பாரதியாரின் கவிதைகளுள் ஒன்றே “காக்கை குருவி எங்கள் ஜாதி” கவிதையாகும். மகாகவி பாரதி சாதி மத பேதமின்றி அனைத்து பேதங்களையும் கடந்து அனைவரையும் நேசித்த மாமனிதராவார்.
காக்கை குருவி எங்கள் ஜாதி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- இந்திய நாட்டின் ஒருமைப்பாடு
- பறவைகளின் சிறப்பு வெளிப்படும் விதம்
- சகோதர சமத்துவம் பேணப்படல்
- பாரதியின் கவிதையில் விடுதலை உணர்வு
- முடிவுரை
முன்னுரை
பாரதியார் காக்கையை சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் உருவமாக கருதியே காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற கவிதையை படைத்துள்ளார். தன் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராகவும் அனைவராலும் இன்றும் போற்றப்படக்கூடியவரே எங்கள் பாரதியராவார்.
இந்திய நாட்டின் ஒருமைப்பாடு
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற கவி வரியானது ஒருமைப்பாட்டு உணர்வினையே எடுத்தியம்புகின்றது.
காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குத் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
என்ற வரியினூடாக பாரதியார் இந்திய நாட்டினர் அனைவரையும் ஒருமைப்பாட்டு உணர்வோடும் ஒன்றிய சிந்தனையோடும் வாழ வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.
பறவைகளின் சிறப்பு வெளிப்படும் விதம்
பாரதி உயிர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவராவார். பறவைகளையும் அதனது செயல்களையும் இதயத்தின் ஆழ் நிலையை இணைக்கும் உருவகங்களாக கண்டதால் அவற்றோடு உறவாடக் கூடிய வகையிலேயே கவிதைகளை படைத்துள்ளார்.
காக்கைகள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் மற்றும் உணவு கிடைக்கும் போது சத்தமிட்டு பிற காக்கைகளையும் அழைத்து கூடி உண்டு மகிழும். இது போன்றே குருவிகளும் கூட்டமாக ஒற்றுமையாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழும்.
பாரதியார் இங்கே காக்கை குருவியை ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக கூறுகின்றார்.
சகோதர சமத்துவம் பேணப்படல்
மகாகவி பாரதியின் பறவைக் காதலானது சகோதர சமத்துவத்தையே சுட்டி நிற்கின்றது.
அதாவது எம்மில் காணப்படும் ஜாதி பேதங்களை கடந்து நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற உணர்வுடன் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதையே பாரதியார் வெளிப்படுத்துகின்றார்.
நாம் வாழும் வாழ்க்கையை காக்கை குருவிகளை போல பேதங்கள் இன்றி வாழ வேண்டும் என்பதை பாரதியார் கூறியுள்ளார்.
பாரதியின் கவிதையில் விடுதலை உணர்வு
பாரதியார் தன்னுடைய கவி வரிகளினூடாக விடுதலை உணர்வை மக்கள் மனதில் ஏற்படுத்தியவராவார். நாட்டின் ஒற்றுமை மற்றும் விடுதலையின் தேவை பற்றியே பாரதி அதிகம் பாடினார்.
தனது பத்திரிகை, இலக்கியம், பாட்டு என அனைத்திலும் விடுதலை உணர்வை வெளிப்படுத்தியதோடு இன்று தேசிய கவியாகவும் அனைவராலும் போற்றப்பட்டு வருகின்றார்.
முடிவுரை
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற கவிதையினூடாக ஜாதியினை களைந்து அனைவரும் ஒரு தாய் மக்களே என்பதனை உணர்த்தியவர் பாரதியார் ஆவார்.
ஒற்றுமைக்காக பாடுபட்டு சமத்துவத்தை நிலைநாட்ட போராடிய பாரதியாரின் சமூக பணிகள் என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.
You May Also Like: