உலக உடன்பிறப்புகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது
உலக உடன்பிறப்புகள் தினம் | ஏப்ரல் 10 |
Siblings Day | April 10 |
வாழ்வின் அண்ணன் – தங்கை உறவு, அண்ணன் – தம்பி உறவு, அக்கா – தம்பி உறவு என்று இத்தனை உறவுகளாய் நமக்கு துணையாய் நிற்பது உடன்பிறப்புகளே.
ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒன்றாக வளர்ந்து இறுதி வரை நமக்காகத் தோள் கொடுப்பது உடன்பிறப்புகளே. உடன்பிறப்புகளுக்கு இடையிலான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தமக்குள் எவ்வளவு சண்டை போட்டுக் கொண்டாலும் மற்றவர்கள் முன்னிலையில் விட்டுக்கொடுக்காது பாசத்தைக் காட்டுவார்கள்.
உடன்பிறப்புக்கள் தினம் உருவாக்கப்பட்டதன் வரலாறு
உடன்பிறப்புகள் தின அறக்கட்டளையின் நிறுவனரான நியூ யார்க்கர் கிளாடியா எவர்ட் (Claudia Evart) என்பவர் சிறு வயதிலேயே தனது சகோதரர் ஆலன் (Alan) மற்றும் சகோதரி லிசெட்டை (Lisette) துரதிஷ்டவசமாக இழக்க நேர்ந்தது.
சகோதரர்கள் மீதிருந்த அளவுகடந்த பாசத்தால் இறந்த தனது சகோதரன் மற்றும் சகோதரியின் நினைவை நினைவுகூற விரும்பினார். எவர்ட்டின் மறைந்த சகோதரி லிசெட்டின் பிறந்தநாளான ஏப்ரல் 10ம் தேதியை உடன்பிறப்புகளின் முக்கியத்துவத்தை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் எனத் தேர்ந்தெடுத்தார்.
இதனடிப்படையில் 1995ல் நிறுவப்பட்ட உடன்பிறப்புக்கள் தின அறக்கட்டளை நிறுவனத்தின் முயற்சியில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ம் திகதி உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நாள் உலகளவில் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் கூட இந்தியா உட்பட பல நாடுகளில் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதுபோல் இந்நாளில் அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படுகின்றது. எனினும் மத்திய கூட்டரசால் அங்கீகரிக்கப்படவில்லை.
தற்போது, உடன்பிறப்புக்கள் தின அறக்கட்டளை அமெரிக்காவில் உடன்பிறப்புகள் தினத்தை ஒரு கூட்டாட்சி விடுமுறையாக மாற்றவும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் சர்வதேச உடன்பிறப்புகள் தினத்தை நிறுவவும் முயற்சித்து வருகின்றது.
உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
அன்னையர் தினம் மற்றும் தந்தையர் தினத்தைப் போலவே, உடன்பிறப்புகளின் அன்பையும், உறவையும் அங்கீகரிப்பதற்காக உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நம் வாழ்வில் நாம் எந்த சூழ்நிலையை எதிர்கொண்டாலும் உடன்பிறப்புக்கள் எப்போதும் நமக்கு துணை நிற்பார்கள்.
நம் வாழ்வில் நமக்காக அவர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியையும் நாம் மதிக்கிறோம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பந்தத்தை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
உடன்பிறப்புக்கள் தினத்தின் முக்கியத்துவம்
உடன்பிறப்புகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்த இந்நாள் முக்கியம் பெறுகின்றது. உடன்பிறந்தவர்களுடன் நம் நாளை மகிழ்விக்க இந்நாள் ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.
நம் வாழ்வின் ஒரு பகுதியாக உடன்பிறப்புகளை மதிக்க வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஒருவர் மற்றவரின் வாழ்வில் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்நாள் சிறப்பு வாய்ந்தது.
உலகில் தாயின் வரங்களில் தவமாய்க் கிடைப்பது நம் உடன்பிறப்புக்களே. உடன்பிறப்புக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும். எக்காரணமாக இருந்தாலும் உடன்பிறப்புக்கள் பிரியாமல் ஒருவருக்கொருவர் துணையாக வாழ்தல் வேண்டும்.
இந்நாளில் உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதன் மூலமும், ஒருவருக்கொருவர் விருப்பமான செயல்களைச் செய்வதன் மூலமும் தமது அளவு கடந்த அன்பினை உடன்பிறப்புகளுக்கு வெளிப்படுத்த முடியும்.
You May Also Like : |
---|
உலக காடுகள் தினம் |
உலக சிட்டுக்குருவிகள் தினம் |