உலக சிட்டுக்குருவிகள் கொண்டாடப்படும் தினம்
உலக சிட்டுக்குருவிகள் தினம் | மார்ச் 20 |
World House Sparrow Day | March 20 |
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது, உரிமையானது. அதனாலேயே “ எல்லா உயிரிகளும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும் “ என்றார் அருட்பிரகாச வள்ளலார்.
அவ்வாறு மனிதனோடு மனிதனாகப் பின்னிப் பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழும் ஒரு பறவை இனமே சிட்டுக்குருவி. இது மனித இனத்தோடு அடைக்கலம் ஆவதால் இவை “அடைக்கலான் குருவிகள்” என்றும் அழைக்கப்படுகின்றன.
நோக்கம்
சிட்டுக்குருவி அழிவதைத் தடுத்து நிறுத்தி இந்த பறவையினத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.
சிட்டுக்குருவிகள் வாழிடம்
பெரும்பாலும் சிட்டுக்குருவியானது வீடுகளிலுள்ள மாடம், பரண், ஓடுகளின் இடுக்குகளிலுள்ள இடைவெளிகளில் அதிகமாக கூடுகட்டி வசிக்கும்.
மனிதர்களுக்கும் சிட்டுக்குருவிக்குமான நெருக்கம்
சிட்டுக்குருவியானது வீடுகளில் கூடுகட்டினால் அக்குடும்பத்தின் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்னும் அசாத்திய நம்பிக்கையானது இன்றளவும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் வேரூன்றி நிற்கின்றன. அதனாலேயே வீடுகளில் கூடு கட்டினால் அவற்றை ஒரு போதும் கலைக்கமாட்டார்கள்.
சிட்டுக்குருவிகளின் இன்றைய நிலை
குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் சிட்டுக்குருவி இனங்களில் 60% அழிந்து விட்டதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் மேற்கொள்ளும் இயற்கைக்கு முரணான சுற்றுச்சூழல் நடவடிக்கையே சிட்டுக்குருவியின் அழிவுப்பாதைக்கு பெரும் அடித்தளமிட்டுள்ளன.
குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் நகர்ப்புறங்களிலும் மாநகரங்களிலும் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புக்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டதால் வெளிக்காற்று வீட்டிற்குள் வரமுடியாதபடி குளிர்சாதன வசதிகளை பயன்படுத்துகிறார்கள். அதனால் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதியில்லை. இதனால் சிட்டுக்குருவியானது தனது இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றது.
கைத்தொலைபேசிகளின் உபயோகம் அதிகரிக்க தொடங்கிய பின்னர் சிட்டுக்குருவிகளின் அழிவும் தொடங்கி விட்டது. செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்ச கதிர்வீச்சானது குருவியின் கருவையே சிதைக்குமளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் சிட்டுக்குருவி இனமானது அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றது.
பாதுகாக்கும் வழிமுறைகள்
பிற உயிரினங்கள் பாதிக்கப்படாத வகையில் சுற்றுப்புற சூழலை அமைத்துக் கொள்ள மனித இனம் முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து விரிந்த இந்த உலகம் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை உணர முடியும்.
மனிதனோடு மனிதனாக பின்னிப் பிணைந்து வாழும் சிட்டுக்குருவி இனத்தை அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுக்க உலக சிட்டுக்குருவி நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
You May Also Like : |
---|
உலக வெண்புள்ளி தினம் |
உலக இசை தினம் |