொண்டுள்ள உறவுகளை சீராக பேணுவதற்கு உதவியாக இருக்கின்றன.

நட்புறவு

நட்பு, தோழமை, சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி புரிந்து கொள்ளுதலையும் அனுசரித்தலையுமே அடிப்படையாக கொண்டது.

நண்பர்கள் தங்களது விருப்பு வெறுப்புக்களை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வார்கள்.

நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

முடிவுரை

தொட்டில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் பயணிக்கும் வாழ்க்கை பயணத்தில் எமக்கு ஏற்படக்கூடிய இன்பம், துன்பம், பசி, தாகம், காதல், இரக்கம், என அளவற்ற உணர்வுகளை நிறைவேற்றிக் கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் உறவுகளே எம்முடன் பயணிக்கின்றன.

அனைத்தும் இருந்தாலும் உறவுகளற்ற அனாதையாக வாழ்தல் என்பது சகிக்க முடியாத ஒரு வாழ்க்கையாகும்.

எனவே எம்மோடு உள்ள உறவுகளை மதித்து அவர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களாக வாழ்வோம்.

You May Also Like :
சமுதாய வளர்ச்சி கட்டுரை
சுற்றுலா வளர்ச்சி கட்டுரை