இந்த பதிவில் “எம்மதமும் சம்மதம் கட்டுரை” பதிவை காணலாம்.
மதங்கள் எனப்படுபவை மனிதனை தவறான வழிகளில் செல்ல விடாமல் நல்வழி படுத்துபவையே ஆகும்.
எம்மதமும் சம்மதம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மதம் எனும் பிரிவினை
- நல்லறம்
- மனிதநேயம்
- மாற்றத்துக்கான நேரம்
- முடிவுரை
முன்னுரை
பொதுவாகவே நமது சமுதாயத்தில் உள்ள மக்களை பிரித்து வைக்கின்ற ஒரு பிற்போக்கான கொள்கைகளாக மதங்களையும் சமயங்களையும் தவறாக பின்பற்றுகின்ற ஒரு சில மக்கள் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது.
பிற மதங்களையும் பிறமனிதர்களையும் மதிக்க தெரியாத இந்த இயல்பினால் எமது சமுதாயம் வளர்ச்சியற்றதாக இருந்து வருகின்றது.
“தன்னுயிர் போல மன்னுயிரையும் நேசி” என்ற திருமூலரின் வாக்கிற்கிணங்க மத நல்லிணக்கத்தின் அவசியம் பற்றி நாம் இந்த கட்டுரையில் காண்போம்.
மதம் எனும் பிரிவினை
மதங்கள் எனப்படுபவை மனிதனை தவறான வழிகளில் செல்ல விடாமல் நல்வழி படுத்துபவையே ஆகும். அவை மனிதனுக்கு பல நல்ல விழுமியங்களையும் வாழ்வியலையும் கற்று தருவனவாக இருக்கின்றன.
ஆனால் அவற்றை சரியாக கடைப்பிடிக்காத ஒரு சிலர் மதங்களின் வாயிலாக தமது சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக மக்களிடையே பிளவினை ஏற்படுத்தி உயர்வு தாழ்வினை ஏற்படுத்தி வன்முறைகளையும் வேற்றுமைகளையும் ஏற்படுத்தி வருவது எமது உலகில் அவ்வப்போது அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நல்லறம்
எவ்வாறாயினும் மதங்களுடைய போதனை பிரிவினை அல்ல. எடுத்துக்காட்டாக இந்து மதம் பிற உயிர்களிடத்தும் மனிதர்களிடத்தும் அன்பு காட்டுவதே உயர்ந்த அறமாக உள்ளது என போதிக்கின்றது.
அவ்வாறே இயேசு கிறிஸ்த்து அன்பையும் இரக்கத்தையும் தான் போதித்தார் தியாகம் எனும் உயரிய அறத்தை உலகுக்கு போதித்தார்.
அவ்வாறே நபிகள் நாயகமும் கௌதம புத்தரும் உலக மக்களுக்கு உயரிய அற சிந்தனைகளைளே போதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே எம்மதத்தை நாம் பின்பற்றினாலும் மனிதநேயம் உடையவர்களாக இருப்பதுவே போதுமானது.
மனிதநேயம்
அண்மையில் பல மதம் சார்ந்த கலவரங்களையும் வன்முறைகளையும் பத்திரிகைகள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் நாம் அறிய முடிகின்றது.
இவற்றுக்கெல்லாம் தோற்றுவாயாக இருப்பது எது? மனிதநேயமற்ற சிந்தனை உடைய மதவெறியர்கள் தான் பிறமதங்களையும் அவர்களது கொள்கைகளையும் இழிவுபடுத்தும் சில நீசர்கள் இவ்வகையான பிரச்னைகளை தோற்றுவித்து இந்த சமூகத்தின் ஒற்றுமையினை சீர்குலைக்க முனைகின்றனர்.
ஆனால் மதங்கள் ஒருபோதும் அவ்வாறு போதிக்கவில்லை என்பது தெட்ட தெளிவான உண்மையாகும்.
மாற்றத்துக்கான நேரம்
இன்று அதிகளவான புதிய தலைமுறையினர் இந்த பழமைவாத மதம், இனம் போன்ற குறுகிய வட்டங்களை கடந்த நாம் அனைவரும் மனிதர்கள் என்ற மகத்தான கொள்கையின் படி மாறதுவங்கியுள்ளனர்.
இதுவே மாற்றத்துக்கான நேரம் பிரிவினைகளில் இருந்தும் முட்டாள் தனங்களில் இருந்தும் மனிதர்கள் படிப்படியாக நாகரீகம் அடைய துவங்கியுள்ளனர்.
முன்பொருகாலத்தில் கறுப்பின வெள்ளையின வேறுபாடுகள் மாறி இன்று அனைவரும் ஒன்றுபோல வாழ்வது சிறப்பான விடயமாகும்.
முடிவுரை
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கணியன்பூங்குன்றனார் உடைய சங்ககால பாடலிலேயே உலகமக்களின் ஒற்றுமையினையும் சமத்துவத்தினையும் அவர் அழகாக எடுத்து கூறி சென்றிருக்கின்றார்.
அவற்றுக்கு அமைவாக நாமும் பிற மதங்களையும் மனிதர்களையம் மதிக்க கூடிய நல்ல மனிதர்களாக வாழ்வோம். இதுவே நமது வாழ்வின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும் என்பதுவே மதங்களின் கருத்துக்களும் ஆகும்.
You May Also Like : |
---|
மதம் பற்றிய கட்டுரை |
சரஸ்வதி பூஜை பற்றிய கட்டுரை |