உலக அமைதி தினம்

சர்வதேச அமைதி தினம்

உலக அமைதி தினம்செப்டம்பர் 21
International Day of PeaceSeptember 21

அமைதி நிலவும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். உலக அமைதி என்பது வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயமாகும். ஆனால் வன்முறை மற்றும் இரத்தம் தோய்ந்த காலங்களிலே இன்றும் பல நாடுகள் கடந்து கொண்டிருக்கின்றன.

எனவே உலகளாவிய ரீதியில் அமைதி ஏற்படுவது இன்றியமையாததாக உள்ளது. உலகில் அமைதியை நிலைநாட்ட பாடுபடுபவர்களைப் பாராட்டும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் ஐ.நா அமைதிப் பரிசு போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.

உலகெங்கும் போர், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் மக்களின் நின்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் உலக அமைதி என்பதுதான் ஒவ்வொரு மனிதருக்குமான உன்னத தேவையாகும்.

உலக அமைதி தினம்

சர்வதேச அமைதிக்கான தினம் உருவாக்கப்பட்டதன் வரலாறு

1981 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை செப்டம்பர் மூன்றாவது செவ்வாய்க்கிழமையை சர்வதேச அமைதி தினமாக அறிவித்தது. இந்த நாள் பொதுச் சபையின் ஆண்டு அமர்வுகளின் தொடக்க நாளாக இருந்தது.

இந்த அனுசரிப்பு தினத்தை நிறுவிய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, 2001 இல் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று உலக அமைதியை அனுஷ்டிக்கும் தினமாக மாற்றப்பட்டது.

அதனடிப்படையில் உலகளாவிய ரீதியில் சர்வதேச அமைதி தினம் (அல்லது உலக அமைதி தினம்) ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது.

உலக அமைதி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்

உலகெங்கிலும் உள்ள அமைதியின் இலட்சியங்களை வலுப்படுத்துவதே இந்த நாளின் பிரதான நோக்கம் ஆகும்.

மேலும் இந்த நாள் தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் அகிம்சை மற்றும் போர் நிறுத்தத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும்

உலகில் வன்முறையைத் தவிர்த்து அமைதி நிலவ ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

உலக அமைதி தினத்தின் முக்கியத்துவம்

உலகளாவிய ரீதியில் அனைத்து மக்களிடையேயும் அமைதியை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் பேணுவது என்பதை நினைவுபடுத்தும் நாளாக உள்ளது. உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நாள் நிலையான உலகப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது. இது ஒரு அமைதியான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதற்கான உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ஆகும்.

நல்லிணக்கத்துடன் வாழ உலகளாவிய அமைதியின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க மக்களுக்கும், நாடுகளுக்கும் நினைவூட்டும் நாள் உலக அமைதிக்கான நாளாகும்.

வரலாறு முழுவதும், பெரும்பாலான சமூகங்கள் பெரும்பாலான நேரங்களில் நிம்மதியாக வாழ்ந்துள்ளன. ஆனால் இன்று சில நாடுகள் மற்றைய நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்குப் பதிலாக பகைமை உணர்வுடன் செயற்படுகின்றன.

இரு நாடுகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால் அது குறித்த நாடுகளை மட்டுமல்லாது ஏனைய உலக நாடுகளின் அமைதியையும் குலைத்து ஆபத்தை விளைவிக்கின்றது.

உலக அமைதிக்காக, அனைத்து நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடவும், உலகளாவிய நல்லிணக்கத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

எனவே உலகை மிகவும் அமைதியான இடமாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக என்ன செய்ய முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். போரட்ட உலகை விட அமைதியான உலகமே சிறந்தது என்பதை உணர்ந்து உலக அமைதிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும்.

எல்லா மனிதர்களும் எந்த நெருக்கடிகளுமற்ற அமைதியான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்துடனும், ஒற்றுமையாக இணைந்து செல்லும் விருப்புடனும், சகோதர சகோதரிகளாகத் தோளோடு தோள் நின்று அமைதிக்கான முயற்சியைத் தொடர்ந்தால் அனைத்துத் தேசங்களும் இனங்களும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழமுடியும்.

You May Also Like :
கருணை பற்றிய கட்டுரை
மனிதநேயம் பற்றிய கட்டுரை