உலக ஓசோன் தினம் | செப்டம்பர் 16 |
International Day for the Preservation of the Ozone Layer | September 16 |
சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்கள் பூமியின் நிலப்பரப்பை அடையாமல் காக்கும் இயற்கையாக அமைந்த பாதுகாப்பு கட்டமைப்பே ஓசோன் படலமாகும்.
1957 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்டன் டாப்சன் ஓசோன் படலத்தைக் கண்டுபிடித்தார்.
அண்டாட்டிக்காப் பகுதியில் முதல் ஓசோன் துளை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படும் போது பல தீங்குகள் ஏற்படுகின்றன.
- பூமியிலுள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன.
- உயிரினங்களின் நோயெதிர்ப்பு சக்தி பாதிப்படைகின்றன.
- மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்புரை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
- புவி வெப்பமடைவதற்கும் வழிவகுக்கின்றது.
குறிப்பாக ஈரான், ஐப்பான், வட ஆபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அதிகளவான வெப்பம் பதிவாகின்றது.
சர்வதேச ஓசோன் தினம் வரலாறு
22 மார்ச் 1985 அன்று, ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான வியன்னா ஒப்பந்தம் 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது.
செப்டம்பர் 16 1987 அன்று, ஓசோன் அடுக்கை பாதிப்பிற்கு உள்ளாக்கும் பொருட்களை கண்டறிந்து ‘மொன்றியல்” உடன்படிக்கை உருவாக்கி கையெழுத்திடப்பட்டது. இந்த தேதியை நினைவுகூரும் வகையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1994ல் ஓசோன் அடுக்கு பாதுகாப்புக்கான சர்வதேச தினமாக செப்டம்பர் 16ம் திகதியை அறிவித்தது. இந்த நாள் முதன்முறையாக செப்டம்பர் 16, 1995 அன்று கொண்டாடப்பட்டது.
மொன்றியல் உடன்படிக்கை அடிப்படையில் ஓசோன் அடுக்கு சிதைவுக்கு காரணமான பொருட்களின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க திட்டமிடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். மொன்றியல் உடன்படிக்கை ஜனவரி 1, 1989ல் செயல்படுத்தப்பட்டது.
உலக ஓசோன் தினம் நோக்கம்
உலக ஓசோன் பாதுகாப்புத் தினமானது பூமியைப் பாதிப்படையச் செய்யும் முக்கியமான பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையிலும் ஓசோன் படலத்தின் சிதைவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைப் பாதுகாக்க சாத்தியமான தீர்வுகளைக் கண்டறியவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக ஓசோன் தினம் முக்கியத்துவம்
இந்த நாளில், உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் ஓசோன் படலம் குறித்து பேச்சுக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துரைப்பதில் உலக ஓசோன் தினம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
மேலும், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் மற்றும் அதைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றது.
உலக ஓசோன் தினத்தில் ஓசோன் படலத்தின் நன்மைகள் குறித்து கல்வியாளர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். எதிர்கால சந்ததியினர் சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலில் வாழ உயிர்ப் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இயற்கையை மாசுபடுத்துவது மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு ஆபத்தானது. ஓசோன் சிதைவு தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சியை மாற்றுவதன் மூலமும் உணவுச் சங்கிலியை சீர்குலைப்பதன் மூலமும் சுற்றுச்சூழலை மோசமாகப் பாதிக்கிறது.
ஓசோன் அடுக்கு சிதைவுக்கு காரணமான பொருட்களின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஓசோன் அடுக்கைப் பாதுகாக்க முடியும்.
வளிமண்டலத்திலிருந்து நன்மை செய்யும் ஓசோன் படலத்தின் அடர்த்தி குறையாமல் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் உண்டு என்பதனை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
You May Also Like : |
---|
உலக மக்கள் தொகை தினம் |
சர்வதேச சதுரங்க தினம் |